இம்மாதம் நடுப்பகுதியில் ஒரு வாரம் நான் வெளிநாட்டிற்கு செல்லவுள்ளேன். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, முடியுமானால் நல்லாட்சி அரசாங்கத்தை கவிழ்த்து காட்டுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பிரதமர் ரணில் சவால் விடுத்தார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் புது வருட கொண்டாட்டம் நேற்று அலரி மாளிகையில் நடைபெற்றது.
இதன்போது ஊடகவியலாளர்கள் முன்னிலையில் நகைச்சுவைப் பாங்கில் கருத்து தெரிவிக்கும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
2017 ஆம் ஆண்டு புதுவருட கொண்டாட்டம் நேற்று அலரி மாளிகையில் நடைபெற்றது.
இந்த நிகழ்விற்கு ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்களான சஜித் பிரேமதாஸ, ரவி கருணாநாயக்க, ராஜித்த சேனாரத்ன, மலிக் சமரவிக்கிரம, அகில விராஜ் காரியவசம்,தயா கமகே, எம்.எச்.ஏ ஹலீம் உள்ளிட்டவர்களும் தமிழ் முற்போக்கு முன்னணி சார்பாக அமைச்சர்களான மனோ கணேசன், பி. திகாம்பரம், இராஜாங்க அமைச்சர் வீ. இராதாகிருஷ்ணன் ஆகியோரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தி அமைச்சர் ரிஷாத் பதியூதீன், இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பொலிஸ் மா அதிபர் என்.கே இலங்ககோன் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்விற்கு அலரி மாளிகை, பிரதமர் அலுவலகம், சிறிகொத்தாவில் பணிபுரியும் ஊழியர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இதன்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வைபவத்திற்கு வருகை தந்த பலருடன் சுமுகமாக கலந்துரையாடல்களில் ஈடுபட்டார். அத்துடன் பலருடனும் செல்பி எடுத்துகொண்டார். ஊடகவியலாளர்களுகடனும் கலந்துரையாடல்களை மேற்கொண்டார். மேலும் வருகை தந்திருந்த அனைவரும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.
அலரி மாளிகையில் காலை 8.40 மணியளவில் வைபவம் ஆரம்பானது. இதன்போது பாற்சோறு பரிமாறப்பட்டு புதுவருடம் கொண்டாடப்பட்டது.
இதன்போது ஊடகவியலாளர் ஒருவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2017 ஆம் ஆண்டு ஆட்சியை கவிழ்ப்பதாக கூறியிருந்தார்.
இதற்கு பிரதமரின் பதில் என்ன என்று வினவினார். இதற்கு பதிலளிக்கும் போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிடுகையில் ,முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆட்சியை கவிழ்க்க முடியுமானால் இம்மாதம 16 ஆம் திகதியளவில் நான் வெளிநாடு செல்லத்திட்டமிட்டுள்ளோம்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி முடியுமானால் ஆட்சியை கவிழ்த்து காட்டட்டும் என்று சவால் விடுத்தார்.