அமெரிக்காவில் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள டொனால்டு டிரம்ப் அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
நான் அதிபரானால் அமெரிக்காவில் நடக்கும் தீவிரவாத செயல்களை கட்டுப்படுத்துவேன். வெளிநாட்டினருக்கு விசா வழங்குவது குடியுரிமை வழங்குவது போன்றவற்றில் கட்டுப்பாடுகளை கொண்டு வருவேன். வெளிநாட்டு வர்த்தகத்தில் மாற்றங்கள் ஏற்படுத்துவேன். அண்டை நாடான மெக்சிகோ இடையே சுவர் எழுப்பப்படும் என்று கூறி பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அவர், தேர்தலில் வெற்றி பெற்று அதிபர் பொறுப்பை ஏற்றிருப்பதை அடுத்து உடனடியாக அவர் தனது அறிவிப்புகளை செயல்படுத்த தொடங்கி இருக்கிறார்.
நேற்று 2 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். மெக்சிகோ எல்லையில் உடனடியாக சுவர் கட்ட வேண்டும் என்று ஒரு உத்தரவில் கூறினார். அதே போல் சட்டவிரோத குடியேற்றங்களை தடுக்கும் படியும் உத்தரவிட்டார்.
அமெரிக்காவில் நடக்கும் தீவிரவாத செயல்களுக்கு சில நாட்டு மக்களை உள்ளே அனுமதிப்பதுதான் காரணம் என டொனால்டு டிரம்ப் கருதுகிறார்.
எனவே, அந்த நாட்டினருக்கு விசா வழங்குவதை நிறுத்தி வைக்கும்படி அவர் கூறியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. எந்த நாடுகள் என்பதை பற்றி அவர் குறிப்பிடவில்லை. ஆனாலும் மத்திய கிழக்கு நாடுகள், வடஅமெரிக்க நாடுகளை சேர்ந்தவர்களை குறிப்பிட்டு இந்த உத்தரவை அவர் பிறப்பித்து இருப்பதாக கூறப்படுகிறது.
இது சம்பந்தமாக வெளி விவகாரத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, சிரியா, சூடான், சோமாலியா, ஈராக், ஈரான், லிபியா, ஏமன் ஆகிய 7 முஸ்லிம் நாடுகளை சேர்ந்தவர்களுக்கு இந்த தடை விதிக்கப்படலாம் என கூறினார்.
அமெரிக்காவில் உள்ள சிக்காக்கோ நகரில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருகின்றன.
இதுபற்றி தனது டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ள டொனால்டு டிரம்ப், இந்த ஆண்டில் இதுவரை சிக்காக்கோவில் 228 துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்துள்ளன. 42 பேர் உயிர் இழந்து இருக்கிறார்கள். சிக்காக்கோ நகரம் இதுபோன்ற பாதிப்புகளை சந்திக்க இடம் அளிக்க மாட்டோம். கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி உள்ளார்.
அமெரிக்கா தனது பக்கத்து நாடுகளான கனடா- மெக்சிகோ இடையே அதிக அளவில் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதிலும் பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வர டொனால்டு டிரம்ப் முடிவு செய்துள்ளார். இது இரு நாடுகளையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
இது சம்பந்தமாக மெக்சிகோ- கனடா நாட்டு பிரதிநிதிகள் டொனால்டு டிரம்ப்புடன் பேச உள்ளனர்.
மெக்சிகோ எல்லையில் சுவர் கட்ட உத்தரவிட்டதற்கு மெக்சிகோ நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. டொனால்டு டிரம்ப்பை கண்டித்து பல்வேறு நகரங்களிலும் போராட்டம் நடந்து வருகிறது.
இந்த சுவர் கட்டுவதற்கான செலவின் ஒரு பகுதியை மெக்சிகோ வழங்க வேண்டும் என்று டொனால்டு டிரம்ப் கூறி இருந்தார். ஆனால், அவ்வாறு பணம் வழங்க முடியாது என்று மெக்சிகோ அதிபர் என்ரிகோ கூறி இருக்கிறார்.