மு.கா பேராளர் மாநாட்டை கொழும்பில் நடாத்தி தலைநகரின் ஆட்சியை கைப்பற்றப் போகிறதோ ?

  மு.காவின் உயர் பீட கூட்டமொன்று நடைபெறப் போகும் தினம் அறிவிக்கப்பட்டதும் இலங்கை முஸ்லிம் அரசியல் களமே சூடு பிடிக்க ஆரம்பித்துவிடும்.வழமை போன்று 2017-01-02ம் திகதி இடம்பெற்ற உயர் பீடக் கூட்டத்திற்கும் மக்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்புக்கள்  இருந்தன.அனைவரது எதிர்பார்ப்புக்களும் மு.காவிலுள்ள தேசியப்பட்டியல் யாருக்கு வழங்கப்படும் என்பதாவே இருந்தது.எப்படித் தான் எதிர்ப்புகளும்,எதிர்பார்ப்புகளும் இருந்தாலும் அத்தனையையும் தகர்த்தெறிந்து தனது இஸ்டப்படி உயர் பீடக் கூட்டத்தை கையாள்வதில் அமைச்சர் ஹக்கீம் தேர்ச்சி பெற்றவர்.அத் தேர்ச்சியை கடந்த உயர்பீடக் கூட்டத்திலும் அவதானிக்க முடிந்தது.

மு.காவின் பொதுச் செயலாளர் ஹசனலியிற்கும் ஹக்கீமிற்கும் இடையிலான முரண்பாடு அமைச்சர் ஹக்கீம் தன்னிடமுள்ள தேசியப்பட்டியலை ஹசனலிக்கு வழங்க உறுதியளித்த பின்பே முடிவிற்கு வந்ததாக பரவலாக பேசப்பட்டது.2016-12-18ம் திகதி ஞாயிற்றுக்கிழமை வசந்தம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அதிர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் ஹக்கீம் அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் வழங்கப்படாது,ஹசனலிக்கே தேசியப்பட்டியல் வழங்கப்படும் போன்ற கருத்துக்களை மறைமுகமாக வெளிப்படுத்தியிருந்தார்.இது அட்டாளைச்சேனை மக்களிடையே பெரும் அதிர்ச்சியை தோற்றுவித்திருந்தது.அமைச்சர் ஹக்கீம் அட்டாளைச்சேனை மக்களுக்கு பகிரங்கமாகவே தேசியப்பட்டியல் வாக்குறுதியை வழங்கியிருந்தமையும் அதனை எந்த வித சிறு சந்தேகங்களுமின்றி அந்த மக்கள் எதிர்பார்த்திருந்தமையே அவர்களது அதிர்ச்சிக்கான காரணமாகும்.இதனைத் தொடர்ந்து அட்டாளைச்சேனை மக்கள் தீர்க்கமான முடிவை நோக்கியும் அமைச்சர் ஹக்கீமிற்கு அழுத்தம் வழங்கும் நடவடிக்கைகளிலும் இறங்கினர்.

அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாயல் தலைவர் அனீஸ் தலைமையில் அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாயலில் வைத்து தேசியப் பட்டியல் தொடர்பான ஒரு கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டது.அக் கூட்டத்தில் அட்டாளைச்சேனைக்கே தேசியப்பட்டியல் வழங்கப்பட வேண்டும் என கடந்த 2ம் திகதி இடம்பெற்ற உயர்பீடக் கூட்டத்தில் அனைவரும் அழுத்தம் வழங்க வேண்டுமெனவும் அவ்வாறு அமைச்சர் ஹக்கீம் அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியலை வழங்குவதற்கு சாதகாமான பதில் வழங்கவில்லை என்றால் அட்டாளைச்சேனை பிரதேசத்து உயர்பீட உறுப்பினர்கள் அனைவரும் தாங்கள் வகிக்கும் உயர் பீட உறுப்பினர் பதவிகளை இராஜினாமா செய்வதென்றும் முடிவெடுக்கப்பட்டது.இது அமைச்சர் ஹக்கீமிற்கு கிடைத்த சாதாரண அழுத்தமல்ல.இப்படியான நிலையில் குறித்த உயர்பீடக் கூட்டம் இடம்பெற்றமையால் தான் அக் கூட்டத்திற்கு மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பிருந்தது.இருந்தாலும்,குறித்த தினம் இடம்பெற்ற உயர்பீடக் கூட்டத்தில் அமைச்சர் ஹக்கீம் ஹசனலிக்கே தேசியப்பட்டியல் வழங்கவுள்ளதாக கூறியுள்ளார்.இதன் போது அட்டாளைச்சேனை உயர் பீட உறுப்பினர்கள் மிகவும் ஆக்ரோசமாக பேசியும் எந்த பலனும் கிடைக்கவில்லை.அப்போது அமைச்சர் ஹக்கீம் சுழற்சி முறையில் அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் வழங்கப்படும் என்ற பாணியில் கதைத்துள்ளார்.அப்படியானால் எப்போது வழங்கப்படும் எனக் கூறுங்கள் என அவர்கள் கேட்ட போது அதற்கும் அமைச்சர் ஹக்கீமிடமிருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை.அண்மையில் பாலமுனையில் இடம்பெற்ற கூட்டமொன்றிலும் தலைவரின் வாக்குறுதி காலம் தாழ்த்தப்பட்டாலும் நிறைவேறும் என கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.இவைகளும் தற்போதைக்கு அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் கிடைக்காது என்பதை தெளிவாக்குகிறது.

இதன் பின்னர்  அட்டாளைச்சேனை உயர் பீட உறுப்பினர்கள் தங்களது பதவிகளை இராஜினாமா செய்திருக்க வேண்டும்.அவர்கள் யாருமே அவ்வாறு செய்ததாக அறிய முடியவில்லை.அப்படியானால் பள்ளிவாயலில் எடுக்கப்பட்ட முடிவு என்னவானது? அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாயல் தலைவர் பெரிய பள்ளிவாயலில் வைத்தே அனைவரையும் ஒன்று கூட்டி முடிவு எடுத்தது பூச்சாண்டி காட்டவா? அமைச்சர் ஹக்கீம் இன்னும் தேசியப்பட்டியலை யாருக்கு வழங்கப்போகிறேன் என்பதை பகிரங்கமாக வெளிப்படுத்தாததலால் தற்போது அவர்கள் இராஜினாமை செய்யாததற்கான ஒரு நியாயமாக கூறலாம்.இருந்தாலும் அமைச்சர் ஹக்கீம் இன்னும் ஓரிரு நாட்களில் அதனை வெளிப்படுத்தியே ஆக வேண்டும்.அவ்வாறு வெளிப்படுத்தி அட்டாளைச்சேனைக்கு  தேசியப்பட்டியல் கிடைக்காது போகின்ற போது அவர்கள் இராஜினாமா செய்ய வேண்டும்.இருந்தாலும் அங்குள்ளவர்களில் ஒருவர் கூட அவ்வாறு இராஜினாமா செய்ய மாட்டார்கள் என நான் கருதுகிறேன்.தங்களது ஊரிற்கு தேசியப்பட்டியல் கிடைக்காதென நன்கு  உணர்ந்தும் தற்போது பழீல் BA மாத்திரமே தனது முக நூலில் எதிர்ப்பையும் அட்டாளைச்சேனைக்கே தேசியப்பட்டியல் வழங்க வேண்டுமென்றதன் நியாயத்தையும் கூறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.அமைச்சர் ஹக்கீம் ஒரு அரசியல் கட்சியின் தலைவர்.பள்ளிவாயல் என்பது அல்லாவின் மாளிகை.அமைச்சர் ஹக்கீம் ஒரு வாக்குறுதியை வழங்கி மீறுவதை விட பள்ளிவாயலில் வைத்து இராஜினாமா செய்வோம் என்ற வாக்குறுதியை வழங்கி மீறுவது மிகவும் பாரதூரமானது.அமைச்சர் ஹக்கீமின் செயற்பாட்டால் பலர் இறைவனிடத்தில் குற்றவாளியாகப்போகிறார்கள் என்பது மாத்திரம் தெளிவாகிறது.

அமைச்சர் ஹக்கீம் பகிரங்கமாக அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் வாக்குறுதி வழங்கியும் அதனை மீறுவதற்கு அட்டாளைச்சேனை மக்களுக்கு அரசியலில் வேறு தெரிவு இல்லை என்பதும் பிரதான காரணமாகும்.தேசிய காங்கிரஸின் மாகாண சபை உறுப்பினராக உதுமாலெப்பை இருந்தாலும் அவரை அட்டாளைச்சேனை மக்கள் ஏற்றுக்கொண்டதாக இல்லை.அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாகவும் அங்கு ஒரு பலமிக்க நபரில்லை.இன்று அட்டாளைச்சேனையில் சொல்லுமளவு மு.காவிற்கு எதிரான ஒரு அரசியல் கட்சி இருந்திருந்தால் அமைச்சர் ஹக்கீம் அவ்வளவு இலகுவில் அதனை புறக்கணித்திருக்க மாட்டார் கீரை கடைக்கும் எதிர்க்கடை வேண்டுமல்லவா? அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் தேசிய காங்கிரஸ் ஆகியன அட்டாளைச்சேனையில் திடமாக கால் பதிக்க இதுவே தகுந்த நேரமாகும்.இருந்தாலும் அவர்களும் சரியான நகர்வுகளோடு இந் நிலையை பயன்படுத்தியதாகயில்லை.இன்னும் இன்னும் அந்த மக்கள் மு.கா மீது அதிருப்தியை வெளிப்படுத்தாது சார்பு மனோ நிலையை தொடர்வார்களாக இருந்தால் அவர்களுக்கு இந் நிலை தொடரும் என்பதில் ஐயமில்லை.அழுத பிள்ளை தானே பால் குடிக்கும்.

இருந்த போதிலும் இம்முறை அமைச்சர் ஹக்கீம் அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் வழங்க அதிக விருப்பம் கொண்டிருந்தார்.அமைச்சர் ஹக்கீமிற்கு ஹசனலிக்கு தேசிய பட்டியல் வழங்கும் எண்ணம் இருந்திருந்தால் ஹசனலியின் செயலாளர் பதவியின் அதிகாரங்களை குறைத்து அவருடன் விளையாடியிருக்க வேண்டிய அவசியமில்லை.இருந்தாலும் அப் பதவி குறைப்பே அட்டாளைச்சேனை தேசியப்பட்டியலுக்கு ஆப்பு வைத்துள்ளது.மு.காவின் தலைவர் ஒரு நிர்ப்பந்த நிலையிலேயே ஹசனலிக்கு தேசியப்பட்டியலை வழங்குகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.ஒரு தடவை அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியலை வழங்க முடிவு செய்த அமைச்சர் ஹக்கீம் அங்கு  பதாதைகளை ஏற்பாடு செய்யவும் சிலருக்கு பணித்திருந்து இறுதித் தருவாயில் அந் நிகழ்வை புறக்கணித்த சம்பவங்கள் இதனை இன்னும் தெளிவாக்குகிறது.இம் முறை அம்பாறை மாவட்டத்தில் மயிலின் ஆட்டம் மேலோங்கிக்காணப்பட்டது.இதன் காரணமாக மு.கா அங்கு எதிர்கொள்ளும் சிறிய சவாலும் பாரிய விளைவுகளை ஏற்படுத்தலாம்.

அட்டாளைச்சேனை மக்களின் வாக்குகளே மு.காவிற்கு பிரதானமானது.இதன் காரணமாக அமைச்சர் ஹக்கீம் அந்த மக்களின் பல நாள் கனவில் கை வைத்து தனக்கு தேவையான வாக்கை மிக இலகுவாக அள்ளினார்.தேசியப் பட்டியலை குறி வைத்த கிழக்கு மாகாண அமைச்சர் நஸீர் தனது சொந்தப்பணத்தை செலவு செய்து மிகப் பெரும் பிரச்சார வேலைகளிலும் ஈடுபட்டார்.எப்படி அட்டாளைச்சேனை மக்களை திசை திருப்ப தேசியப் பட்டியல் வாக்குறுதி வழங்கப்பட்டதோ அவ்வாறே அமைச்சர் ஹக்கீம் ஹசனலிக்கும் தேசியப்பட்டியல் வாக்குறுதி வழங்கி அவரது சவாலையும் தேர்தலுக்கு முன்பு எதிர்கொண்டிருந்தார்.இல்லாவிட்டால் அவர் வேறு பிரச்சனைகளை கிளறி விட்டிருப்பார்.தேர்தலுக்கு பிறகு மு.கா திருகோணமலை மாவட்டத்தில் தனது ஆசனத்தை இழந்ததால்  அமைச்சர் ஹக்கீமிற்கு  திருகோணமலைக்கு கட்டாயம் தேசியப்பட்டியல் வழங்க வேண்டுமென்ற நிர்ப்பந்தம் ஏற்பட்டது.இதன் காரணமாக ஒன்று ஹசனலிக்கு தேசியப்பட்டியல் வழங்கலாம் அல்லது அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் வழங்கலாம்.அமைச்சர் ஹக்கீம் அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் வழங்க வேண்டுமென கருதி அவர் மூலம் ஏற்படக் கூடிய சவாலை எதிர்கொள்ள முயன்றார்.ஹசனலியின் பலமே அவரது அதிகாரமிக்க செயலாளர் பதவிதான்.அதன் அதிகாரங்களை குறைத்தால் அவர் மூலம் தனக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்ற கணக்கை போட்டார் ஹக்கீம்.இவர் போட்ட கணக்கிற்கு மேலால் விளையாடிய ஹசலியின் ஆட்டங்கள் முன் ஹக்கீமால் நின்று பிடிக்க முடியவில்லை.இறுதியில் தேசியப்பட்டியலை வழங்காது போனால் ஹசனலியின் ஆட்டங்களால் கட்சி சில காலங்கள் முடக்கப்படும்.அதற்குள் உள்ளூராட்சி மன்ற தேர்தல் வந்துவிடும்.மு.காவின் பிரதான பலமே அதன் பாட்டும் சின்னமும் தான்.எனவே,ஹக்கீம் ஹசனலியிடம் சரணடைவதை தவிர வேறு வழி இல்லை.சரணடைந்தார்.தேசியப்பட்டியப்பட்டியலையும் ஒப்படைத்தார்.இதனை நன்கு அறிந்து கொண்டே மாகாண சபை உறுப்பினர் ஜவாத் போன்றவர்கள் ஹசனலிக்கே தேசியப்பட்டியல் வழங்கப்பட வேண்டுமென கூறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஹசனலி இம் மாதம் 9ம் திகதி பாராளுமன்றம் செல்வார் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது.குறித்த தினம் அவ்வாறு எதுவுமே நடைபெறவில்லை.இது மீண்டும் ஹக்கீம் ஹசனலியுடன் மோதலுக்கு தயாராகின்றாரா? என்ற சந்தேகத்தையும் தோற்றுவிக்கின்றது.மறு புறம் தற்போது தேசியப்பட்டிலுக்கு தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ள சல்மான் தனக்கு  உயர்  பதவி கோரி தேசியப்பட்டியலை இராஜினாமா செய்ய மறுப்பதாக கதைகள் ஊசலாடுகின்றன.மீண்டும் ஹக்கீம் ஹசனலியுடன் மோதினால் ஹசனலி நீதி மன்றம் சென்றே நியாயம் தேட வேண்டி வரும்.அவர்,நான் ஒரு போதும் நீதி மன்றம் செல்ல மாட்டேன் என கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.அரசியல் வாதிகளை தாங்கள் சொல்லும்  வாக்கை காப்பாற்றுபவர்களாக கருத முடியாது.ஹசனலி நீதி மன்றம் சென்று யார் பக்கம் தீர்ப்பு வெளியானாலும் ஹசனலி மக்கள் மத்தியில் மிகவும் செல்லாக்காசாகி மாறிவிடுவார்.இவர் தனது செயலாளர் அதிகாரங்களை தேர்தல் ஆணையாளரிடம் சென்று விட்டுக்கொடுத்தமை ஹக்கீம் அணியினருக்கு பலமிக்க ஆதாரமும் கூட.இதனை நன்கு அறிந்து கொண்டு அமைச்சர் ஹக்கீம் ஹசனலிக்கு தேசியப்பட்டியல் வழங்காமல் விடுவதற்கு காய் நகர்த்தலாம்.ஹக்கீம் சாணக்கியவான் அல்லவா? ஹக்கீம் ஹசனலியுடன் சமரசம் பேசிய மறுநாளே ஹசனலி இம் மாதம் 9ம் திகதி பாராளுமன்றம் செல்வார் என்ற செய்தி வெளியாகி இருந்தது.இது ஹக்கீமிற்கு தன் மானச் சிக்கலை ஏற்படுத்தியிருக்கும்.அந்த வகையில் இதனை எதிர்கொள்ள சற்று காலதாமதப்படுத்தலாம்.இருந்தாலும் இராஜினாமா செய்ய வேண்டிய சல்மான் வெளிநாட்டு சென்றுள்ளமை தான் பலத்த சந்தேகத்தை தோற்றுவிக்கின்றது.

அமைச்சர் ஹக்கீம் அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் வழங்குவதை அட்டாளைச்சேனை மக்கள் தங்களது தேசியப்பட்டியலை ஹசனலி பறித்து எடுக்கின்றார் என்ற கோணத்தில் பார்க்கின்றனர்.கடந்த உயர்பீடக் கூட்டத்தில் அமைச்சர் ஹக்கீம்,தான் ஹசனலிக்கு தேசியப்பட்டியல் வாக்குறுதியளித்ததாக ஏற்றுக்கொண்டுள்ளார்.அவ்வாறாக இருந்தால் அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் வழங்குவது எந்தளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதே சம முக்கியதத்துவம் வழங்க வேண்டியது தான் ஹசனலியின் தேசியப்பட்டியல் விவகாரமும்.இம் முறை மு.காவிற்கு இரண்டு தேசியப்பட்டியல் கிடைத்திருந்தது.அமைச்சர் ஹக்கீம்  நினைத்திருந்தால் ஹசனலிக்கும் தேசியப்பட்டியல் வழங்கி அட்டாளைச்சேனைக்கும் தேசியப்பட்டியலை வழங்கியிருக்க முடியும்.இப்போதும் வழங்க முடியும்.அட்டாளைச்சேனை மக்கள் திருகோணமலைக்கு தேசியப்பட்டியல் வழங்கப்பட்ட போது ஏன்  தங்களது எதிர்ப்புக்களை வெளிக்காட்டவில்லை.நீங்கள் கூறிய பிரகாரம் அம்பாறை மாவட்டத்தில் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களையும் எங்களது பெரும் சதவீத வாக்குகளால் வெல்ல வைத்துள்ளோம்.முதலில் எங்களுக்கு தந்துவிட்டு உங்கள் வேலையை பாருங்கள் என அட்டாளைச்சேனை மக்கள் அமைச்சர் ஹக்கீமிடம் அன்று கொத்தித்திருந்தால் இன்று இத்தனை பிரச்சினைகளும் எழுந்திருக்காது.தேர்தலுக்கு முன்பு அமைச்சர் ஹக்கீம் திருகோணமலை மாவட்டத்திற்கு எந்த விதமான வாக்குறுதியையும் வழங்கியிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது (தேர்தல் இடம்பெற்றதன் பின்பு கூறியிருந்தார்).இருந்தாலும் அட்டாளைச்சேனை மக்கள் கொதித்த கொதிப்பில் தேசியப்பட்டியல் தங்களுக்கு வேண்டும் என்று கேட்டு திருந்த வன்னி,குருநாகல்,கம்பஹா,கல்குடாஹ் ஆகிய பிரதேசங்கள் அடங்கிவிட்டன.

அண்மையில் அமைச்சர் ஹக்கீம் கலந்து கொண்டிருந்த அதிர்வு நிகழச்சியில் அட்டாளைச்சேனை தேசியப்பட்டியல் விவகாரம் தொடர்பில் வினா எழுப்பப்பட்ட போது சில மாவட்டங்கள் அரசியல் அதிகாரம் இன்றி இருக்கின்றன என்றே அதற்கான பதிலை ஆரம்பிக்கின்றார்.அமைச்சர் ஹக்கீம் ஹசனலிக்கு தேசியப்பட்டியலை வழங்குகின்ற போது அதிகாரம் குவிந்து காணப்படுகின்ற அம்பாறை மாவட்டத்திற்கே மீண்டும் தேசியப்பட்டியல் செல்லப்போகிறது.அப்படியாக இருந்தால் இக் காரணம் ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல.எனவே,அட்டாளைச்சேனைக்கு தேசியப்பாட்டியல் வழங்கப்படாது விடுகின்ற போது அதற்கான ஒரு நியாயமான காரணத்தை அமைச்சர் ஹக்கீமால் ஒரு போதும் கூற முடியாது போகும்.தற்போது அமைச்சர் ஹக்கீம் தலைமையின் வாக்குறுதி காலம் தாழ்த்தப்பட்டாலும் நிறைவேற்றப்படும் என்ற டயலொக்கை கூறி அட்டாளைச்சேனை மக்களை ஆற்றுதல் படுத்த முனைகின்றார்.இது சுழற்சி முறையில் தேசியப்பட்டியல் வழங்கப்படும் என்பதை மறை முகமாக கூறுகிறது.ஆரம்பத்தில் அமைச்சர் ஹக்கீம் அட்டாளைச்சேனைக்கு  முழு அதிகாரமுடைய தேசியப்பட்டியல் வழங்கப்படுவது போன்றே கதைத்திருந்தார்.தற்போது சுழற்சி முறை யை கதைப்பதே ஏமாற்றும் செயற்பாடு.இருந்தாலும் அமைச்சர் ஹக்கீம் உரிய நபர்களுக்கு தேசியப்பட்டியலை வழங்குவதற்கு காலம் தாழ்த்தியதன் காரணமாக தேசியப்பட்டியல் ஆயுள் காலத்தில் மிகப் பெரும் பகுதி பாழாகிவிட்டது.தற்போது அட்டாளைச்சேனைக்கு சுழற்சி முறையில் தேசியப்பட்டியல் வழங்கப்படுமாக இருந்தால் அது அரை ஆயுட் கால தேசியப்பட்டியலாக கூட இராது.இதனை அட்டாளைச்சேனை மக்கள் ஒரு போது எதிர்பார்க்கவில்லை.அங்கவீனமான பிள்ளையை பெற்று தாலாட்ட எந்த தாயும் விரும்பமாட்டாள்.அதனால் அவளுக்கு சுமையே தவிர நன்மையில்லை.

தற்காலிகமாக தேசியப்பட்டியலை வழங்கி காலத்தை வீணடிக்காது அமைச்சர் ஹக்கீம் சுழற்சி முறையை ஆரம்பத்திலேயே சிந்தித்து முதற் சுற்று தேசியப்பட்டியலை அட்டாளைச்சேனைக்கு வழங்கியிருந்தால் அது மு.காவின் வளர்ச்சிக்கு அபரிதமான பங்களிப்பை செய்திருக்கும். அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் வழங்கப்படுமாக இருந்தால் அது கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் நஸீரிற்கே வழங்கப்படும்.நஸீரிற்கு தேசியப்பட்டியல் வழங்கப்படும் போது அவரது மாகாண அமைச்சு திருகோணமலை அன்வர்,அம்பாறை தவம் ஆகியோரில் ஒருவருக்கு செல்வதற்கான வாய்ப்பே அதிகம்.அமைச்சர் ஹக்கீம் கடந்த பாராளுமன்ற தேர்தல் காலப்பகுதியில் இத் தேர்தலை தொடர்ந்து அக்கரைப்பற்றிற்கு ஒரு பதவி வழங்கப்படுமென கூறியிருந்தார்.அது சுகாதார மாகாண அமைச்சர் பதவி தவத்திற்கு வழங்கப்படும் என்பதை  மையமாக கொண்டு கூறப்பட்டதாக பலரது கணிப்பு இருந்தது.இதன் காரணமாக அவ் அமைச்சு தவத்திற்கு செல்வதற்கான வாய்ப்பே அதிகம்.இதன் போது எழும் மாகாண சபை உறுப்பினர் வெற்றிடத்திற்கு இறக்காமத்தை சேர்ந்த ஜெமீல் காரியப்பர் நியமிக்கப்படுவார்.

அக்கரைப்பற்று மக்கள் நெடுங்காலமாக தாங்கள் பாதுகாத்து வந்த பாராளுமன்ற உறுப்புருமையை கடந்த தேர்தலில் இழந்துள்ளனர்.இதன் காரணமாக அக்கரைப்பற்றில் அமைச்சர் அதாவுல்லாஹ்வின் அடித்தளம் சரிந்துவிட்டதென நினைத்தால் அது தவறு.அந்த மக்கள் தாங்கள் அரசியல் அதிகாரமொன்றை இழந்த வெறியில் உள்ளனர்.இதன் போது தவத்திற்கு ஒரு அமைச்சு பதவி வழங்கப்பட்டிருந்தால் தங்களது இழப்பிற்கு அது சிறியதான ஆறுதலை வழங்கியிருக்கும்.அமைச்சர் ஹக்கீமின் அக்கரைப்பற்றிற்கான வாக்குறுதியும் நிறைவேற்றப்பட்டிருக்கும்.அதாவுல்லாஹ் தான் தங்களது அரசியல் வெற்றிடத்தை நிரப்ப வேண்டும் என்ற அவசியமில்லை.மு.காவினாலும் நிரப்ப முடியும் என்ற நம்பிக்கை அக்கரைப்பற்று  மக்களிடையே பிறந்திருக்கும்.கடந்த பாராளுமன்ற தேர்தலில் மு.கா தவத்திற்கு மாகாண அமைச்சு கிடைக்கும் என்ற தோற்றத்தை ஏற்படுத்தியிருந்ததால் தவத்திற்கு அமைச்சுப் பதவி வழங்கப்படாததன் காரணமாக அந்த மக்கள் மு.காவை சலித்துக் கொண்டுள்ளனர்.அக்கரைப்பற்று மக்கள் மு.காவின் பின்னால் அணி திரள செய்யக் கூடிய சாதக நிலையையும் மு.கா பயன்படுத்த தவறிவிட்டது.

இது போன்று தான் இறக்காமத்து மக்கள் தங்களது ஊரிற்கு ஒரு அரசியல் பிரதிநிதித்துவம் கிடைக்கமாட்டாதா என ஏங்கிக்கிடக்கின்றனர்.இந்த சந்தர்ப்பத்தில் இறக்காமத்திற்கு ஒரு மாகாண சபை பிரதிநித்துவம் வழங்கப்படுமாக இருந்தால் அந்த மக்களுக்கு மு.காவினால் கிடைத்த மிகப் பெரும் வரப் பிரதாசமாக இருந்திருக்கும்.தற்போது ஜெமீல் காரியப்பருக்கு அமைச்சர் ஹக்கீமின் பணிப்பின் பேரில் சுகாதார அமைச்சரின் இணைப்புச் செயலாளர் பதவியை வழங்கி அடக்கி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.இவை இரண்டும் மிக விரைவில் வரலாமென எதிர்பார்க்கப்படும் கிழக்கு மாகாண சபை தேர்தலில் மு.காவின் வளர்ச்சிக்கு அபரிதமான பங்களிப்பை செய்திருக்கும்.இப்படியான பல வளர்ச்சிப்படிகளை அமைச்சர் ஹக்கீம் தவறவிட்டுவிட்டார்.

குறித்த தினம் இடம்பெற்ற அவ் உயர்பீடக் கூட்டத்தில் 2017-02-12ம் திகதி மு.காவின் பேராளர் மாநாட்டை கொழும்பில் நடாத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.தற்போது தேர்தல் நெருங்கும் காலம் என்பதால் இம் மாநாட்டை கிழக்கு மாகாணத்தில் நடாத்தி மு.கா தனது பலத்தை வெளிப்படுத்துவதே பொருத்தமானது.22வது பேராளர் மாநாடு சம்மாந்துறையில் நடைபெற்றது.23 வது பேராளர் மாநாடு  வன்னியில் நடைபெற்றது.24வது பேராளர் மாநாடு தெஹிவளையில் நடைபெற்றது.25வது பேராளர் மாநாடு கொழும்பில் நடைபெற்றது. 26வது பேராளர் மாநாடு கண்டியில் நடைபெற்றது.இம் மாநாடும் கொழும்பில் இடம்பெற்றால் மு.கா கடந்த ஐந்து வருடங்களில் தனது பேராளர் மாநாட்டை கிழக்கிலேயே நடாத்தவில்லை என்பதை பதிவாக்கும்.இம் முறை மு.கா கொழும்பில் பேராளர் மாநாட்டை நடாத்தி கொழும்பு மாநகர சபையை கைப்பற்றப் போகிறதோ தெரியவில்லை.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்

சம்மாந்துறை.