ஜல்லிக்கட்டு போராட்டம் – போர்க்களமாக மாறிய மெரினா

மதுரையில் ஜனவரி 16ஆம் திகதி ஏற்றி வைத்த ஜல்லிக்கட்டு போராட்ட எழுச்சி தீப்பொறி, தமிழகம் முழுவதும் பரவி சென்னை மெரினா கடற்கரையில் விவேகானந்தர் இல்லம் அருகே கடந்த 6 நாட்களாக அமைதியாக மையம் கொண்டு இருந்தது.

லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் 24 மணி நேரமும் அறவழியில் நடத்தி வந்த போராட்டத்தை 23ஆம் திகதி அதிகாலையில் பொலிஸார் உள்ளே புகுந்து தமிழகத்தையே பதற்றத்துக்கு உள்ளாக்கி விட்டார்கள்.

‘சட்டமன்றத்தில் முதல்வரின் அறிவிப்பை பார்த்துவிட்டு, போராட்டத்தை வாபஸ் வாங்குகிறோம்’ என்று மெரினாவில் கூடியிருந்த இளைஞர்கள் கேட்டுக் கொண்டும். அதற்கு சம்மதிக்காமல் பொலிஸார் எடுத்த அதிரடியால் 6 நாட்களாக அமைதியாக இருந்த மெரினா கடற்கரை ஜனவரி 23ஆம் திகதி காலையில் போர்க்களம்போல மாறியது.

விடாப்பிடியாக மாணவர்களை அங்கிருந்து அகற்றுவதில் குறியாக இருந்த பொலிஸாரின் அவசரமே, இந்த சூழ்நிலைக்குக் காரணம் என்கிறார்கள் பல்வேறு தரப்பினரும்.

விவேகானந்தர் இல்லம் அருகே இளைஞர்களின் மையப் புள்ளியாக கூடியிருந்த இடத்தை பொலிஸார் தங்களது கட்டுபாட்டுக்குள் இன்று அதிகாலையிலேயே கொண்டு வந்து விட்டனர்.

அங்கிருந்து விரட்டப்பட்ட இளைஞர்கள், கடலை நோக்கியும், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, அவ்வை சண்முகம் சாலை, பெசன்ட் சாலை, பாரதியார் சாலை, வாலாஜா சாலை என்று ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் பிரிந்து சென்றனர்.

இவர்களில் கடற்கரை ஓரத்தில் கடல் அலையை நோக்கியிருந்த இளைஞர்கள் கறுப்புக் கொடியுடன் தொடர்ந்து எதிர்ப்புக் குரல் கொடுத்தனர்.

அதே நேரத்தில், மெரினா கடற்கரைக்கு வரும் ஐந்து முக்கிய சாலைகளிலும் ஒதுங்கி இருந்த இளைஞர்களை அங்கிருந்து விரட்டி அடிக்கும் வேலைகளில் பொலிஸார் ஈடுபட்டதால் இருதரப்புக்கும் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது.

போராட்டக் களத்தில் 5 முறை கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டது. இதனால் பதற்றம் மேலும் அதிகரித்து இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்டோர் சிதறி ஓடினர்.

அவ்வை சண்முகம் சாலையில் பொலிஸார் நடத்திய தடியடி காரணமாக 30க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டது.

லத்தியடியில் இளைஞர்களின் முதுகு பழுத்துப் போனது. அப்போது, அருகிலிருந்த குடிசைப் பகுதிகளில் இருந்து வீசி எறிந்த கல் வீச்சில் இன்ஸ்பெக்டர், ஒரு பெண் பொலிஸ் உள்பட 5 பொலிஸார் காயமடைந்தனர்.

 

எனவே, திருவல்லிக்கேணி பகுதி தொடர்ந்து பதற்றமாகவே காணப்படுகிறது.

போராட்டக் களத்தில் இருக்கும் மாணவர்களுக்கு ஆதரவாக சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இருந்து வரும் இளைஞர்களை ஆங்காங்கே பொலிஸார் சோதனை செய்து தடுத்து நிறுத்துவதுடன், திருப்பி அனுப்பி வருகின்றனர்.

ஆனாலும், அதை எல்லாவற்றையும் மீறி இளைஞர்கள் வருகை அதிகரித்து வருகிறது. மெரினா கடற்கரை, மெரினாவுக்கு வரும் சாலை சந்திப்புகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளர். அந்தப் பகுதி முழுவதும் தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது.