வில்பத்துவில் முஸ்லிம் மக்களோ,ரிஷாட் பதியுதீனோ எந்தவிதமான காடழிப்புக்களிலும் ஈடுபடவில்லை

 

சுஐப் எம் காசிம்

 

 வில்பத்துவில் முஸ்லிம் மக்களோ, அமைச்சர் ரிஷாட் பதியுதீனோ எந்தவிதமான காடழிப்புக்களிலும் ஈடுபடவில்லையெனவும் வில்பத்து சரணாலயத்தை அவர்கள் ஆக்கிரமித்து வீடுகளை அமைத்துள்ளதாகவும் எழுந்துள்ள குற்றச்சாட்டு முற்றிலும் பிழையானதென சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு இன்று (04)  காலை கொழும்பில் இடம்பெற்ற போது வில்பத்து தொடர்பில் ஊடகவியலாளர் ஓருவர் கேட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் ராஜித  இந்த கருத்துக்களை முன்வைத்தார்.

இந்த விடயம் தொடர்பில் அமைச்சர் ராஜித மேலும் கூறியதாவது,

வில்பத்து விவகாரம் தொடர்பில் நாம் தெளிவான நிலைப்பாட்டில் இருக்கின்றோம். இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் மீண்டும் தமது பூர்வீகக் காணிகளிலேயே குடியேற வேண்டும், குடியேற்றப்பட வேண்டும். முஸ்லிம்கள் பூர்வீகக் காணிகளில் வாழ்ந்ததற்கான ஆவணங்களையும் ஆதாரங்களையும் தம் அவர்கள் கொண்டிருக்கின்றனர்.

அமைச்சர் ரிஷாட் மீள்குடியேற்ற விடயத்தில் நிதானமாகவும் மிகச்சரியாகவுமே செயற்படுகின்றார். வில்பத்தை முஸ்லிம்கள் அழிக்கின்றார்கள் என்ற குற்றச்சாட்டை நான் முற்றாக மறுக்கின்றேன் அவ்வாறு எதுவும் இடம்பெறவில்லை எனவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.