துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக், சம்மாந்துறை.
முரட்டுத் தனமாக துள்ளியோடும் காளையை அடக்கி அதன் கொம்பில்/கழுத்தில் கட்டப்பட்டிருக்கும் பரிசுப் பொருளை எடுத்துக்கொள்ளும் விளையாட்டே ஜல்லிக்கட்டு விளையாட்டாகும்.ஒரு காளையை பல இளைஞ்சர்கள் சேர்ந்தும் அடக்குவார்கள்.ஜல்லிக்கட்டு பல வடிவங்களில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.இது தமிழர்களின் மரபு வழி பாரம்பரிய வீர விளையாட்டுக்களில் ஒன்றாகும்.இதே பாணியில் அமைந்த காளை அடக்கும் போட்டிகள் ஸ்பெயின்,மெக்சிகோ,கனடா,அமேரிக்கா,கோஸ்டாரிக்கா உள்ளிட்ட பல நாடுகளிலும் இடம்பெற்று வருகின்றன.இவைகள் தமிழ் நாட்டில் இடம்பெறும் ஜல்லிக்கட்டு விளையாட்டை விட மிகவும் ஆபத்தானதும் காளைகள் அதிக துன்புறுத்தலுக்கு உட்படுபனவுமாகும்.தற்போது மிருக வதைக்கு எதிரான அமைப்புக்களிடமிருந்த இந் நாடுகளில் இடம்பெறும் ஜல்லிக்கட்டுக்கெதிரான கோசங்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன.பல இடங்களில் தடை செய்யப்பட்டுமுள்ளன.இருந்தாலும் மேற்குறித்த வளர்ந்த நாடுகளில் இவ்விளையாட்டுக்கள் இருக்கின்றமை என்னதான் நாகரீகம் வளர்ந்தாலும் பாரம்பரியத்தை அவ்வளவு இலகுவில் யாராலும் விட்டுக்கொடுக்க முடியாது என்பதை அறிந்து கொள்ளச் செய்கிறது.
ஜல்லிக்கட்டு தடை மீதான பார்வை
இந்திய விலங்கு வதை தடுப்புச் சட்டம் 1960ன் படி சில விலங்குகளை கூட்டில் அடைத்தல்,பொது இடங்களில் வைத்து வித்தை காட்டல் அதனை துன்புறுத்தல் என்பன குற்றமாக்கப்பட்டது.2011ம் ஆண்டு இந்த பட்டியலினுள் காளை இனமும் உள் வாங்கப்பட்டது. இச் சட்டமே இன்று ஜல்லிகட்டிற்கு எதிர்ப்பாக இருக்கின்ற பிரதான சட்டமாகும்.இச் சட்டம் தவறானதென யாராலும் கூற முடியாது.அவ்வாறு யாராவது கூறுவார்களாக இருந்தால் அவர்கள் மிருகங்கள் துன்புறுத்தப்படுவதை ஏற்றுக்கொள்வதாக பொருள் வழங்கும்.1998ம் ஆண்டு தொடக்கம் இதற்கு எதிரான கோசங்கள் தோற்றம்பெற்றுள்ளதை சில விடயங்களை ஆராய்வதிலிருந்து அறிந்துகொள்ள முடிகிறது.இது தொடர்பில் 2008ம் ஆண்டே முதன் முதலில் வழக்குகள் பதிவாகின.இதன் போது தமிழ் நாடு ஜல்லிக்கட்டு ஒழுங்கு முறைச் சட்டம் 2009 கொண்டுவரப்பட்டது.இதன் பின்னர் பல தடவைகள் ஜல்லிக்கட்டை தடைசெய்ய வேண்டுமென கோரப்பட்ட போதும் தமிழக அரசின் சில உத்தரவாதங்களையும் வாதங்களையும் ஏற்றுக்கொண்ட நீதி மன்றம் அதற்கு நிபந்தனைகளோடு அனுமதியளித்திருந்தது.இந் நிபந்தனைகளை பேணி பாதுக்காப்பதில் தமிழக அரசு கவனம் செலுத்தியிருந்தால் நிலைமை இந்தளவு மோசமான இடத்திற்கு சென்றிருக்காது என்பது தமிழக அரசின் மீதுள்ள கடும் குற்றச் சாட்டாகும்.உச்ச நீதிமன்றம் வழங்கிய நிபந்தனைகள் ஜல்லிக்கட்டை குறைக்கும் வகையிலும் அங்கு விளையாடும் மனிதர்களினதும் மிருகங்களினதும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.2013ம் ஆண்டு பெட்டா (PETA) அமைப்பானது தமிழகத்தில் இடம்பெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்வுகளை பதிவு செய்து நீதி மன்றத்தில் ஒப்படைத்து அங்கு இடம்பெற்ற சட்ட மீறல்களை தெளிவாக்கியது.இதன் பிரகாரம் 2014ம் ஆண்டு ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டது.கடந்த இரு வருடங்களாக அதனை நீக்கக் கோரும் கோசங்கள் எழுந்திருந்தாலும் இம் முறை தமிழகம் முழுவதும் பலம் பொருத்திய ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.தமிழகத்தை சேர்ந்த அரசியல் பிரமுகர்கள்,திரைப்பட நடிகர்கள் உட்பட அனைவரும் இதற்கு தங்களது ஆதரவை வழங்கிவருகின்றனர்.குறிப்பாக தமிழகத்தில் வாழ்கின்ற கமல் காசன் போன்ற கடவுள் நம்பிகையற்றவற்றவர்கள் இதற்கு ஆதரவு தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.இதனை ஆதரிப்பவர்கள் இது தமிழர்களின் வீரத்தை உலகிற்கு பறை சாற்றும் ஒன்றாக சித்தரிக்கின்றனர்.இதனை எதிர்க்கின்றவர்கள் இது மிருக வதை என வாதிடுகின்றனர்.
விளையாட்டுக்கள் எவ்வாறு அமைதல் வேண்டும்?
விளையாட்டுக்கள் பல வகைப்படும்.ஒரு மனிதன் மனிதனால் உருவாக்கப்பட்ட இயந்திரத்தோடு விளையாடலாம்,இரு உயிரினங்கள் விளையாடலாம்.எந்த விளையாட்டாக இருந்தாலும் சரி,யார் விளையாடினாலும் சரி,விளையாடும் இரண்டுக்கும் இடையில் எப்போதும் வெற்றி,தோல்விக்கான நிபந்தனைகளில் ஒரு உடன்பாடு காணப்பட வேண்டும்.அதே போன்று விளையாட்டில் வாழ்தல் அல்லது சாதல் என்ற நிலை இருக்க கூடாது.அது மிருகமாக இருந்தாலும் சரி மனிதனாக இருந்தாலும் சரி.விளையாட்டின் மூலம் எந்தவொரு உயிரினமும் பாதிப்பிற்குள்ளாகக் கூடாது.அப்போது தான் அதனை ஒரு விளையாட்டாக கொள்ளலாம்.ஒரு மனிதன் இயந்திரத்தோடு விளையாடுகின்ற போது அங்கு ஏற்கனவே வரையப்பட்ட (progamming) நிபந்தனைகள் காணப்படும்.அங்கு யாரும் எந்த வகையிலும் பாதிக்கப்பட வாய்ப்பில்லை.இதன் காரணமாக அவ் விளையாட்டின் போது “இந்த இயந்திரத்தை போட்டு இவன் இந்த பாடு படுத்துகிறானே” என யாரும் குற்றம் சுமத்துவது அறிவுடமையாகாது.இரு உயிரினங்கள் விளையாடும் போது அங்கு சில வேளை ஒரு உயிரினம் பாதிக்கப்படலாம்.அதில் மனிதன் தவிர்ந்து இரு உயிரினங்கள் விளையாடுகின்ற போது குறித்த இருவருக்குமிடையில் ஒரு உடன்பாடு தோன்ற சிறிதும் வாய்ப்பில்லை.உதாரணமாக சேவல் சண்டையை குறிப்பிடலாம்.அந்த சண்டையில் தான் என்ன செய்தால் வெற்றி பெறுவோம் என்பது குறித்து இரு சேவல்களும் அறிந்திருக்க சிறிதும் வாய்ப்பில்லை.இருந்தாலும் மனிதன் இரு சேவல்களையும் பிடித்து சண்டை போட மூட்டி விடுவான்.இரு உயிரினங்களுக்கும் இடையில் சண்டை மூட்டி விடுவதை யாராலும் ஏற்க முடியுமா? இரு உயிரினங்கள் சண்டை போடும் போது அதனை பிரித்து விடுவதே மனித இயல்பு.இதனையும் காலாச்சாரம்,பாரம்பரியம் என்போரும் உள்ளனர்.இதன் போது மனிதன் மிருகத் தனமான வேலையை செய்து கொண்டிருப்பதை சாதாரணமாக சிந்தித்தாலும் ஏற்க முடியும்.அவ் விளையாட்டில் சேவலின் காலில் கூர்மையான கத்தி கட்டப்படுவதால் அதில் விளையாடும் சேவல்கள் இறப்பதற்கான வாய்ப்பு அதிகமுள்ளது.குறைந்தது இரு சேவல்களும் காயத்திற்குள்ளாகும்.ஒரு உயிரினம் அநியாயமாக கொல்லப்படுவதை ஒரு போதும் ஏற்க முடியாது.ஒரு உயிரின் உயிரை பறிக்கும் உரிமை மனிதனுக்கில்லை.காயத்திற்குள்ளாதலும் மிருக வதை தானே! இவ்விளையாட்டில் வாழ்தல் சாதல் நிலை உள்ளது.அவ்வாறிருக்க எவ்வாறு அதனை ஒரு விளையாட்டாக கொள்ள முடியும்? விளையாட்டென கூறி வினையில் முடிவதையெல்லாம் ஒரு போதும் விளையாட்டாக கொள்ள முடியாது.
இது போன்றே மனிதன்-மனிதன் விளையாடும் ரெஸ்லின் போன்ற சில கொடூர விளையாட்டுக்களும் உள்ளன.அண்மையில் வெளிவந்த “பூலோகம்” என்ற தென்னிந்திய திரைப்படம் பல விடயங்களை கூறிச் சென்றாலும் “குத்துச் சண்டை” விளையாட்டிலுள்ள பாதகங்களை அழகிய முறையில் விளக்கிச் சென்றது.விளையாட்டுக்காக உயிரில் விளையாடுவது பிழையென இத் திரைப்படத்தை பார்த்தவர்கள் ஏற்றுக்கொண்டதை அவதானிக்க முடிந்தது.இருந்தாலும் இன்று குத்துச் சண்டை விளையாட்டுக்கள் அந்தளவு பாரதூரமாக இடம்பெறுவதில்லை.மேலும்,மனிதன்-மிருகங்கள் விளையாடும் விளையாட்டுக்கள் சிலவும் உள்ளன.மிருக காட்சி சாலை மற்றும் இதர சில இடங்களுக்கு சென்றால் அங்கு மனிதன் சில மிருகங்களை வைத்து விளையாட்டு காட்டுவதை அவதானிக்கலாம்.அவ் விலங்குகள் சிறந்த முறையில் குறித்த வளர்ப்பாளரின் சைகைக்கு இயங்க அதன் பசியை மூலதனமாக்கியிருப்பார்கள்.இதுவெல்லாம் மனிதன்-மிருகங்கள் விளையாட்டின் போது இடம்பெறும் மிருக வதைகளாகும்.இந்த வகையில் தான் ஜல்லிக்கட்டு விளையாட்டும் உள்ளடங்கும்.
ஜல்லிக்கட்டு தடை சரியா? பிழையா?
ஜல்லிக்கட்டு சரியா பிழையா என்ற வாதத்திற்குள் நுழைவதற்கு முன்பு ஒரு உதாரணத்தை வைத்து சில தெளிவுகளை பெறுவது எமது வாதத்தை விளங்க இலகுவாக்குமென நம்புகிறேன்.எமது தலைப்பானது (ஜல்லிக்கட்டு) சண்டை பாணியை கொண்ட விளையாட்டாதலால் தற்காப்பு விளையாட்டை உதாரணமாக கொள்வது மிகவும் பொருத்தமானதாக இருக்கும்.இரு மனிதர்கள் தற்காப்பு கலையை பயிலும் போது அதில் திறமை சாலி யார் என்பதை அறிந்து கொள்வதற்காக ஒரு சண்டை ஏற்பாடு செய்யப்படும்.இங்கு பல விடயங்கள் உள்ளன.குறித்த இருவரும் தாங்கள் ஏன் சண்டை பிடிக்கின்றோம் என்பதில் தெளிவாக இருப்பர்.என்ன செய்கின்ற போது வெற்றி பெறலாம் என்பது பற்றிய வரையறைகள் இருவருக்கும் நன்றாக தெரிந்திருக்கும்.இவ்வாறு விளையாடும் போது ஏதேனும் பாதிப்புக்கள் ஏற்பட்டால் அது தன்னை தாக்கியவர் மீது பிழையாகாது எனவும் அவர் அறிந்திருப்பார்.இயன்றவரை பாதுக்காப்பு நடவடிக்கைகள் இருக்கும்.
ஒரு மனிதன் ஒரு விலங்கோடு விளையாடுகின்ற போது அவர்கள் இருவருக்கும் இடையில் ஒரு உடன்பாடு ஏற்பட சிறிதும் வாய்ப்பில்லை.மனிதனுக்கு தான் என்ன செய்ய வேண்டும் என்ற விடயத்தில் தெளிவு இருந்தாலும் குறித்த விலங்கிற்கு எந்த வித தெளிவும் இருக்க வாய்ப்பில்லை.விளையாட்டு விதி பற்றி குறித்த விலங்கு அறியாமல் எப்படி இது விளையாட்டாகும்.இந் நிலையில் குறித்த விலங்கு ஏதேனும் பாதிப்புக்குள்ளாகுமாக இருந்தால் விளையாட்டாளர்கள் இருவருக்குமிடையில் எந்த வித உடன்பாடும் இல்லாததன் காரணமாக அதன் முழுப் பொறுப்பையும் குறித்த மனிதனும் அதனை ஏற்பாடு செய்த ஏற்பாட்டார்களுமே ஏற்க வேண்டும்.ஜல்லிக்கட்டு விளையாட்டுக்களின் போது காளை இறக்கும் பல சம்பவங்கள் பதிவாகியுள்ளன.ஒரு மனிதனின் வீரத்தை காட்ட வேண்டுமாக இருந்தால் அதற்கு எத்தனையோ வழிகள் உள்ளன.மலையை உடைக்கலாமே? இன்னும் பல பயன்தரக் கூடிய வழிகளும் உள்ளன.இன்று தமிழகத்தில் பல விவசாயிகள் காட்டு யானைகள் போன்றவற்றின் தாக்குதலால் அடிக்கடி மரணம் சம்பவிப்பதை நாம் அறிந்தே வருகிறோம்.அவர்களின் விவசாய நிலங்களையும் அவைகள் அழித்து செல்கின்றன.தனது வீரத்தை காட்ட விரும்புவோர் அங்கு சென்று இந்த அடக்கினால் அது சமூகத்திற்கு பயனுள்ள வீரமாக இருக்குமே! யானை அடக்கி வீரத்தை காட்டுவதும் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
எமது வீரத்தை வெளிக்காட்ட ஒரு விலங்கை பயன்படுத்துவது எந்த வகையில் நியாயமாகும்? இதனை விலங்குகளின் பக்கமிருந்து சற்று சிந்தித்து பாருங்கள்.நான்கு விலங்குகள் தங்களது வீரத்தை வெளிக்காட்ட ஒரு பலமிக்க மனிதனை எந்த வித பாதிப்புமில்லாமல் உருட்டி விளையாடுகிறதென்று வைத்துக்கொள்வோம்.இதனை யாராவது ஏற்றுக்கொள்வார்களா? இதனை எவ்வாறு மனிதன் ஏற்றுக்கொள்ள மாட்டானோ அது போன்றே விலங்குகளை மனிதன் தனது வீரத்தை வெளிப்படுத்த பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.உலகமும் அதிலுள்ள அனைத்தும் மனிதனுக்காக படைக்கப்பட்டவைகள்.விலங்குகளும் மனிதனுக்காகவே படைக்கப்பட்டவையாகும்.இருந்தாலும் இறைவன் உலகில் ஒவ்வொரு விலங்குகளையும் பலவாறான தேவைகளுக்காக படைத்துள்ளான்.பண்டைய காலத்து மனிதன் பொதி சுமக்க,உளவு தொழில்,பயணம் செய்ய மற்றும் பாரம் தூக்க போன்ற தேவைகளுக்காக பயன்படுத்தினான்.இன்றும் மனிதன் உணவுக்காக சில விலங்குகளை பயன்படுத்துகிறான்.மேற்குறித்தவைகளில் ஏதோ ஒரு பயன்பாடு இருப்பதன் காரணமாக இவைகளை தவறாக குறிப்பிட முடியாது.இருப்பினும் தற்போது அவ் வேலைகளை செய்ய இயந்திரங்கள் உள்ளமையால் விலங்குகளை கடிமான வேலைக்குட்படுத்த வேண்டிய அவசியமில்லை.அதனை தவிர்ந்து கொள்வது சிறந்தது.குறித்த ஜல்லிக்கட்டு விளையாட்டில் காளைகளை பிடித்து அதனை வீழ்த்துவதனால் அது சிரமத்திற்கு உட்படுகின்றதே தவிர அதனால் எந்த பயனும் இருப்பதாக அறிய முடியவில்லை.சிலர் இப்படியான விளையாட்டுக்களை தொடர்வதன் மூலம் காளைகள் பாதுகாக்கப்படுகின்றன என்ற வாதத்தை முன் வைக்கின்றனர்.இதனை தவறான வாதமாகும்.சில காளைகளை கொடுமைப்படுத்தியே அந்த இனம் பாதுகாக்கப்படுமாக இருந்தால் அதனை விட அவ்வினம் அழிவது தவறில்லை.குறித்த இனத்தை பாதுக்காக்க வேண்டுமாக இருந்தால் மாடுகளினூடான பெறக் கூடிய பால்,இறைச்சு போன்ற தேவைகளை மக்களிடையே அதிகரிக்கும் போது அவ்வினத்தை மக்கள் கவனம் எடுத்து வளர்ப்பார்கள்.மாடுகள் இனமும் இலகுவாக பாதுக்கக்கப்படும்.
இந்த போராட்டத்தில் ஈடுபடுகின்றவர்கள் ஜல்லிக்கட்டிற்கு பயன்படுத்தப்படும் காளைகள் உறுதியானவை என்பதை நிரூபிப்பதன் மூலம் அவைகளை இதற்கு பயன்படுத்தவது பிழையல்ல என்ற விதத்தில் கருத்து தெரிவிக்கின்றனர்.உறுதியான காளையை அடக்கினால் அது வதையாகாதா? உறுதி என்பதை ஒன்றினது உடற்கட்டமைப்பை வைத்து ஒரு போதும் கூற முடியாது.உறுதி உளக் கட்டமைப்பிலேயே பிரதானமாக தங்கியிருக்கும்.ஜல்லிக்கட்டிற்கு பயன்படுத்தப்படும் காளைகள் எதிர்த்து தாக்குவதை விட விரண்டோடுவதையே காணக்கிடைக்கின்றது.விரண்டோடுவது பயத்தின் காரணமாக ஏற்படுவதாகும்.இதனை அடக்குவது கோழைகளின் செயலாகும்.பழந்தமிழ் இலக்கியங்களில் ஜல்லிக்கட்டு விளையாட்டானது “கொல்லேறு தழுவுதல்” எனவும் சிறப்பித்து அழைக்கப்படுகிறது.கொல்லும் காளைகள் எம்மை நோக்கியே வரும்.நாம் அதனை விரட்டி ஓடி பிடிக்க வேண்டிய அவசியமில்லை.இதனை வைத்து நோக்கும் போது அந் நேரத்தில் சீறி ஓடும் காளைகளை பிடித்து வீழ்த்தியது இன்று ஒரு மரபாக தொடர்ந்திருக்கலாம்.
ஒவ்வொரு முறையும் ஜல்லிக்கட்டு நடைபெறும் போதும் மனித உயிர்கள் காவு கொள்ளப்படுகின்றமையையும் காளைகள் இறக்கின்றமையும் யாராலும் மறுதலிக்க முடியாத உண்மையாகும்.மனித உயிர்கள் மிகவும் பெறுமதி மிக்கவை.அவற்றை தங்களது வீரத்தை வெளிப்படுத்த இழப்பது ஏற்றுக்கொள்ளக் கூடிய விடயமல்ல.மனித உயிர் மாத்திரமல்ல காளையின் உயிரும் பெறுமதியானவை தான்.இதனை நடாத்த வேண்டும் எனக் கோருகின்றவர்கள் சில நாடுகளில் காளையை வைத்து நடைபெறும் விளையாட்டுக்களை பிரதான ஆதாரமாக கொள்கின்றனர்.ஒரு பிழையை பலர் செய்வதால் அது ஒரு போதும் சரியாகப்போவதில்லை.இது தமிழ் இனம் சார்ந்த வீர விளையாட்டாகவும் நோக்க முடியாது.தமிழ் இனத்தை சார்ந்த அனைவரும் இதனை தங்களது வீர விளையாட்டாக கொள்வதுமில்லை.இதிலும் சாதி ரீதியான சில விடயங்கள் இருப்பதாகவும் அறிய முடிகிறது.ஜல்லிக்கட்டு விளையாட்டானது தமிழகத்தின் குறிப்பிட சில பகுதிகளிலேயே இடம்பெறுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.தற்போதைய போராட்டங்கள் இது தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்கள் போன்று இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஜல்லிக்கட்டிற்கான தீர்வு
தற்போது இந்திய மத்திய அரசுக்கு எதிராக தமிழ் நாட்டில் பலவாறான போராட்டங்கள் இடம்பெறுகின்றன.இவர்களது போராட்டமானது உச்ச நீதி மன்ற தீர்ப்பிற்கு எதிரானது என்பதால் தீர்ப்பை எதுவும் செய்ய முடியாது.இருந்தாலும் மத்திய அரசு அவசர சட்டமொன்றை நிறைவேற்றுவதன் மூலம் இதனை தீர்த்து வைக்கலாம்.இந்திய விலங்கு வதை தடுப்புச் சட்டம் 1960ன் விலங்குகள் பட்டியலினுள் 2011ம் ஆண்டு உள் வாங்கப்பட்ட காளை இனம் நீக்கப்பட வேண்டும்.அவ்வாறு காளை இனம் நீக்கப்படுமாக இருந்தால் காளைகளை வேறு யாராவது வேறு ஏதேனும் விதத்தில் துன்புறுத்தலுக்கு உட்படுத்தினாலும் சட்ட ரீதியாக தண்டிக்க முடியாத நிலை ஏற்படும்.இப் பட்டியலினுள் இருந்து காளை இனத்தை நீக்க கோருவது ஜல்லிக்கட்டு காளை இனத்தை துன்புறுத்தும் ஒன்றே என்பதை அவர்களே ஏற்றுக்கொண்டது போன்றாகிவிடும்.காளை இனம் குறித்த பட்டியலினுள் உள்ள வரை ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு கிடைக்க வாய்ப்பில்லை.தமிழக அரசு அவசர சட்டத்தை இயற்றுவதன் மூலம் இதனை தீர்க்கலாம் என்ற கதைகள் வெளிவருகின்றன.ஓய்வு பெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன் என்பவர் இதனை மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்தே மாற்ற வேண்டுமென்ற கருத்தை கூறியுள்ளார்.ஒரு மாநில அரசு மத்திய அரசுடன் பொதுச் சட்டம் ஒன்றில் முரண்பட முடியாது.இருந்தாலும் ஜல்லிக்கட்டு என்பது தமிழக தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாதாக கருதப்படுவதால் அது தொடர்பான சட்டமியற்றும் அதிகாரங்களை மத்திய அரசு தமிழக அரசுக்கு வழங்குவது பொருத்தாமானது.தற்போது 1960ன் மிருக வதைச் சட்டம் மாநில திருத்தம் செய்யப்பட்டு அனுமதி பெறப்பட்டுள்ளது.இது இந்திய அரசியலமைப்பின் படி சரியான நகர்வா என்பதை இன்னும் சில நாட்களில் தான் அறிந்து கொள்ள முடியும்.இருப்பினும் இது ஆறு மாதத்திற்கே செல்லுபடியாகும் என்பதால் இதனை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.மீண்டும் இது போன்ற ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பது அவ்வளவு இலகுவானதல்ல என்பதால் ஆர்ப்பாட்டக் காரர்கள் இதன் போதே இதனை சாதித்து கொள்வது சாதூரியமானது.இதன் நிரந்தர தீர்விற்கு இந்திய விலங்கு வதை தடுப்புச் சட்டம் 1960 மாற்றப்பட வேண்டும்.இதற்கு இந்திய நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும்.இது தொடர்பில் அங்கு விவாதிக்கபட வேண்டும்.அது அவ்வளவு இலகுவான விடயமல்ல.இப் பலமிக்க ஆர்ப்பாட்டம் தொடர்ந்தால் இந்திய நாடாளுமன்றம் தமிழக மக்களின் ஆர்ப்பாட்டத்திற்கு அடிபணிந்தேயாக வேண்டும்.ஆனால்,அதற்கு இன்னும் நீண்ட நாள் போராட்டங்கள் தேவைப்படும்.அந்தளவு போராட்டத்திற்கு தமிழக மக்கள் நிண்டு பிடிப்பார்களா என்பதை காத்திருந்தே அறிய வேண்டும்.
ஆர்ப்பாட்டாங்களும் விளைவுகளும்
ஒரு சிறிய விடயமென்றாலும் பஸ்ஸை உடைத்தல்,தீ வைத்து எரித்தல் என்ற பாணிக்கு பழக்கப்பட்ட தமிழக மக்கள் இவ்விடயத்தில் மிக அழகிய விதத்தில் போராட்டம் செய்வதை அவதானிக்க முடிகிறது.இவ் வழி முறை இவ்வார்ப்பாட்டத்தில் மாத்திரமல்லாது அனைத்து விடயங்களிலும் தொடர வேண்டும்.இருந்தாலும் சில மாணவர்கள் தீக்குளிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டமை கண்டிக்கத்தக்கது.இவ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் சிலருடைய கோசங்களை அவதானிக்கும் போது தமிழக தனி நாட்டுக்கோசம் எழுமா? என்ற சந்தேகம் தோன்றுகிறது.இந்தியாவின் மிகப் பெரும் பலமே அதன் நில விஸ்தீரணம் தான்.இப்படியான ஒரு நிலை தோன்றுமாக இருந்தால் இந்தியாவின் பலம் அழிந்துவிடும்.அதற்கு அவ்வளவு இலகுவில் தமிழக மக்கள் துணை போய்விடமாட்டார்கள்.இந்த ஒற்றுமை ஏனைய காவிரி நீர் போன்ற பிரச்சினைகளிலும் ஈடுபட வேண்டும்.தமிழக மக்களின் இவ் ஆர்ப்பாட்டமானது அவர்களது வெற்றியளித்துள்ளதன் காரணமாக எதிர்காலத்திலும் இது போன்ற பலமிக்க ஆர்ப்பாட்டங்களை தமிழகத்தில் காணக்கிடைக்கும்.இது தமிழக மக்களின் ஒற்றுமையை உலகிற்கு எடுத்துக்கூறிய ஒரு சந்தர்ப்பமாகவும் நோக்கலாம்.இது உலகிற்கு ஒரு வரலாற்று முன் மாதிரியும் கூட.
ஜெயலலிதாவின் இறப்பினால் அ.தி.மு.க கட்சி பல கூறுகளாக பிளவுபட்டு நிற்கின்றது.இந் நிலையில் தமிழகத்தில் இவ்வாறான போராட்டங்கள் இடம்பெறுவது அ.தி.மு.க அரசை பலத்த சவாலுக்குட்படுத்தும்.சசிகலாவிற்கும் தீபாவிற்குமிடையிலான அதிகார மோதலில் கவனம் செலுத்திக்கொண்டிருக்கும் அ.தி.மு.காவிற்கு இதனை கவனிக்க நேரமில்லாமல் இருக்கலாம்.எது எப்படி இருந்தாலும் ஜெயலலிதாவின் இறப்பின் பின்னர் அ.தி.மு.க எதிர்கொள்ளும் பலமிக்க முதற் சவாலாகவும் இதனை குறிப்பிடலாம்.ஜெயலலிதா உயிரோடு இருந்த இரண்டு வருடங்களும் எழாத போராட்டம் இம் முறை மாத்திரம் எழுந்துள்ளதை வைத்து நோக்கும் போது ஜெயலலிதா எவ்வாறு தமிழக மக்களின் உணர்வுகளை அடக்கி வைத்திருந்தார் என்பது ஆச்சரியமிக்க விடயம் என்பதில் ஐயமில்லை.தற்போதைய தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஜல்லிக்கட்டு தடைக்கு எதிர் மன நிலையை கொண்டிருந்தாலும் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நிகழ்ந்த போதும் இறுதியிலேயே அவர் வாய் திறந்ததை அவதானிக்க முடிந்தது.அவர் ஒரு முதல்வராக இருந்தாலும் அவர் பெயரளவில் முதல்வராக இருப்பது இதற்கான காரணமாக இருக்கலாம்.தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.கா ஸ்டாலின் அறிக்கைவிட்டுக்கொண்டே உள்ளார்.இது தி.மு.கவினருக்கு சாதகாமாக அமைந்துள்ளது.அவர்கள் உண்ணாவிரதப் போராட்டங்களிலும் ஈடுபட்டிருந்தனர்.இந் நிலையில் இது தொடர்பில் சசிகலா,தீபா ஆகியோர் மௌன விரதம் கடைப்பிடிப்பதன் நோக்கமென்ன? இதனையே அடிப்படையாக கொண்டு தங்களது அரசியல் பயணத்தை ஆரம்பித்திருக்கலாமே! தற்போது மத்திய அரசை ஆண்டு கொண்டிருக்கும் ப.ஜ.கவிற்கு தமிழக அரசின் ஒத்துழைப்பு தேவையில்லை என்பதால் மத்திய அரசு தமிழக அரசை சற்று வேறு கண் கொண்டு பார்க்கலாம்.தற்போது ப.ஜ.கவின் ஆட்சி வீழ்ச்சியை நோக்கி பயணித்து கொண்டிருப்பதால் இந் நேரத்தில் தமிழக மக்களின் உணர்வுகளுடன் விளையாடுவது மிகக் கடுமையான விளைவுகளையும் ஏற்படுத்தலாம்.
குறிப்பு: இக் கட்டுரை இன்று 23-01-2017ம் திகதி திங்கள் கிழமை நவமணிப் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.இக் கட்டுரை தொடர்பில் ஏதேனும் விமர்சனங்கள் இருப்பின் [email protected] எனும் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.இது அச்சு ஊடகத்தில் வெளியிடப்படும் எனது 78வது கட்டுரையாகும்.