அலி சாஹிர் மௌலானாவிற்கு ஆப்பு..!! மீண்டும் முஸ்லிம் காங்கிரஸில் பசீர் சேகுதாவூத்…!!

அலி சாஹிர் மௌலாவிற்கு ஆப்பு_Fotor

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்

தற்போது மலர்ந்துள்ள நல்லாட்சியின் பின்பு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவிற்கு ஆதரவளித்த பல அரசியல் வாதிகள் தானாக அடங்கி விட்டனர்.இதில் மு.கா இன் தவிசாளர் பசீர் சேகு தாவூதும் ஒருவர் எனலாம்.

 பசீர் சேகு தாவூதின் பல செயற்பாடுகள் மு.காவினை நையப்புடைய வைத்ததுடன் சவாலிற்கும் உட்படுத்தி இருந்தது.2012 ம் ஆண்டு நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மு.கா அரசுடன் இணைந்து கேட்க வேண்டும் என தனது மிகப் பெரிய அழுத்தத்தினை வழங்கினார்.இதில் அவர் தோல்வியினைத் தழுவிய போதும் மு.கா கிழக்கு மாகாண சபையில் அரசுடன் இணைந்து ஆட்சி அமைக்க இவர் மிகப் பெரிய தாக்கம் செலுத்தி இருந்தது மாத்திரமின்றி முதலமைச்சினை விட்டுக் கொடுத்து ஆட்சி அமைக்க இவரின் செயற்பாடுகளே மிகப் பெரிய தாக்கம் செலுத்தி இருந்ததாக மு.கா வட்டாரங்கள் கருத்து தெரிவித்தன.

 இத் தேர்தலில் மு.கா அரசுடன் இணைந்து கேட்காமைக்கு தனது பதிலடியாக தான் வகித்த பிரதி அமைச்சுப் பதவியினை மு.கா தலைவரிடம் எது வித முன்னறிவிப்பும் செய்யாமல் இராஜினாமா செய்தது மாத்திரமின்றி தேர்தல் பிரச்சாரத்தின் மிக நீண்ட காலப்பகுதி மௌனத்தினைக் கடைப்பிடித்து மு.கா இனை ஊடாகப் பற்களுக்குள் அகப்படச் செய்து கிழிக்கக் காராணமானார்.இந்தப் பிரச்சினை நடந்து சில காலம் பின்பு வடக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெற்றது.இத் தேர்தலில் அரசிற்கு வலுச் சேர்க்கும் வகையில் மு.கா இனை அரசோடு இணைய மு.கா இற்கு அழுத்தம் பிரயோகித்தது மாத்திரம் இன்றி அதில் தோல்வி அடைய  மு.கா இன் முடிவினை பிழை எனக் கூறி மு.காயினது தீர்மானத்திற்கெதிராக பகிரங்கமாக ஊடகங்களில் அறிக்கை விட்டார்.

 இவைகள் மாத்திரம் இன்றி மு.கா தலைவரிற்குத் தெரியாமல் அமைச்சுப் பதவியினைப் பெற்று மு.கா தலைவரினை அவமானப்படுத்தினார்.மு.கா தலைவர் அமைச்சர் ஹக்கீமுடன் பல தடவை இவர்  நேருக்கு நேர் முரண்பட்டுக் கொண்டதாக ஊடகங்களில் கதைகள் கசிந்திருந்தன.ஒரு தடவை கூட்டமொன்றில் இவரிற்கும் மு.கா தலைவர் ஹக்கீமிற்கும் இடையிலான பிரச்சினை முற்றி அங்கிருந்த சிலர் நடுவர்கள் வந்து பிரச்சினையினைத் தீர்த்து வைத்ததாகவும் அறிய முடிந்தது.

எனினும்,கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பசீர் சேகு தாவூத் கட்சி மாறாத போதும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜ பக்சவிற்கு ஆதரவளிக்கும் மனப் பாங்கிலே இருந்தார்.அத் தேர்தலில் வாக்களிப்பினைப் புறக்கனித்து மு.காவினது முடிவு பிழையானது என பகிரங்கமாகவே வெளிப்படுத்தினார்.எனினும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜ பக்சவின் தோல்வியின் பின்பு இவர் அரசியலில் இருந்து ஒதுங்குவார் என்றே மு.கா வட்டாரங்களில் அறியக் கிடைத்தது மாத்திரமின்றி வழங்கப்பட்ட அமைச்சு,பிரதி அமைச்சுப் பதவிகளில் இவர் புறக்கனிக்கப்பட்டமை இவரினை மு.கா அரசியலில் இருந்து ஒதுக்க மேற்கொள்ளும் முதற் படியாகவும் பார்க்கப்பட்டது.

முதலமைச்சுப் பதவி நசீர் ஹாபிசிற்கு வழங்கப்பட்டமை கூட இவரினை நலிவாக்கத் தான் என்ற கதை பரவி இருந்தமை குறிப்பிடத் தக்கது.மு.கா இன் செயலாளர் நாயகம் ஜனாதிபதித் தேர்தல் முடிவுற்ற பிறகு கட்சியின் முடிவிற்கு மாற்றமாக செயற்பாட்டோரிற்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனக் குறிப்பிட்டமை கூட இவரினை மையப்படுத்தியே என அரசியல் அவதானிகள் கருத்தி வெளியிட்டனர்.

இவ்வாறு நிலைமைகள் சென்று கொண்டிருந்த போது மட்டக்களப்பு மாவட்டத்தில் மு.கா இற்கு வலுச் சேர்க்கும் வகையில் பசீர் சேகுதாவூதின் ஊரினைச் சேர்ந்த நசீர் ஹாபிசிற்கு முதலமைச்சுப் பதவி வழங்கப்பட்டது.ஏறாவூர் நகர பிதா அலி ஸாகிர் மௌலானா மு.கா இற்கு ஆதரவுப் போக்கினைக் கடைப்பிடித்தார்.இது அனைத்தும் முன்னாள் அமைச்சர் பசீர் செகுதாவூதினை அரசியலில் இருந்து ஒதுக்க ஏதுவான சந்தர்ப்பமாக இருந்தது.அனைவரும் இச் சந்தர்ப்பத்தினை மு.கா தலைவர் இவரினை அடக்கப் பயன்படுத்துவார் என்று நம்பிக்கொண்டிருக்கும் இத் தருவாயில் தற்போதைய நிலமைகளினை நன்கு அவதானிக்கும் போது ஏறாவூர் தொகுதியினை மையப்படுத்தி மு.கா இல் முன்னாள் அமைச்சர் பசீர் சேகு தாவூத் கேட்பார் என்ற நிலமையே உருவாகி வருகிறது.”தான் வானத்திலிருந்து வந்தாவது பாராளுமன்றம் செல்வேன்” எனக் குறிப்பிட்டுள்ளமை அவரின் புதிய அரசியல் பயணம் உறுதியாக திட்டமிடப்பட்டது என்பதை எடுத்துக் காட்டுகிறது.அது மாத்திரமல்ல தனது மக்கள் செல்வாக்கினை எடுத்துக் காட்ட அண்மையில் நடாத்தப்பட்ட பொதுக் கூட்டத்தின் போது இஸ்லாத்தின் மீது தவறான விமர்சனங்களினை முன் வைத்து வரும் ஏறாவூர் சர்மிளா செய்யத்தினை அடக்குவது,தேர்தலில் பசீர் சேகுதாவூத் போட்டி இட்டே பாராளுமன்றம் செல்வது என்ற முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது.

அலி சாஹிர் மௌலான மு.கா பக்கம் தனது விரலினைத் திருப்ப முன்பு திரை மறைவில் எதிர் வரும் பாராளுமன்றத் தேர்தல் மு.கா சார்பாக ஏறாவூர் தொகுதியினை மையப்படுத்தி அலி சாஹிர் மௌலானா போட்டி இடுவதற்கான சில உறுதி மொழிகள் எடுக்கப்பட்டதாக அலி சாஹிர் மௌலானாவின் நெருங்கிய வட்டாரங்கள் மூலமாக அறிய முடிகிறது.முதலமைச்சரினை வரவேற்கும் நிகழ்வில் பேசிய அலி சாகிர் மௌலானா “மு.கா ஆதரவாளர்களும் எனது ஆதரவாளர்களும் ஒன்றிணைந்துள்ளமை மகிழ்ச்சியினைத் தருவதாகக்“ கூறி தான் மு.கா இணைந்துவிட்டேன் என்பதனை மறைமுகமாக குறிப்பிட்டிருந்தார்.“தான் மு.கா இல் இணைந்து விட்டேனா..?? தனக்கு என்ன பதவி மு.கா இல் வழங்கப்படும் என்பதை மு.கா தலைவர் ஏறாவூரில் நடை பெறும் அடுத்த கூட்டத்தில் மக்கள் முன் கூறுவார்”எனக் குறிப்பிட்டிருந்தார்.இப்போது அமைச்சர் ஹக்கீம் ஏறாவூரில் உரையாற்றினால் மு.காவில் அலி சாஹிர் மௌலானாவிற்கான இடத்தினைக் கூற வேண்டும் என்ற இக்கட்டான நிலைமையில் உள்ளார்.இக் கூற்றின் பிற் பாடு நடைபெற்ற பல நிகழ்வுகளிற்கு அமைச்சர் ஹக்கீமிற்கு அழைப்பு விடுக்கப்படுகின்ற போதும் அதில் கலந்து கொள்ளாது புறக்கணித்தே வருகின்றார்.

காத்தான்குடி,ஓட்டமாவடி வந்த அமைச்சர் ஹக்கீம் ஏறாவூர் வருகை தராமை சில வினாக்களினையும் ஏற்படுத்தத்தான் செய்கிறது.இப் புறக்கணிப்பின் மறு பக்கம் அலி சாகிர் மௌலாவினை எதிர் வரும் தேர்தலில் களமிறக்காது முன்னாள் அமைச்சர் பசீர் சேகு தாவூதினை களமிறக்கவே என்ற அச்சம் தற்பொழுது அலி சாகிர் மௌலான ஆதரவாளர்களிடையே எழுந்துள்ளது.தீர்க்கமான முடிவில் அமைச்சர் ஹக்கீம் இருப்பின் தனது முடிவினை வெளிப்படுத்தி இருப்பார்.ஏனெனில்.ஏறாவூரில் முதலமைச்சுப் பதவியில் நசீர் ஹாபிஸ் இருப்பதால் அடுத்த இடத்தில் அலி சாகிர் மௌலானாவே உள்ளார்.எனவே,யாரை களமிறக்குவது..?? என அதிகம் சிந்திக்க வேண்டிய அவசியம் இல்லை.அலி சாஹிர் மௌலானவினை புறக்கணிப்பது மூன்றாம் நபார் ஒருவரின் செல்வாக்கினை அங்கே எடுத்துக் காட்டுகிறது.அலி சாஹிர் மௌலானா தவிர்ந்து ஒருவர் ஏறாவூரில் என்றால் அது முன்னாள் அமைச்சர் பஸீர் சேகு தாவூதினைத் தவிர யாரும் இருக்க முடியாது.இதனை உறுதிப்படுத்தும் வகையில் இவரின் இச் செயற்பாடுகளிற்கு பின்பும் இவர் விடயத்தில் மு.கா மௌனம் காக்கின்றமை தெளிவாக்குகின்றது.முன்னாள் அமைச்சர் பசீர் சேகு தாவூதினை நேரடியாக மு.கா எதிர்க்கும் எண்ணம் கொண்டிருப்பின் ஏன் இற்றை வரை கட்சியின் தவிசாளர் பதவியில் நீடிக்க வைத்துள்ளது..?? கட்சியின் தவிசாளரினைப் புறக்கணித்து வேறு நபரினை ஒரு கட்சி தேர்தலில் களமிறக்குமா..?? அலி ஸாகிர் மௌலானா தரப்புத் தகவல்களின் படி பாராளுமன்றத் தேர்தல் முன்பு உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறுமாக இருந்தால் ஏறாவூர்  நகர சபைத் தேர்தலில் அலி சாஹிர் மௌலானா அணி சுயேட்சையாகவே களறமிங்க முடிவு செய்துள்ளதாகவும் அறிய முடிகிறது. 

அண்மையில் மாகாண சபை உறுப்பினர் ஜெமீல் அவர்கள் முதலமைச்சர் விடயத்தில் சற்று முரண்படவே கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கிய அமைச்சர் ஹக்கீம் இவர் விடயத்தில் இத்தனை பொறுமை காப்பது மு.கா மக்களிடையே இவர்கள் இருவரிற்கும் இடையில் மா பெரும் உண்மை ஏதும் ஒளிந்துள்ளதா..?? என்ற சந்தேகத்தினையும் தோற்றுவித்துள்ளது.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்