பொலிஸ் தடை விதித்த போதிலும் வீதி திறந்து வைக்கப்பட்டது..

க.கிஷாந்தான்

ஹோல்புறுக் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு செல்லும் பிரதான வீதியை திறந்து வைக்க பொலிஸ் தடை விதித்த போதிலும் அவ்வீதியை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஏ.பி.சக்திவேல் 08.01.2017 அன்று காலை திறந்து வைத்தார்.

 

இவ்விடயம் தொடர்பில் மத்திய மாகாண சபை உறுப்பினரிடம் வினவியபோது அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஹோல்புறுக் நகரில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு செல்லும் பிரதான வீதி குன்றும் குழியுமாக காணப்பட்டது.

இதன்போது கடந்த கந்தசஷ்டி காலப்பகுதியில் ஆலயத்திற்கு நான் சென்றிருந்த வேளையில் இவ்வீதியை புனரமைத்து தரும்படி ஆலய பிரதான குருக்கள் உள்ளிட்ட பொதுமக்களும் கோரிக்கைகளை முன்வைத்தனர்.

இதற்கமைவாக நுவரெலியா மாவட்ட பிரதேச செயலகத்துடன் இவ்வீதியை புனரமைக்க அபிவிருத்தி அதிகாரியின் ஊடாக இதற்கான வேலைத்திட்ட செலவினங்கள் பார்க்கப்பட்டது. இதனையடுத்து மத்திய மாகாண சபை உறுப்பினரான நான் எனது பன்முகப்படுத்தப்பட்ட ஒரு தொகை நிதியில் வீதியை புனரமைத்தேன்.

ஆனால் எனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியால் புனரமைக்கப்பட்ட இவ்வீதியை திறந்து வைக்க மேலிடத்திலிருந்து தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக அக்கரப்பத்தனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தொலைபேசி ஊடாக எனக்கு அறிவித்தார்.

இதனையடுத்து நுவரெலியா மாவட்ட செயலாளரிடம் நான் வினவியபோது அவ்வாறான தடைகள் எதும் இல்லை என அவர் தெரிவித்ததாக ஏ.பி.சக்திவேல் ஊடகத்திற்கு தெரிவித்தார்.

இது இவ்வாறிருக்க நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழு இணைத்தலைவராக நான் பதிவியேற்றுள்ளேன். இதனை வரவேற்கும் முகமாகவும் எனக்கு வாழ்த்து தெரிவிக்கும் முகமாகவும் இந்த ஆலயத்தில் பூஜை வழிபாட்டுடன் இவ்வீதியை திறந்து வைக்கவும் வருகை தந்தேன்.

இதன்போது இவ்வாறான கருத்து முரன்பாடுகள் ஏற்பட்டது. நல்லாட்சி அரசாங்கத்தின் 2 பிரதான கட்சிகள் ஒன்றினைந்து செயற்படும் போது மலையக அபிவிருத்தியில் சிறுபான்மை கட்சிகள் கருத்து வேறுபாடுகளை காட்டுகின்றது.

ஆகையால் தயவு செய்து சிறுபான்மை கட்சிகளின் பேரம்பேசும் சக்தியை தக்கவைத்துக்கொள்ள செயல்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.

மக்களின் தேவை உணர்ந்து சேவை செய்வதில் இ.தொ.கா பின்வாங்காது என அவர் மேலும் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து அவ்வீதி மாகாண சபை உறுப்பினரால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்து ஆலய பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றது.

இதன்போது முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் பி.இராஜதுரை, முன்னால் மத்திய மாகாண கல்வி அமைச்சர் அனுஷியா சிவராஜா, முன்னால் நுவரெலியா மாவட்ட பிரதேச சபை பிரதி தலைவர் எம்.சச்சிதானந்தன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.