அமெரிக்க அதிபராக தனது இறுதி உரையை வரும் ஜனவரி 10 ஆம் தேதி தனது சொந்த நகரான சிகாகோவில் நிகழ்த்தவுள்ளதாக ஒபாமா தெரிவித்துள்ளார். தனது உரையில் 8 ஆண்டு கால வியத்தகு பயணத்திற்காக அமெரிக்க மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்ள உள்ளதாக தெரிவித்தார்.
இந்த வியத்தகு பயணம் குறித்து நன்றி சொல்வதற்கான வாய்ப்பு குறித்து நான் சிந்தித்து வருகிறேன் என்று ஒபாமா தெரிவித்துள்ளார். 220 ஆண்டுகளுக்கு முந்தைய அதிபர் ஜார்ஜ் வாஷிங்டன் உரை நிகழ்த்தியதை முன்னுதாரணமாக கொண்டு தான் பிரிவு உரை நிகழ்த்த உள்ளதாகவும் ஒபாமா தெரிவித்துள்ளார்.
2009 ஆம் ஆண்டு ஜார்ஜ் டபிள்யூ புஷ் தனது இறுதி உரையை வெள்ளை மாளிகையில் நிகழ்த்தியிருந்தார். சிகாகோவில் தான் அமெரிக்க அதிபர் ஒபாமா தனது சட்டப்படிப்பை நிறைவு செய்தார். வெள்ளை மாளிகை வருவதற்கு முன் தனது முதல் இல்லம் சிகாகோதான் என்று ஜனாதிபதியின் குடும்பத்தினர் தெரிவித்து இருந்தனர்.
அமெரிக்க அதிபர் தேர்தலின் போது, ஒபாமா கொண்டு வந்த பல திட்டங்களை ரத்து செய்யப்போவதாக கடுமையாக டொனால்டு டிரம்ப் பிரச்சாரம் செய்த போதிலும், தேர்தல் வெற்றிக்கு பிறகு எந்த பிரச்சினையும் இன்றி அதிகாரம் ஒப்படைக்கப்படும் என்று ஒபாமா கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.