உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பில் பொதுநலவாயத்தின் ஆலோசனையை பெறவுள்ளதாக கூறுவதன் மூலம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாட்டின் நீதிமன்றத் துறையை அச்சுறுத்த முயற்சிக்கின்றார் என்று சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் எம்.பி. யுமான சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார்.
கெலும் மெக்ரே தயாரித்த காணொளிகளை பார்த்து வெட்கமடைவதாக கூறியவர்கள் இன்று இராணுவ வீரர் நினைவு தின விழாவில் எந்த முகத்தை வைத்துக்கொண்டு கலந்துகொண்டனர் என்று தெரியவில்லை. ஆனால் தற்போதாவது இவ்வாறான கட்டத்துக்கு வந்தமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,
கொழும்புக்கு ஒரு இலட்சம் மக்களை வரவழைப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார். அவரால் 5000 பேரை கொண்டுவர முடியுமா என்று கேட்கின்றோம். மஹிந்த ராஜபக்ஷ விஹாரைகளுக்கு செல்கின்றார். அங்கு அதிகமான மக்கள் வருகின்றனர். அவர்கள் பஸ்களில் வரவழைக்கப்படுவதில்லை. அந்தளவுக்கு கூட பிரதமரினால் மக்களை வரவழைக்க முடியாது.
உயர்நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு ஒன்றை பிரதமர் விமர்சித்துள்ளார். அது மட்டுமல்ல உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பில் பொதுநலவாயத்தின் ஆலோசனையை பெறவுள்ளதாக பிரதமர் கூறியுள்ளார். நீதிமன்றம் சுயாதீனமாக உள்ளதாக ஜனாதிபதி தெரிவிக்கின்றபோது நீதிமன்றத் துறையை அச்சுறுத்தும் வகையில் பிரதமர் கருத்து வெளியிட்டுள்ளார். இதன்மூலம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாட்டின் நீதிமன்றத் துறையை அச்சுறுத்த முயற்சிக்கின்றார்.
இதேவேளை யுத்தகாலத்தில் மனிதாபிமான செயற்பாட்டை விமர்சித்தவர்கள் மாத்தறையில் இம்முறை இராணுவ வீரர் தின விழாவில் கலந்துகொண்டுள்ளனர். தற்போதாவது இந்த நிலைக்கு வந்தமை மகிழ்ச்சியளிக்கின்றது. ஆனால் கெலும் மெக்ரே தயாரித்த காணொளிகளை பார்த்து வெட்கமடைவதாக கூறியவர்கள் இன்று இராணுவ வீரர் நினைவு தின விழாவில் எந்த முகத்தை வைத்துக்கொண்டு கலந்துகொண்டனர் என்று தெரியவில்லை.
மேலும் இராணுவ வீரர் தினத்தை கொண்டாடும் சூழலை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுமே உருவாக்கினர் என்பதனை யாரும் மறந்துவிடக்கூடாது. இது பிரிவினைக்கு எதிரான தினம் என்று ஒரு அமைச்சர் தெரிவித்திருந்தார். ஆனால் இது பயங்கரவாதத்தை தோற்கடித்த நாளாகும். இதேவேளை தமிழ் மக்களுக்கும் இறந்துபோன தமது உறவுகளை நினைவுகூருவதற்கு உரிமை உள்ளது என்பதனை ஏற்றுக்கொள்கின்றோம். அதனை தடுக்க முடியாது. புலிகளை நினைவுகூருவதையே நாங்கள் எதிர்க்கின்றோம்.
பாராளுமன்றம் காலாவதியாகிவிட்டதாக கூறுகின்றனர். அப்படியானால் பாராளுமன்றமும் அரசாங்கமும் காலாவதியாகிவிட்ட பின்னர் ஏன் அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றவேண்டும்? என்று கேட்கின்றோம். பாராளுமன்றம் காலாவதியாகிவிட்டதாக மக்கள் விடுதலை முன்னணி கூறுகின்றது. அதற்கு பதிலை அதன் முன்னாள் தலைவர் சோமவங்ச அமரசிங்கவே தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி அரசியல்வாதிகளை சிறைகளில் அடைத்துவிட்டு எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளவே ஐக்கிய தேசிய கட்சி முயற்சிக்கின்றது. அடுத்த தேர்தலில் எமது அரசாங்கத்தை உருவாக்குவோம் என்றார்.