இலங்கை முஸ்லிம்கள் ஓர் உயிருள்ள சமூகம் :பேராசிரியர் றமீஸ் அப்துல்லா

பி.எம்.எம்.ஏ.காதர்

இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் நடாத்திய உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஆய்வுப் பொன்விழா மாநாடு-2016) கடந்த 12-11,12,13ஆம் திகதிகளில் கொழுப்பு நடைபெற்றது இங்கு பேராசிரியர் றமீஸ் அப்துல்லா ஆற்றி உரை

இந்தத் தலைப்பு உங்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கக் கூடும். இவ்வாய்வு அமையத்தின் செயலாளர் நண்பர் அஷ;ரஃப் ஷpஹாப்தீன் அவர்கள் உரையரங்கத்திற்கு என்னிடம் தலைப்பைக் கோரியபோது – அதிலும் உடனடியாகக் கேட்டபோது நான் அந்தத் தலைப்பை இப்படித்தான் சொன்னேன். அவர் என்னிடம் முஸ்லிம் சமூகத்திற்கு உயிர் இருக்கிறதா? என்று திருப்பி என்னைக் கேட்டார். இது ஒரு முக்கியமான கேள்வி.

கலை, இலக்கியம், சமூக, அரசியல், பொருளாதார, கலாசார அம்சங்கள் உள்ள சமூகத்தையே உயிருள்ள சமூகம் என நான் வரையறுக்க விரும்புகிறேன். இந்த அம்சங்கள் நம்மிடம் இல்லையா? நாம் ஒரு சமூகம் இல்லையா? நாம் ஒரு தேசியம் இல்லையா? நாம் இவையெல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டவர்கள். நாம் ஒரு உம்மா. முஸ்லிம்கள் அனைவரும் சேர்ந்த ஒரு உலகம் உம்மா – சர்வதேச சமூகம். நாடு, இனம், மொழி, பெரும்பான்மை, சிறுபான்மை வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டவர்கள் நாங்கள். ஆனால், ஒரு நாட்டில் இந்தச் சமூகம் வாழ்கின்றபோது அந்த நாட்டின் கட்டுப்பாட்டிற்கும் இறைமை – அரசியல் ஆதிபத்தியத்திற்கும் உட்பட்டவர்களாக இருப்பர். நாங்கள் இலங்கை முஸ்லிம்களை நோக்கிப் பார்க்கிறபோது அவர்கள் ஒரு சமூகம், அவர்களுக்கு உணர்வும் உயிரும் இருக்கிறது.

இலங்கை யாருக்கும் உரிமையற்ற ஒரு நாடு. இலங்கை பல்வகைமையின் இருப்பிடம். பல்சமூகங்களின் கலவையான நாடு. எல்லா வழிவகைகளிலும் புலம் பெயர்ந்தவர்களின் இருப்பிடம் இது. இங்கு முதலாவது புலம்பெயர்வு சொர்க்கத்தில் இருந்து நடக்கிறது. சொர்க்கத்திலிருந்து ஆதம் நபி இங்கு புலம்பெயர்ந்து வந்திருக்கிறார். தென்னாசிய நாடுகளில் இருந்து பௌத்தர்களும் இந்தியாவிலிருந்து இந்துக்களும் அரேபிய நாடுகளில் இருந்தும் தென்னிந்தியாவில் இருந்தும் முஸ்லிம்களும் மேற்குலகத்திலிருந்து கிறிஸ்தவர்களும் இந்த நாட்டிற்கு வந்திருக்கிறார்கள். யாரும் இது ‘எனது நாடு’ என்று தனியுரிமை கொண்டாட முடியாத ‘சுவனத்தின் பூமி’ இது.

இன்னுமொரு சுவாரஸ்யமான விசயம். இங்கு வந்த பௌத்தர்களும் இந்துக்களும் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் தமிழைப் பேசியிருக்கிறார்கள். நமது ஆராய்ச்சிக்கு அதிகம் உட்படாத தமிழ்ப் பௌத்தம் இங்கு நிலவியிருக்கிறது. இது பற்றிய ஆராய்ச்சிகளை நாம் முன்னெடுக்க வேண்டும். கிறிஸ்தவர்கள் இங்கு வந்து தமிழைப் பேசியது மாத்திரமன்றி தமிழை வளர்த்திருக்கிறார்கள். முஸ்லிம்கள் தமிழோடு ஒன்றித்திருக்கிறார்கள். முதன் முதலில் இங்கு வந்த முஸ்லிம்கள் ‘அரபுத் தமிழ்’ என்ற ஒன்றிலே நாட்டம் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு அரபின் எழுத்து மொழி தெரியும். ஆனால், பொருள் தெரியாது. தமிழ் எழுத்துத் தெரியாது. ஆனால், பொருள் தெரியும். அதனால் அரபு எழுத்திலே தமிழை எழுதி வாசித்திருக்கிறார்கள். அரபுத்தமிழ் என்ற ஒரு தனியான மொழியினை அவர்கள் கொண்டிருக்கிறார்கள்.

அரபும் தமிழும் கலந்த ‘முஸ்லிம் தமிழ்’ ஒன்றை அவர்கள் பேசியும் எழுதியும் வந்திருக்கிறார்கள். ‘இன்ஷh அல்லாஹ் நாளை மஹ்ரிபுக்குப் பின்னர் நிக்காஹ் வீட்டிலே சந்திப்போம்’ என்று சொல்லி இருக்கிறார்கள். இது இலங்கை முஸ்லிம்களுடைய தனித்துவமான மொழி. இது தவிர இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்துக்கு அவர்கள் பெரும் பணியாற்றியிருக்கிறார்கள். யாழ்ப்பாணத்துக்கு பதுறுத்தீன் புலவர் மாத்திரமல்ல் பக்கீர்முகைதீன் புலவர் மாத்திரமல்ல் அல்லது பக்கீர்முகைதீன் புலவருடைய ஏட்டுப் பிரதிகளைச் சோதித்து எழுதிய இலக்கியங்களுக்கு ஆறுமுகநாவலரின் மருகர் வித்துவான் சிரோன்மணிப் பொன்னம்பலப்பிள்ளை எழுதிய பாயிரங்கள் மாத்திரமல்ல. சிங்களவர்கள் செறிந்து வாழ்கிற தென்னிலங்கையிலிருந்து முஸ்லிம்கள் தமிழ் இலக்கியம் செய்திருக்கிறார்கள். அந்தத் தென்னிலங்கை முஸ்லிம்களின் வீட்டு மொழியாகச் சிங்களம் இருக்கவில்லை, தமிழ்தான் இருந்திருக்கிறது. பேருவளையிலே செய்கு முஸ்தபா வலியுல்லாஹ் மெய்ஞ்ஞானப் பாடலைப் பாடியிருக்கிறார். பேருவளை மக்கூனிலே அப்துல் ஹமீது மரைக்கார் தோத்திரபஞ்சம் பாடியிருக்கிறார். கெச்சிமலை அஷ;ரஃப் வலியுல்லாஹ்வைப் பாடியிருக்கிறார்.

புத்தளத்திலே கரைத்தீவு செய்கு அலாவுதீன் புலவர் பாடியிருக்கிறார். கற்பிட்டியிலே அப்துல் மஜீது புலவர் பாடியிருக்கிறார். காலியிலே காதிர் சம்சுதீன் புலவர் பாடியிருக்கிறார். காலி சேகுத்தம்பிப் புலவர் காரணமாலையைப் பாடியிருக்கிறார். அநுராதபுரத்திலே மீராலெவ்வைப் புலவர், நாவலப்பிட்டியிலே அப்துர்ரஹ்மான் புலவர், தெல்தோட்டையிலே கசாவத்தை ஆலிம் புலவர் இப்படி இன்னும் இன்னும் புலவர்கள் தென்னிலங்கையிலே பாட அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, ஒலுவில், சாய்ந்தமருது, நிந்தவூர், கிண்ணியா, மூதூர் என்று பலநூறு புலவர்கள் ‘பட்டாளமே’ கிழக்கிலும் பாடியிருக்கிறது. இதுதான் இஸ்லாமியத் தமிழிலக்கியத்தின் மாண்பு.

இந்தப் புலவர்கள் பொதுமக்கள் இலக்கியத்தைப் பாடியிருக்கிறார்கள். நாம் இன்று சொல்கிற முச்சந்தி இலக்கியத்தின் தோற்றுவாய்களாக அவர்கள் இருந்திருக்கிறார்கள். கிஸ்ஸா, மஸ்அலா, நாமா, முனாஜாத், நொண்டி நாடகம், படைப்போர், புராணபடலம், பக்கீர் பைத், தலைப்பாத்திஹா, ஸலவாத் என்றெல்லாம் நம் புலவர் பெருமக்கள் நமக்கு இலக்கியம் செய்து காட்டியிருக்கிறார்கள். இவற்றின்மூலம் நல்ல இலக்கியத்தைக் கொண்ட ஓர் ஆரோக்கியமான இலக்கியப் பாரம்பரியத்தைக் கொண்ட சமூகம் இல்லையா நாங்கள். ஆனால், இந்தப் பாரம்பரியத்திற்குக் குறி வைத்தவர்கள் விபுலானந்தர், கணபதிப்பிள்ளை, வித்தியானந்தன் என்ற பாரம்பரியம்தான் அவர்கள்தான் உவைஸை உருவாக்கினார்கள். அந்த உவைஸ்தான் இந்த மாநாடுகளுக்குக் காரணமானார். பொதுமக்களிடமிருந்து ஹஸன் மௌலானா போன்ற பெருந்தகைகள் இந்த மாநாட்டுக்குக் கட்டியம் கூறியவர்கள். உலகத்திற்கு இஸ்லாமியத் தமிழிலக்கியத்தின் முதல் மாநாடு பாண்டிருப்பையும் நீலாவணையையும் எல்லைகளாகக் கொண்ட மருதமுனையில்தான் நடந்தது. இதுதான் இந்த வரலாறு.

நவீன இலக்கியத்தில்கூட நமக்கென்றொரு விதியிருக்கிறது. சித்திலெவ்வை, பித்தன், அ.ஸ., கொத்தன் என்று நமக்கொரு புனைகதைப் பாரம்பரியம் இருக்கிறது. முஸ்லிம் பெண்கள் கல்வி கற்கக் கூடாது என்ற காலத்தில் படிக்கின்ற முஸ்லிம் பெண்ணாக இசையையும் ஆங்கிலத்தையும் படிக்கின்ற முஸ்லிம்களாகப் பாழினா, ஹஸன் முதலான பாத்திரங்களை சித்திலெவ்வை உருவாக்கினார். பாதிக்கப்பட்ட பெண்களுக்காக முஸ்லிம் பெண்களின் உரிமைக்காகப் பித்தன் கதை எழுதினார். எம்.எம்.எம். மஹ்ரூப் என்ற தலைசிறந்த ஒரு விமர்சகர் நம்மிடம் இருந்தார். கைலாசபதியின் காலத்தில் அவர் நாவல் இலக்கியம் பற்றிப் பேசத்தொடங்கினார்.

புதுக்கவிதை பற்றிப் பேசினார். இந்த விமர்சனப் பாரம்பரியம் நமக்கிருக்கிறது. நுஹ்மான் இஸ்லாமியர்களுக்குள் மாத்திரமன்றி தமிழ் உலகத்திற்குள்ளே தனக்கென்று தனியான ஒரு இடத்தை உருவாக்கியவர். மொழியியலாக இருக்கட்டும், தமிழிலக்கணமாக இருக்கட்டும், விமர்சனமாக இருக்கட்டும், நவீன கவிதையாக இருக்கட்டும், போராட்டக் கவிதையாக இருக்கட்டும் நுஹ்மானைப் புறந்தள்ளிவிட்டு நாம் பேசிவிட முடியாது. நவீன கவிதையின் இன்னுமொரு கிளையாகக் கிளைத்திருப்பவர். சோலைக்கிளி, றஊப், அம்ரிதா றியாஸ், நௌஷhட் என்று புதிய சிறுகதை சிறகுகளை விரித்த எழுத்தாளர்கள் நம்மிடம் இருக்கிறார்கள். இத்தனையையும் வைத்துக் கொண்டிருக்கின்ற நாங்கள் உயிருள்ள ஒரு சமூகம் இல்லையா?

இந்த மொழி இலக்கிய பாரம்பரியத்திற்கு அப்பாலே எங்களுக்கு என்று ஒரு அரசியல் இருந்திருக்கின்றது. எம்.ஸி. அப்துர்ரஹ்மான், ஏ.எம். ஷரீப், டபிள்யு.எம். அப்துர் ரஹ்மான், என்.எச்.எம்.ஏ. காதர், றாசீக் பரீட், ரி.பி. ஜாயா, பதியுதீன் மஹ்மூத் என்றெல்லாம் தேசிய அரசியலிலே இருந்து அரசியல் செய்த வரலாறு நமக்கு இருக்கிறது. இந்த நாட்டின் வெளிநாட்டு அமைச்சை, கல்வி அமைச்சை நமது தலைவர்கள் பொறுப்புடன் செய்திருக்கிறார்கள். சபாநாயகர் அந்தஸ்தோடு வாழ்ந்திருக்கிறார்கள். முன்னைய சிங்கள மன்னர்களுக்கு ஆலோசகர்களாகவும் சமயக்காரர்களாகவும் அரசவை முதல்வர்களாகவும் முஸ்லிம்கள் இருந்திருக்கிறார்கள். 1980களுக்குப் பின்னர் இந்த நாட்டின் சூழ்நிலை காரணமாகத் தனித்துவ அரசியலுக்குள் புகுந்து அது அஷ;ரஃபுடைய காலத்திற்குப் பின்னர் தனியாக இருந்து பல்தனிக் கட்சிகளாக மாறி இன்று முரண்பாட்டுக்குள் சிக்கியிருக்கிறது. எப்படியிருந்தாலும் நமக்கு என்றொரு அரசியல் பாரம்பரியம் இருக்கிறது. ஆனால், அதனைத் தக்கவைத்துக் கொள்ளத் தெரியாது தத்தளிக்கின்ற அரசியல் சகதிக்குள் நம்மவர்கள் மாட்டி இருக்கிறார்கள். இது நமது பிழை.

நமக்கென்றொரு பொருளாதாரப் பாரம்பரியம் இருக்கிறது. முஸ்லிம்களின் வருகையே வியாபாரத்தோடு ஆரம்பிக்கிறது. கப்பற் போக்குவரத்துப் பாதையில் இலங்கை ஒரு மையமாக இருந்திருக்கிறது. அரபு உலகிலிருந்து வந்தவர்களும் தென்னாசியாவில் இருந்து வந்தவர்களும் இலங்கைக்கு வந்து போயிருக்கிறார்கள். அதற்கு ஆதாரங்களாக அவர்களது ஷpயாரங்கள் இருந்திருக்கின்றன. துறைமுகம் சார்ந்த வியாபாரத்திலும் தாவள வியாபார முறையிலும் பண்டமாற்று வியாபார முறையிலும் முஸ்லிம்கள் அதிகம் சம்பந்தப்பட்டிருக்கிறார். ஏன்? இன்று மற்றவர்கள் காழ்ப்புணர்ச்சி கொள்கின்ற அளவுக்கு நவீன வர்த்தகத்திலே பிரகாசம் மிக்கவர்களாக இருக்கிறார்கள். இப்படியான ஒரு பொருளாதாரப் பாரம்பரியம் நமக்கு இருக்கிறதுதானே.

பிறப்பு முதல் இறப்பு வரை நமது பண்பாடு தனித்துவமா இல்லையா? பிள்ளை பிறக்கப் போகின்றபோது நமது பெண்கள் ‘தலைப்பாத்திஹா’வை ஓதவில்லையா? நமது பிள்ளைகளின் ‘சுன்னத்’தை நாம் பொல்லடித்தும் பாடல்கள்; பாடியும் கொண்டாடவில்லையா? நமது ‘நிக்காஹ்’களுக்குள் எவ்வளவு பாரம்பரியம் இருக்கிறது. கவிஞர் காத்தான்குடி அப்துல் காதர்லெவ்வையிடம் கேட்டுப்பாருங்கள். எம்.எம். சமீம் இதற்கென்று ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். திருமணம் முடித்தவுடன் நாம் ‘வலீமா’ விருந்துபசாரம் செய்யவில்லையா? பிள்ளை பிறந்தவுடன் ‘அகீகா’வைக் கொடுப்பதில்லையா? ‘உழ்ஹியா’ வருடாந்தம் நமக்குரிய கடமையில்லையா? மரணித்தவர்கள் மீது ‘பாத்திஹா’ ஓதி விருந்தோம்பல் செய்வதில்லையா? ‘பித்அத்’ என்ற போர்வையில் எல்லாவற்றையும் தூக்கியெறிந்து நாம் ஒதுங்கிவிட முடியாது. ‘பித்அத்’ பித்அத் தான். ஆனால் விருந்தோம்பலை நிய்யத்தாகக் கொள்ளுங்கள். விருந்தோம்பலைச் செய்யுங்கள். பக்கத்து வீட்டார்களுடனும் மற்ற சமூகத்தார்களுடனும் உறவாக இருங்கள். அவர்களுக்கு நமது உயர்ந்த பண்புகளை வெளிப்படுத்துங்கள். நமது பாரம்பரியத்திலே ஷpயாரத் ஒரு பிரச்சினை தான். அதற்காகத் தென்னிலங்கைப் பிரதேசத்திலும் சிங்கள குக்கிராமங்களிலும் உள்ள ஷpயாரங்களைத் தொலைத்து விடாதீர்கள். இந்தப் பல்லின நாட்டிலே அதுதான் நமக்கிருக்கிற மிகப்பெரிய பாரம்பரிய அடையாளமாகும்.

நமக்குரிய கலைகள் நம்மிடம் இருக்கின்றன. பொல்லடி இருக்கிறது; சீனடி இருக்கிறது; சிலம்படி இருக்கிறது; பெருநாட்களின் விளையாட்டுக்கள் இருக்கின்றன. இந்த விளையாட்டுக்களை நாம் தொலைத்து விடக்கூடாது. இஸ்லாமிய வரலாற்றிலும் பெருநாள் நாட்கள் விளையாட்டுக்களாலும் இசையினாலும் சோபித்து இருக்கிறது. திட்டமிட்ட வகையிலே பெருநாள் நாட்களைக் கொண்டாடுகிற கலாசாரத்தை உய்ப்பிக்கிற ஒரு முறைமை நமக்கு வேண்டும். மற்றவர்களோடு சேர்ந்து வாழ்வதற்கு இது ஒரு முக்கியமான அம்சமாகும். ‘முஸ்லிம் நாடக’ மரபொன்று நம்மிடம் இருக்கிறது. அது நொண்டி நாடகத்தில் தொடங்கினாலும் இந்தப் பல்லூடகங்கள் வருவதற்கு முன்னால் அவற்றின் பல அலைவரிசைகள் வருவதற்கு முன்னால் இலங்கை வானொலியில் முஸ்லிம் நாடக மரபு புறக்கணித்துவிட முடியாததும் கணிப்புக்கு உட்படுத்திப் பார்க்கப்பட வேண்டியதுமாகும். இந்த விடயத்தில் நாம் அவசரமாகக் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது.

நமது பைக்கீர் பைத்துக்களாலும் ஸலவாத்தாலும் ஹஸீதாக்களாலும் இஸ்லாமியக் கீதங்களினூடாகவும் உயிர் பெறுகிற இசைப் பாரம்பரியத்தை நாம் தொலைத்துவிட முடியாது. அவற்றைப் பாடிய இஸ்லாமிய வரலாறு றஸுலுல்லாஹ்வின் காலத்திலேயே இருந்திருக்கிறது. யுத்த வெற்றியின்போது பெருநாள் நாட்களிலும் அவற்றை அவர்கள் பாடியிருக்கிறார்கள். இவ்வளவு வரலாற்றையும் வைத்துக்கொண்டு இந்தப் பாரம்பரிய ஒழுங்குகளையெல்லாம் புறக்கணித்து அரசியல் பிரச்சினைகளாலும் சமயப் பிரச்சினைகளாலும் இயக்கப் பிரச்சினைகளாலும் நமது உயிரை நாம் இழந்து கொண்டிருக்கிறோம். நாமாக நமது உயிரை இழப்பது எந்தவகையில் நியாயமாக முடியும். நமது கரங்களால் நமது அழிவினை நாம் தேடிக்கொள்ள முடியாது.

ஆகவேதான் நமது உயிரைப் பாதுகாக்க வேண்டுமானால் இலங்கை முஸ்லிம்கள் உயிருள்ள சமூகமாக வாழ்ந்ததை ஸ்திரப்படுத்த வேண்டுமானால் – நமது இலக்கியத்தை நமது கலைகளை நமது பாரம்பரியத்தை நாம் மீளப் பேச வேண்டும். நமது பாடல்களைப் பாட வேண்டும். நமது கொண்டாட்டங்களைக் கொண்டாட வேண்டும். பல்லின சமூகத்திற்குச் சமாந்தரமாக நமது கலை, இலக்கிய, அரசியல், பொருளாதார பாரம்பரிய வரலாற்றை மீளக் காட்ட வேண்டும். தனித்துவம் என்ற பெயரில் நம்மை அழித்துவிடாது நமது அடையாளங்கள் மூலம் நமது ஸ்திரத்தை – நமது உயிரைப் பேணிப் பாதுகாப்போம் என்று கூறி விடைபெறுகிறேன்.