வவுனியா வடக்கு பிரதேச சபைக்கான உள்ளுராட்சி எல்லை நிர்ணயத்தில் நிலவும் குறைபாடு தொடர்பில் தமிழ்த் தேசிக்கூட்டமைப்பு மாகாண சபைகள், உள்ளுராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபாவிடம் எடுத்துரைத்துள்ளது.
வவுனியா வடக்கு கனகராயன்குளம் மகா வித்தியாலயத்தில் நேற்று (19) நடைபெற்ற தொழிநுட்ப ஆய்வுகூட திறப்பு விழாவுக்கு வருகை தந்த அமைச்சர் பைசர் முஸ்தபாவிடம் இந்தக்கோரிக்கை தமிழ் தேசியக்கூட்டமைப்பினால் முன்வைக்கப்ட்டுள்ளது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட குழுக்களின் பிரதித்தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய செல்வம் அடைக்கலநாதன், வடக்கு மாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் மற்றும் வடக்கு மாகாண சபை சுகாதார அமைச்சரின் சார்பில் அவரது பிரத்தியேக செயலாளர் சத்தியசீலன் அடங்கிய குழுவினர் இந்தக்கோரிக்கையை அமைச்சரிடம் முன்வைத்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வடக்கு பிரதேச சபையுடன் புதிதாக நான்கு வட்டாரங்கள் இணைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தின் நிர்வாக எல்லைக்குள் காணப்படும் சிங்களக்குடியேற்றக் கிராமங்களை உள்ளடக்கிய நான்கு வட்டாரங்கள் கடந்த அரசாங்கத்தினால் வவுனியா வடக்கு பிரதேச சபையின் கீழ் இணைக்கப்பட்டிருந்தன.
வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தின் நிர்வாக பிரதேசத்துடன் நேரடியாக தொடர்புபடாத நிர்வாக ரீதியாக முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள இந்தக்கிராமங்களின் உள்ளுராட்சி மன்றத்தை வவுனியா மாவட்டத்துடன் இணைக்கப்பட்டிருந்தது.
இதனால் நிர்வாக ரீதியில் பாரிய பிரச்சனையை மேற்படி வட்டாரங்கள் எதிர்நோக்கியிருந்த நிலையில் வடக்கு பிரதேச சபையின் 47ஆவது அமர்வில் தாங்கள் வவுனியா வடக்கிலிருந்து பிரிந்து செல்ல சம்மதிப்பதாக தீர்மானமொன்றும் நிறைவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.