ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப்போட்டியில் சகோதரிகளுக்கிடையே மோதல்


ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் இன்று மகளிர் ஒற்றையர் அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் அரையிறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் முன்னணி வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ், சக நாட்டு வீராங்கனை கோகோ வேன்டேவேக் இருவரும் விளையாடினர். இப்போட்டியில் வீனஸ் வில்லியம்ஸ் 6-7 (3-7) 6-2 6-3 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

அதன்பின்னர் நடந்த இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் வீனசின் தங்கையான செரீனா வில்லியம்ஸ், குரோஷியாவின் மிர்ஜானா லூசிக் பரோனியை எதிர்கொண்டார். இதில் செரீனாவின் அனுபவ ஆட்டத்தை, மிர்ஜானா எதிர்கொள்ள முடியாமல் தொடர்ந்து புள்ளிகளை இழந்தார். இறுதியில், 6-2 6-1 என்ற நேர்செட்களில் செரீனா வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.

சாம்பியன் பட்டத்துக்கான இறுதிப் போட்டி சனிக்கிழமை நடைபெறுகிறது. இதில், சகோதரிகளான வீனஸ் (வயது 36), செரீனா (வயது 35) இருவரும் பலப்பரீட்சை நடத்த உள்ளனர். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் அக்காள்-தங்கை இருவரும் நேருக்கு நேர் மோதுவது இது 9-வது முறையாகும்.

மகளிர் ஒற்றையர் பிரிவில் செரீனா வில்லியம்ஸ் இதுவரை 22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களும், வீனஸ் வில்லியம்ஸ் 10 பட்டங்களும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.