ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
நேற்று நடைபெற்ற வெளிச்சம் அரசியல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அமைச்சர் றிசாத் பதியுதீன் ,
வில்பத்து தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள அனைத்துக் குற்றச்சாட்டுகளும் பொய்யானவை. பாதிக்கப்பட்டவர்களும் நானும் முஸ்லிமாக இருப்பதானாலேயே பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகின்றனர்.
நடக்கும் விடயங்களைப் பார்த்தால் இந்த அரசாங்கத்துக்கு இந்தக் கைகளால்தான் வாக்களித்தோமா என்று கேட்கத் தோன்றுகிறது.
ஒரு காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனை சிங்கள ஊடகங்கள் எவ்வாறு விமர்சித்தனவோ அது போன்றே இன்று என்னையும் முஸ்லிம்களையும் விமர்சிக்கின்றன.
22 வருடங்களுக்கு முன்னர் முஸ்லிம்கள் வாழ்ந்த காணிகள் இப்போது காடர்ந்துதானே கிடக்கும்? இந்த நிலையில் அவை வனவளத் திணைக்களத்துக்கு உரியவை என்று பிரகடனப்படுத்தி பிரச்சினை ஏற்படுத்தியுள்ளனர்.
சூழலியலாளர்கள் என்று சிலர் கூறிக் கொள்ளும் சிலர் பணத்தைப் பெற்றுக் கொண்டு இப்படியெல்லாம் செய்கிறார்கள். இதன் பின்னணியில் ஒரு பௌத்த பிக்கு உள்ளார்.
நான் ஜனாதிபதியை தனியாகச் சந்தித்து சில விடயங்களைத் தெரிவித்தேன். மக்கள் இந்த அரசாங்கத்தின் மீது நம்பிக்கையற்று காணப்படுகின்றனர் என்றும் குறிப்பிட்டேன்.
இனவாத சக்திகள் அனைத்தும் இந்த நாட்டு முஸ்லிம் மக்களின் பொருளாதாரத்தை அழித்து அவர்களின் வளங்களை இல்லாமல் செய்வதற்கு கங்கணம் கட்டிச் செயற்படுகின்றனர்.
அரசா்ஙகத்தை விட்டு இன்று வெளியேறுவது என்று கூறுவது சிறு பிள்ளைத்தனமானது. ஆனால், அனைத்து முஸ்லிம் அமைப்புகள், தரப்புகள் இந்த விடயத்தில் ஒன்றுபட்டு தீர்மானம் ஒன்றை மேற்கொண்டால் நாங்கள் நிச்சயமாக வெளியேறுவோம்
இரண்டு வருடங்களாக கத்தித் திரிந்து கொண்டு என் மீது
6 வழக்குகளை பதிவு செய்தும் தோல்வியடைந்தவர்கள்தான் ஆனந்த தேரர் போன்றவர்கள்.
650 ஏக்கர் காணி எனக்கு இருப்பதாக கூறுவோர் உரிய ஆவணங்கள், ஆதாரங்களுடன் சட்ட நடவடிக்கை எடுக்கலாம்தானே? என் மீதான காழ்ப்புணர்ச்சி காரணமாக என்னை வீழத்துவதற்கான சதியே இவை அனைத்தும்
வில்பத்தில் தவறு நடந்துள்ளதுதான். ஆனால், நானோ முஸ்லிம்களோ அந்த தவறைச் செய்யவில்லை. அநுராதபுரம், புத்தளம் பிரதேசங்களைச் சேர்ந்த சிங்களவர்களே இந்த விடயத்தில் சம்பந்தப்பட்டுள்ளனர்.
நான் ஒரு முஸ்லிமாக இருப்பதன் காரணமாகவே எனக்கு இந்த ஆட்சியில் மீள்குடியேற்ற, புனர்வாழ்வு அமைச்சு கிடைக்கவில்லை. இந்த அமைச்சுப் பொறுப்பை எனக்கு வழங்கக் கூடாது என்று சில அரசியல்வாதிகள் அழுத்தங்களைக் கொடுத்திருந்தனர்.
தற்போதைய அமைச்சர் சுவாமிநாதன் கூட முஸ்லிம்கள் விடயத்தில் அக்கறை காட்டவில்லை. இதனையடுத்தே நான் இந்த விடயத்தை ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கவனத்துக்கு கொண்டு சென்று எங்களது மக்களின் பிரச்சினைக்குத் தீர்வை தாருங்கள் எனக் கேட்டுக் கொண்டேன். இதனையடுத்தே வடமாகாணத்துக்கான மீள்குடியேற்ற செயலணி அமைக்கப்பட்டது.
வில்பத்து விவகாரம் தொடர்பில் கொழும்பில் இடம்பெற்ற கூட்டத்தில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் வரவுள்ளதாக கேள்விப்பட்டு நான் மகிழ்ச்சியடைந்தேன். ஆனால், அவர் வரவில்லை. இது தொடர்பில் இங்கு வேறு எதனையும் கூற விரும்பவில்லை.
நேற்று நடைபெற்ற வெளிச்சம் அரசியல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார் , நேற்றைய வெளிச்சம் நிகழ்ச்சியில் வட மாகாண சபை உறுப்பினர் எம். சிவாஜிலிங்கம் அவர்களும் கலந்து கொண்டிருந்தார் இந் நிகழ்ச்சியை சிரேஷ்ட ஊடகவியலாளர் யு.எல்.யாகூப் நெறிப்படுத்தி இருந்தார்