அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலா மாவட்ட வாரியாக கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். 4-வது நாளாக இன்று தலைமைக் கழகத்தில் நெல்லை மாநகர், புறநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகிகளிடம் சசிகலா ஆலோசனை நடத்தினார்.
இதற்காக அவர் காலை 10.30 மணிக்கு தலைமை கழகம் வந்தார். அவரை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தம்பித்துரை, பொன்னையன், திண்டுக்கல் சீனிவாசன், எடப்பாடி பழனிச்சாமி, தங்கமணி, கே.பி.அன்பழகன் உள்ளிட்ட அமைச்சர்கள் வரவேற்றனர்.
பின்னர் தலைமை கழக 2-வது மாடிக்கு சென்ற சசிகலா அங்கிருந்தவாறு தொண்டர்களைப் பார்த்து கைகூப்பி வணங்கினார். இரட்டை விரலை காட்டி கை அசைத்தார்.
மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் சசிகலா பேசியதாவது:-
புரட்சித்தலைவர் பிறந்த நாளை மிக எழுச்சியோடு கொண்டாட வேண்டும். புரட்சித்தலைவி அம்மா புகழுக்கு பெருமை சேர்க்கின்ற வகையில் மாதம் ஒருமுறை தெருமுனை பிரசாரத்தில் ஈடுபட வேண்டும். 3 மாதத்துக்கு ஒருமுறை நகர, ஒன்றிய, பேரூர் கழக அளவில் கட்சி நிர்வாகிகளை திரட்டி கட்சி வளர்ச்சி பற்றி ஆலோசனை நடத்த வேண்டும்.
6 மாதத்துக்கு ஒருமுறை மாவட்ட அளவில் நிர்வாகிகளுடன் ஆலோசிக்க வேண்டும். கட்சியில் விசுவாசமாக உள்ளவர்களுக்கு எதிர்காலம் உண்டு. புரட்சித் தலைவி அம்மா எப்படி வழி நடத்தினாரோ, அதேபோல் நானும் வழிநடத்துவேன். உங்கள் உழைப்புக்கு நிச்சயம் மரியாதையும் அங்கீகாரமும் கிடைக்கும்.
அனைவரும் ஒற்றுமையுடன் கட்சி வளர்ச்சிக்கு பாடுபடுங்கள். அ.தி.மு.க. மிகப் பெரிய இயக்கம் ஆகும். இதை யாராலும் பிளவு படுத்த முடியாது. விஷமப் பிரசாரங்களை யாரும் பொருட்படுத்த வேண்டாம். உங்கள் ஆக்கப்பூர்வமான பணிகளை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லுங்கள்.
நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தல் வெற்றிக்கு நீங்கள் பாடுபட வேண்டும்.
இவ்வாறு சசிகலா பேசினார்.
பின்னர் 11.30 மணிக்கு போயஸ்கார்டன் செல்ல காரில் ஏறினார். அப்போது ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்த ராஜேஷ்-நந்தினி தம்பதி தங்களது கைக்குழந்தையை சசிகலாவிடம் கொடுத்து பெயர் சூட்டுமாறு கூறினர்.
சசிகலா காரில் இருந்த வாறே குழந்தையை பெற்றுக் கொண்டு அதற்கு ‘ஜெயலலிதா’ என பெயர் சூட்டி குழந்தையை வாழ்த்தினார்.