அரசியல் தீர்வு திட்டம் குறித்து நேரடி பேச்சு வார்த்தைக்கு செல்ல வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தனுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், வடக்கு கிழக்கு இணைப்பு மற்றும் சமஷ்டி ஆட்சி முறையினை தவிர வேறு எந்த யோசனையும் அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டால் அதனை நிராகரிக்குமாறு இரா.சம்பந்தனிடம் இன்றைய தினம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
2016ஆம் ஆண்டின் இறுதிக்குள் தமிழர்களுக்கான தீர்வுத் திட்டம் வழங்கப்படும் என கடந்த ஆண்டு எதிர்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்திருந்தார்.
எனினும், அரசியல் தீர்வு எதுவும் வழங்கப்படாத நிலையில், தீர்வுத் திட்டம் தொடர்பிலான கலந்துரையாடல்களை நடாத்த வேண்டும் என கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதற்கமைய தமிழ் தேசியக் கூட்டமைபின் விஷேட கலந்துரையாடல் ஒன்று கொழும்பில் அமைந்துள்ள எதிர்க்கட்சி தலைவரது உத்தியோகபூர்வ அலுவலகத்தில் இன்றைய தினம் இடம்பெற்றது.
இதில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்,ஏ.சுமந்திரன், தர்மலிங்கம் சித்தார்தன் உள்ளிட்ட கூட்டமைப்பின் உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இதன் போது சமஷ்டி முறைமை மற்றும் வடக்கு கிழக்கு இணைப்பு உள்ளிட்ட தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் தீர்வுத் திட்டம் இல்லாத எந்தவொரு தீர்வையும் அரசாங்கம் முன்வைத்தால், அதனை நிராகரிக்கும்படி கூட்டமைப்பின் தலைமைத்துவத்திற்கு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், கலந்துரையாடல் முடிவடைந்த பின்னர் எதிர்கட்சித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்தார்.
இன்றைய ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் திருப்திகரமான முறையில் நடைபெற்றதாகவும், அனைவரும் தமது கருத்துக்களை சுதந்திரமாக வெளியிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த கருத்துக்களை உள்வாங்கி அதனடிப்படையில் செயல்படுவோம் என தெரிவித்த அவர், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும்வரை ஒற்றுமையுடன் உறுதியாக உழைப்போம் எனவும் கூறியுள்ளார்.
2016ஆம் ஆண்டில் தனது கணிப்பின்படி பல கருமங்கள் நடைபெற்றுள்ளன. பாராளுமன்றம் அரசியலமைப்பு சபையாக மாற்றப்பட்டமை,
புதிய அரசியலமைப்புக்கான யோசனைகளை முன்வைப்பதற்கு அனைத்து கட்சிகளினதும் உறுப்பினர்களை உள்ளடக்கிய வழிகாட்டல் குழு நியமிக்கப்பட்டமை உள்ளிட்ட விடயங்களை இதன் போது அவர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.