– மொஹமட் பாதுஷா
இந்தியத் தமிழர்கள் உள்ளடங்கலாகப் பல்வேறு பிராந்தியங்களிலும் உள்ள இந்து மக்கள் ஏர்தழுவுதல் (ஜல்லிக்கட்டு) சார்ந்த உரிமைகளுக்காகப் போராடிக் கொண்டிருக்கும்போது, உலகின் ஏனைய பாகங்களில் வாழும் முஸ்லிம்களைப் போலவே, தம்முடைய இருப்பு மற்றும் அபிலாஷைகளுக்காக போராடிக் கொண்டிருக்கும் சமூகமாகவே இலங்கை முஸ்லிம்களும் இருக்கின்றனர். வடக்கு, கிழக்கில் வாழ்கின்ற முஸ்லிம்களுடைய பிரச்சினையும் தெற்கில், மலைநாட்டில் வாழ்கின்ற முஸ்லிம்களின் பிரச்சினைகளும் வடிவத்தில் வேறுபட்டாலும் பெரும்பாலும் அவற்றின் அதனது தோற்றுவாயும் பண்புகளும் ஒத்த தன்மையையே கொண்டிருக்கின்றன.
இலங்கையில் தற்போது நடைமுறையில் இருக்கும் அரசியலமைப்பைத் திருத்துவதற்கான முயற்சிகள் பல்வேறு தடைகளுக்கு மத்தியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நீண்டகால இனப் பிரச்சினைக்குத் தீர்வாக அமையக் கூடிய ஒரு தீர்வுத்திட்டத்தைக் கொண்டுவருவது அதன் பிரதான நோக்கங்களுள் ஒன்றாக இருக்கின்றது. ஆனால், அரசியலமைப்பை மறுசீரமைப்பதற்கான அதாவது புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகள் வெற்றியளிக்குமா? என்ற ஐயப்பாடு தற்போது ஏற்பட்டிருக்கின்றது. ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி மற்றும் ஐக்கிய தேசியக்கட்சி ஆகியவற்றின் அடிப்படை அரசியல் சித்தாந்தங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் இதில் செல்வாக்குச் செலுத்துகின்றன.
ஆனால் சர்வதேச, இந்திய மற்றும் புலம்பெயர் சக்திகளின் அழுத்தங்கள், நல்லாட்சி அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய கடப்பாடு ஆகிய அடிப்படைகளின் கீழ், இனப்பிரச்சினைக்குத் தீர்வாக அமையும் ஏதேனும் ஓர் ஏற்பாட்டை அரசியலமைப்பின் ஊடாக அரசாங்கம் மேற்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளது. இனப் பிரச்சினைக்கான தீர்வு என்று வரும்போது, அது தமிழர்களுக்கு மட்டுமான தீர்வாக இருக்க இயலாது. அந்தத் தீர்வு சமகாலத்தில் சிங்கள மக்களால் ஏற்றுக் கொள்ளப்படுவதாகவும் முஸ்லிம்களைத் திருப்திப்படுத்துவதாகவும் இருக்க வேண்டும். அவ்வாறில்லாத எந்தத் தீர்வும் உண்மையில் நிரந்தரத் தீர்வாகவும் மாட்டாது. இந்தவகையில் நோக்கினால், தமிழ் மக்களுக்கு என்ன தேவையோ, அவர்களுடைய அபிலாஷை என்னவோ, அதனைப் பெற்றுக் கொள்வதற்கு தமிழ்த் தரப்பு அரசியல் சக்திகள் எல்லாமே ஒருமித்த நிலைப்பாட்டில் இருக்கின்றன. அரசியல் ரீதியாக வேறுவேறு முகாம்களில் இருந்து செயற்படுகின்ற தமிழ் அரசியல்வாதிகளும் இந்த நல்ல நோக்கத்துக்காக ஒரு பொதுத் தளத்துக்கு வந்திருக்கின்றனர்.
அந்த அடிப்படையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைத்து, அதற்குள் தம்மைத் தாமே ஆளும் விதத்தில் அமையப்பெற்ற அதிகாரத்தைக் கொண்ட தீர்வொன்றை தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தி வருகின்றது. இதனை அடைந்து கொள்வதற்காக, அரசியலமைப்பு ரீதியாக எதைச் செய்ய வேண்டுமோ அதையெல்லாம் சத்தமில்லாமல், அவர்கள் செய்து கொண்டுமிருக்கின்றார்கள். ஆனால், முஸ்லிம் அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் வெட்கித் தலைகுனியச் செய்வதாக அமைந்திருக்கின்றன. முஸ்லிம் மக்கள் தங்களுடைய தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகளின் இயலுமையின் அளவு என்ன என்பதை இன்னும் புரிந்து கொள்ளாமல் இருப்பதைப் போன்ற வேறு கைசேதங்கள் எதுவும் இருக்காது. தீர்வுத்திட்டம் என்று வருகின்ற போது தமிழர்களுக்கு எதைக் கொடுக்கக் கூடாது என்று கூறுவதற்கு முஸ்லிம்களுக்கு உரிமையில்லை. மாறாக, உங்களுக்கு என்ன தேவை என்ற கோரிக்கையையே முன்வைக்க வேண்டும்.
அரை நூற்றாண்டு காலமாகப் போராடி வருகின்ற தமிழ் மக்களுக்கே உருப்படியாக எதையும் கொடுப்பதில் மெத்தனப் போக்கைக் காட்டுகின்ற ஆட்சியாளர்கள், முஸ்லிம்களுக்குத் தங்கத்தட்டில் தீர்வை வைத்து நீட்டுவார்கள் என்று கனவிலும் நினைக்கத் தேவையில்லை. குறைந்தபட்சம், ஒருமித்த குரலில், எழுத்துவடிவில் கோரிக்கைகளை முன்வைத்து, அதனை அரசியலமைப்பு ஊடாக உறுதிப்படுத்தாவிட்டால், வடக்கு, கிழக்கில் மட்டுமல்ல அதற்கு வெளியில் வாழ்கின்ற முஸ்லிம்களின் எதிர்காலமும் சூனியமாகிவிடக் கூடிய அபாயமிருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ‘வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து ஓர் ஆட்சியை நிறுவுவது எனவும், அதில் முஸ்லிம் ஒருவரை முதலமைச்சராக நியமிப்பது’ என்றும் ஓர் அறிவிப்பை விடுத்துள்ளது. வட மாகாண சபை ‘முஸ்லிம்களுக்கான தன்னாட்சி அதிகார சபை’ ஒன்றை வழங்குவதற்கான நல்லெண்ணத்தை வெளிப்படுத்தியிருக்கின்றது. ஆனால், முஸ்லிம்கள் தங்களது நிலைப்பாடு, கோரிக்கை என்னவென்பதை அறுதியும் உறுதியுமாகத் தெரியப்படுத்தவில்லை என்பது பட்டவர்த்தனமானது. சில முஸ்லிம் அரசியல்வாதிகள், இவ்விரு மாகாணங்களும் இணைந்தால் இணைந்த வடகிழக்கில் நிலத்தொடர்பற்ற முஸ்லிம் மாகாணம் வேண்டுமெனக் கூறி வருகின்றனர்.
சில அரசியல்வாதிகள், இணையாத கிழக்கில் முஸ்லிம் தனி மாகாணம் தர வேண்டும் எனச் சொல்கின்றனர். இன்னும் சிலர், இவ்விரு மாகாணங்களும் இணையாதிருத்தலே தீர்வு என்று கூறி வருகின்றனர். ஓரிரு அரசியல்வாதிகள் சமஷ்டி (பெடரல்) முறையை பரிந்துரை செய்கின்றனர். வேறு சிலருக்கு இதுபற்றி எந்த அக்கறையும் இருப்பதாகத் தெரியவில்லை. தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை முஸ்லிம்கள் பெரிதும் மதித்தனர்; இன்னும் மதிக்கின்றனர். தமிழர்களின் கனவுக்காக விடுதலைப் புலிகளோடு இணைந்து முஸ்லிம் இளைஞர்களும் போராடினர் என்பதுதான் வரலாறு. அந்த வரலாற்றை கறைபடியச் செய்தது புலிகளே அன்றி முஸ்லிம்கள் அல்லர். அதுபோலவே, முஸ்லிம் தனித்துவ அடையாள அரசியலும் தமிழர் அரசியலில் இருந்துதான் தோற்றம் பெற்றிருக்கின்றது. பெருந்தேசியக் கட்சிகளின் ஊடாகவோ, தமிழரசுக் கட்சியின் ஊடாகவோ முஸ்லிம்களின் அபிலாஷைகளை முற்றுமுழுதாக நிறைவேற்றிக் கொள்ள முடியாது என்ற பட்டறிவே, தனியடையாள முஸ்லிம் கட்சிகள் உருவாகக் காரணமாயிற்று என்றும் கூறலாம். இவற்றிலிருந்துதான் முஸ்லிம்கள் பாடம் கற்றுக் கொள்கின்றனர். ஆரம்பத்தில் இருந்தே தமிழர்களும் முஸ்லிம்களும் ஒரேபாதையில் கூட்டாக பயணித்த போதிலும், அவையிரண்டும் தனித்தனி இனக்குழுமங்கள் என்பதையும் இருவேறுபட்ட அபிலாஷைகளைக் கொண்டுள்ளன என்பதையும் பரஸ்பரம் இருதரப்பு அரசியல்வாதிகளும் விளங்கிக் கொண்டனர். 1956 ஆம் ஆண்டில் இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் மாநாட்டில் ‘இணைந்த வடகிழக்கில் தமிழர்களுக்கு ஒரு சுயாட்சி தமிழரசும், முஸ்லிம்களுக்கு ஒரு சுயாட்சி முஸ்லிம் அரசும்’ என்று தீர்மானித்து, அதைத் ‘திருமலை தீர்மானம்’ ஆக அன்றைய தமிழ்த் தலைவர்கள் வெளிப்படுத்தினார்கள். 1961 இல் இடம்பெற்ற அக்கட்சியின் மாநாட்டில் தந்தை செல்வநாயகம் “தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் சமமான ஆட்சி அதிகாரம் நிறுவப்பட வேண்டும்” என்பதை வலியுறுத்தியிருந்தார். அதேநேரம், 1977 இல் வெளியிடப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில், ‘முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக வாழும் பிரதேசங்களில் ஒரு சுயாட்சிமுறை ஏற்படுத்தப்படும். தமது விருப்பத்தின் அடிப்படையில் பிரிந்துசெல்லும் வகையில் அவர்களது சுயாதீனத்தைப் பாதுகாப்பதற்கும் தமிழர் விடுதலைக்கூட்டணி உத்தரவாதம் அளிக்கின்றது’ என்று கூறப்பட்டுள்ளது.
எவ்வாறிருப்பினும், இன்றைய தமிழ் அரசியல்வாதிகள் அவ்வாறான ஓர் ஆட்சியதிகார நிலப்பரப்பை முஸ்லிம்களுக்கு வழங்குவதில் தயக்கம் காட்டுவதை அவதானிக்க முடிகின்றது என்று, இணைந்த வடகிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவரும் முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தவிசாளருமான சேகு இஸ்ஸதீன் அண்மையில் வெளியிட்டுள்ள முஸ்லிம் சமஷ்டி என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். இதனை அடிப்படையாக வைத்து, அன்றைய தமிழ் தலைவர்கள் போல் இன்றையவர்கள் இல்லை என்று கூறினால், மறுபுறத்தில், அன்றைய முஸ்லிம் தலைவர்கள் போல இப்போதிருப்பவர்களும் இல்லை என்று, அங்கிருந்து ஒரு குரல் வரலாம் என்பதும் நினைவு கொள்ளத்தக்கது. எதுஎவ்வாறிருந்த போதும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தனித்துவ இன, மத அடையாளத்துடனும் அரசியல் உரிமை சார்ந்த வேட்கைகளோடும் வாழ்கின்ற முஸ்லிம்களுக்கும் இனப்பிரச்சினைத் தீர்வின் ஊடாக ஒரு முஸ்லிம் மாகாணமோ, சமஷ்டி ஆட்சியே வழங்கப்பட வேண்டும் என்பதை எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
அதைவிடுத்து, முஸ்லிம் ஒருவரை முதலமைச்சராக நியமிக்கின்ற கதைகள் எல்லாம், 1948 இல் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் எம்.பிக்களுக்கு அமைச்சர் பதவி தருவதாக டீ.எஸ்.சேனநாயக்கா ஆசை வார்த்தை கூறியதைப் போல, ஒரு தற்காலிக பிரதியுபகாரமாகவே அமையும் என்றும் சேகு இஸ்ஸதீன் கூறியுள்ளார். தமிழர்களின் வேண்டுதலான வடக்கு, கிழக்கு இணைப்பை சாத்தியமாக்குவது முஸ்லிம்களின் கைகளிலேயே கணிசமாகத் தங்கியுள்ளது. எனவே, இதற்கு முஸ்லிம்கள் ஆதரவை வழங்கும் பட்சத்தில் சம அதிகாரமுள்ள ஒரு தீர்வை முஸ்லிம்களுக்கு வழங்க வேண்டும் என்பதே முக்கியமானது. அது சமஷ்டியாக, வடகிழக்கில் நிலத்தொடர்பற்ற முஸ்லிம் மாகாணமாக, கிழக்கில் தனி முஸ்லிம் மாகாணமாக… எதுவாகவும் இருக்கலாம். இங்கு சமஷ்டி முறையில் கூடிய கவனம் செலுத்தப்பட வேண்டும். சமஷ்டி (பெடரல் முறைமை) முறை என்பது அதிகாரப் பரவலாக்கலின் ஒரு முக்கிய கூறாக கருதப்படுவதுடன், அமெரிக்கா, மெக்சிகோ, பிரேசில், ஜேர்மனி, சுவிட்சர்லாந்து, அவுஸ்திரேலியா, இந்தியா உள்ளடங்கலாக பல நாடுகளில் இம்முறை அமுலில் இருக்கின்றது. சமஷ்டியில் பல்வேறு மாதிரிகள் இருக்கின்றன. ஆனால், மத்திய, மாநில அரசாங்கங்களை உள்ளடக்கிய ஒரு பொது அரச கட்டமைப்பின் ஊடாகத் தனித்துவ அரசியல் சமூகங்களின் தேவைகளை நிவர்த்தி செய்யும் ஒரு கூட்டாட்சி முறை என்று இதனை மேலோட்டமாகக் குறிப்பிடலாம். எனவே, இது இலங்கைக்கு மிகப் பொருத்தமானது என்று நீண்டகாலமாக கூறப்பட்டு வருகின்றது. ஆனாலும், சமஷ்டியை கொண்டுவருவதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன. அதிகாரப்பரவலாக்கலின் ஓர் ஏற்பாடாக சமஷ்டி இருப்பதால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மட்டும் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் மாத்திரமல்லாது மலையக தமிழர்கள், தென்பகுதி சிங்கள மக்கள் என ஒவ்வொரு வகையினருக்கும் சமஷ்டியை வழங்கக் கூடிய மாதிரிகள் உலகில் காணப்படுகின்றன. அது பிரச்சினையில்லை. ஆனால், சமஷ்டி முறையை கொண்டு வருவதென்றால், அது அரசியலமைப்பின் ஊடாகவே மேற்கொள்ளப்படுதல் வேண்டும். இலங்கையின் ஆளுகைக் கட்டமைப்பு மாற்றப்பட வேண்டும். இதில்தான் சிக்கலும் சவால்களும் உள்ளன. எப்படியென்றால், புதிய அரசியலமைப்பை உருவாக்குவதும் அதற்காக பொதுஜனவாக்கெடுப்பில் வெற்றியையும் நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையையும் பெறுவதில் நல்லாட்சி அரசாங்கம் நிச்சயமற்ற நிலமைகளை எதிர்நோக்கியிருக்கின்றது. இந்நிலையில், சமஷ்டி போன்ற ஓர் ஆட்சி முறையை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த முடியுமா என்பது சந்தேகமாகவே உள்ளது.
குறிப்பாக, ஆளும்கட்சி அரசியல்வாதிகள் ஒருசிலரே சமஷ்டியின் சாத்தியமின்மைகள் பற்றி பேசத் தொடங்கியிருக்கின்றனர். எனவே, அரசாங்கமானது மாகாண சபைகளுக்கான அதிகாரத்தை உச்சபட்சமாக அதிகரிக்கும் சாத்தியமே அதிகரித்து வருவதாக அரசியல் அவதானிகள் குறிப்பிடுகின்றனர். அந்த வகையில், இனப் பிரச்சினைக்கான தீர்வு என்ற அடிப்படையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைத்தோ, ஒன்றிணைக்காமலோ ஒரு தீர்வுத்திட்டத்தை முன்வைக்க முடியும். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதை தவிர, நாடளாவிய மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்போ ஏனைய மாகாண சபைகளின் ஒப்புதலோ கட்டாயமில்லை. ஒரு விசேட ஏற்பாடாக அதைச் செய்ய முடியும் என்று விடயமறிந்தவர்கள் கூறுகின்றனர். எனவே, வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து, அதில் தமிழ்பேசும் மக்களுக்கான ஆட்சியதிகாரம் வழங்கப்படுவதற்கு அதிக வாய்ப்பிருக்கின்றது. ஒருவேளை அதில் நிலத்தொடர்பற்ற இரு (தமிழ், முஸ்லிம்) மாகாணங்கள் உருவாகலாம். அல்லது தென்கிழக்கு அலகு என்ற பெயரில் ஒரு சிறிய நிலப்பரப்பு முஸ்லிம்களுக்கு கிடைக்கலாம். இது எதுவும் நடக்காமலேயே காலம் கடந்து போகவும் கூடும்.
ஆனால், சமஷ்டி வந்தாலும், இரு மாகாணங்கள் இணைந்து தீர்வு கிடைத்தாலும், இணையாமல் தீர்வு தந்தாலும் அதற்குள் தமிழர்களுக்கு கிடைக்கின்றதைப் போன்ற நியாயமான ஆட்சியதிகாரம் முஸ்லிம்களுக்கும் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும். தமிழர்களும் முஸ்லிம்களும் மிக நெருக்கமாக வாழ்ந்த அந்தக் காலத்திலேயே தமிழரக் கட்சியானது முஸ்லிம்களுக்கான சுயாட்சியையும் முன்மொழிந்திருக்கின்றது என்றால், இரு இனங்களுக்கும் இடையில் இத்தனை மனக் கசப்புக்கள் ஏற்பட்டு, தனித்தனி இனங்களாக செயற்படத் தொடங்கிவிட்ட இன்றைய காலப்பகுதியில், அவ்வாறு ஒரு சம அதிகார ஏற்பாட்டை வழங்குவதற்கு தமிழ் தரப்பு முன்வர வேண்டியது மேலும் இன்றியமையாததாகி இருக்கின்றது. முஸ்லிம்களின் நியாயங்களை ஏற்றுக் கொண்டும் விடுதலைப் போராட்டத்தின் பக்கவிளைவாக முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட காயங்களுக்கு மருந்து தடவும் முகமாகவும் இதை தமிழ் அரசியல்வாதிகள் மேற்கொள்ள முடியும். அதேபோல், நாடு தழுவிய ரீதியிலான சமஷ்டியோ, பிராந்திய ரீதியிலான சமஷ்டி ஆட்சியோ எது கொண்டு வரப்பட்டாலும் அல்லது வடக்கு, கிழக்குக்ள் பிரத்தியேக தீர்வுத்திட்டம் ஒன்று முன்வைக்கப்பட்டாலும் முஸ்லிம்களுக்கு குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழ்வோருக்கான சம ஆட்சி அதிகாரத்தை உறுதிப்படுத்துவது முஸ்லிம் அரசியல்வாதிகள் எல்லோரினதும் கடமையாகும்.