அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டமாக கொண்டுவரப்படவுள்ள தேர்தல் முறை மாற்றம் தொடர்பான வரைபு யோசனை இன்றைய அமைச்சரவைக் கூட்டத்துக்கு ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
புதிய தேர்தல் முறையை தயாரிப்பதற்கு நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழு அறிக்கையை தயாரித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்துள்ள நிலையில் அந்த வரைபு அறிக்கையே இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்தவகையில் இன்றைய தினம் அமைச்சரவையில் புதிய தேர்தல் முறைக்கு அங்கீகாரம் கிடைக்குமிடத்து வர்த்தமானி அறிவித்தலில் அதனை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும். பின்னர் புதிய தேர்தல் முறை குறித்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமரப்பிக்கப்படும்.
கடந்தவாரம் அமைச்சரவைக் கூட்டத்தின்போது புதிய தேர்தல் முறையை தயாரிப்பதற்காக அமைச்சரவை உபகுழு நியமிக்கப்பட்டது. அந்தக் குழுவில் அமைச்சர்களான கலாநிதி சரத் அமுனுகம, எஸ்.பி. திசாநாயக்க, லக் ஷ்மன் கிரியெல்ல, கபிர் ஹஷீம், சம்பிக்க ரணவக்க, ரவூப் ஹக்கீம், கயந்த கருணாதிலக்க, பழனி திகாம்பரம் மற்றும் ரிஷாத் பதியுதீன் ஆகியோர் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை குறித்த அமைச்சரவை உப குழுவின் உறுப்பினர்கள் ஜனாதிபதி செயலகத்தில் கூடி சிறுபான்மை கட்சிகளின் யோசனைகள் குறித்து ஆராய்ந்திருந்தனர்.
அந்த சந்திப்பின்போது தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருந்தன. யாழ்ப்பாண மாவட்டத்தில் காணப்படுகின்ற 11 தேர்தல் தொகுதிகளில் எந்த மாற்றத்தையும் செய்யாமல் அவ்வாறே விடுவதற்கும் உபகுழுவினால் தீர்மானிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
தேர்தல் முறை மாற்றத்தைப் பொறுத்தவரை இரண்டு தேர்தல் முறைமைகள் குறித்து பரிசீலிக்கப்பட்டுவந்தன. முதலாவது யோசனையானது 196 உறுப்பினர்களை மாவட்ட ரீதியில் தெரிவு செய்யவும் 59 உறுப்பினர்களை தேசிய பட்டியல் ரீதியில் தெரிவு செய்யும் வகையிலும் ஆராயப்பட்டது. அதாவது விருப்பு வாக்கு முறைமை முற்றாக நீக்கப்படுகின்ற அதேவேளை விகிதாசார முறைமை நீக்கப்படாத முறையாக இது காணப்படுகின்றது. இதன்மூலம் தற்போது 225 ஆக இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 255 ஆக உயர்த்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மற்றுமொரு தேர்தல் முறைமையும் முன்வைக்கப்பட்டுள்ளது. அதாவது தேர்தல் தொகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 165 உறுப்பினர்கள், விகிதாசார முறைமையின் பிரகாரம் 90 உறுப்பினர்கள் என்று பகிர்ந்து செல்லும்படி இந்த முறை பரிசீலிக்கப்பட்டது. இந்த முறைமையின் ஊடாகவும் 255 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவதற்கு யோசனை பிரேரிக்கப்பட்டிருந்தது. விகிதாசார முறைப்படி தெரிவு செய்யப்படும் 90 உறுப்பினர்களை பொறுத்தமட்டில் 66 உறுப்பினர்கள் மாவட்ட ரீதியிலும் 24 உறுப்பினர்கள் தேசிய பட்டியல் ரீதியிலும் தெரிவு செய்யப்படும் வகையில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்றைய தினம் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல் முறைமையானது சிறு பான்மை அரசியல் பிரதிநிதித்துவங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்று தெரிவிக் கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது