உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தாது அரசாங்கம் காலத்தை கடத்துவது ஜனநாயகத்தை மீறும் செயற்பாடாகும்.
ஆகவே வெகுவிரைவில் அரசாங்கம் தேர்தலை நடத்த வேண்டும் என சுயாதீன தேர்தல்கள் ஆணையகத்தின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
தேர்தல்கள் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில், உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என சகல அரசியல் கட்சிகளும் கூறுகின்றன. தினமும் ஒரு கட்சியேனும் தேர்தல்கள் திணைக்களத்தை வந்த வண்ணமே உள்ளன. எனினும் இவர்கள் எம்மிடம் வந்து வலியுறுத்தினாலும் தேர்தலை நடத்தும் அதிகாரம் எம்மிடம் இல்லை.
மக்கள் வரம்பெற்ற பாராளுமன்றமே தேர்தலை எப்போது நடத்துவது என தீர்மானிக்க வேண்டும். எனினும் பாராளுமன்றம் அந்த அதிகாரத்தை உள்ளூராட்சி சபைகள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சிடம் ஒப்படைத்துள்ளது. ஆகவே அமைச்சர் தான் தேர்தலை நடத்துவது தொடர்பில் தீர்மானிக்க வேண்டும்.
அவ்வாறு இருக்கையில் தேர்தல்கள் ஆணையகத்துக்கு தேர்தலை நடத்தும் அதிகாரம் இல்லை. சுயாதீன ஆணைக்குழுவாக கூறினாலும் தேர்தலை நடத்தும் அதிகாரம் எமக்கு இல்லை. உலகில் எந்தவொரு தேர்தல்கள் திணைக்களத்திற்கும் அந்த அதிகாரத்தை வழங்கியில்லை.
ஆனால் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படாது காலத்தை கடத்துவது ஜனநாயகத்தை மீறும் செயலாகும். குறித்த காலத்தினுள் அரசாங்கம் தேர்தலை நடத்தாது உள்ளதை நாமும் விரும்பவில்லை.
வெகு விரைவில் அரசாங்கம் தேர்தலை நடத்தி மக்களின் ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும். காலத்தை கடத்தி ஜனநாயகத்தை மீறும் நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்ளக்கூடாது என்றார்.