உள்ளூராட்சி மன்றங்களுக்கான எல்லை நிர்ணய அறிக்கை தொடர்பிலும் அபிவிருத்தி விசேட ஏற்பாடுகளுக்கான விசேட சட்டமூலம் குறித்தும் ஆராய்வதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று பாராளுமன்றத்தில் கூடவுள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கூடவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அனைத்து கட்சித் தலைவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர். அத்துடன் இதன்போது முக்கிய தீர்மானங்கள் பல எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சுவிட்ஸர்லாந்திற்கு விஜயம் செய்வதற்கு முன்னர் கட்சித் தலைவர்கள் பாராளுமன்றத்தில் கூடி ஆராய்ந்தனர்.
இதன்போது புதிய முறைமையின் பிரகாரம் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என அக்கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் எடுக்கப்பட்டது.
அத்துடன் அண்மையில் எல்லை நிர்ணய அறிக்கை உள்ளூராட்சி மற்றும் மாகாண அமைச்சர் பைசர் முஸ்தபாவிடம் கையளிக்கப்பட்டது. இதன்படி குறித்த அறிக்கை இந்த மாத இறுதிக்குள் வர்த்தமானியில் வெளியிடப்படவுள்ளது. எனினும் இந்த அறிக்கை தொடர்பில் சிறுபான்மை கட்சிகள் தமது எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றன.
இதன்மூலம் சிறுபான்மை இனத்தவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக சிறுபான்மை கட்சிகள் ஒன்று கூடித் தீர்மானம் எடுத்திருந்தன.
இந்நிலையில் இது தொடர்பில் இன்று பாராளுமன்றத்தில் கூடவுள்ள கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பரவலாக ஆராயப்படவுள்ளது.
மேலும் அபிவிருத்தி விசேட ஏற்பாடுகளுக்கான சட்டமூலம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து கடந்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தின்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கட்சித் தலைவர்களை அறிவுறுத்தினார்.
எனினும் இன்றைய கூட்டத்தின் போதும் இதுகுறித்து ஆராயப்படவுள்ளது.