சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலைக்கு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவே பொறுப்புக் கூற வேண்டும் என அவுஸ்திரேலியாவில் உள்ள லசந்த விக்ரமதுங்கவின் மகள் விசாரணையாளர்களுக்கு வாக்கு மூலம் அளித்துள்ளார்.
கொலை இடம்பெற சில தினங்களுக்கு முன்னர் தனது தந்தை தன்னிடம் தெரிவித்த விடயங்களை வெளிப்படுத்தியே அவுஸ்திரேலியாவில் வைத்து அவர் இவ்வாறு தமது விசாரணையாளர்களிடம் வாக்கு மூலம் வழங்கியதாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிறப்பு விசாரணை அதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் நிசாந்த டி சில்வா கல்கிசை நீதிவான் நீதிமன்றுக்கு நேற்று அறிவித்தார்.
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை வழக்கு நேற்றைய தினம் கல்கிசை பிரதான நீதிவான் மொஹம்மட் மிஹால் முன்னிலையில் இடம்பெற்றது.
இந் நிலையில் மன்றுக்கு மேலதிக விசாரணை அறிக்கையுடன் முன்னிலையான விசாரணை அதிகாரியான சிறப்பு விசாரணையாளர் பொலிஸ் பரிசோதகர் நிசாந்த டி சில்வா, அவ்வறிக்கையை நீதிவான் மொஹம்மட் மிஹாலுக்கு சமர்ப்பித்து பின் வருமாறு கருத்துகளை முன் வைத்தார்.
நாம் அவுஸ்திரேலியாவில் உள்ள, லசந்த விக்ரமதுங்கவின் மகளிடம் அங்கு சென்று வாக்கு மூலம் ஒன்றினைப் பதிவு செய்தோம். அதில், தனது தந்தை இறப்பதற்கு சில தினங்களுக்கு முன்னர் கூறிய விடயங்களை அவர் வெளிப்படுத்தினார்.
அப்போது தனது தந்தை மிக் விமான கொள்வனவு தொடர்பில் தனக்கு ஆபத்து வரலாம் என தெரிவித்ததாகவும் அவ்வாறு ஆபத்து ஏற்படின் அதற்கு அப்போதைய பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ஷவே பொறுப்புக் கூறவேண்டும் என சுட்டிக்காட்டியதாகவும் தெரிவித்தார்.
அதன் பின்னர் சந்தேக நபர் சார்பிலோ பாதிக்கப்பட்ட தரப்பு சார்பிலோ எந்த கருத்துக்களும் முன் வைக்கப்படாத நிலையில் வழக்கை எதிர்வரும் மார்ச் மாதம் 20 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிவான் மொஹம்மட் மிஹால் அறிவித்தார்.