முஸ்லிம் சுய நிர்ணயம், முஸ்லிம் தேசியம் எனும் பெரும் சுமைகளை சுமந்தவாறு எந்த அரசியல் கட்சிகளினதும் உதவியில்லாமல், இதை மக்களிடம் கொண்டு சென்று எமது எதிர்கால சந்ததிகளின் கௌரவத்துடனான இருப்பு, உரிமை விடயங்களை உறுதி செய்வதில் கிழக்கின் எழுச்சி மிகப்பெரிய சவாலை எதிர்நோக்கியிருந்தது.
இச்சந்தர்ப்பத்தில் ஹஸனலி அவர்களுக்கு கொடுக்கப்படவிருப்பதாக சொல்லப்படும் தேசியப்பட்டியல் மூலம் இவற்றை அடைந்து கொள்ளும் சாத்தியப்பாடுகள் அதிகம் என்பதையுணர்ந்த கிழக்கின் எழுச்சியின் தலைமைத்துவ சபை, பல வாதப்பிரதிவாதங்களின் பின்னர், தற்சமயத்து நிலமைகளைக் கருத்தில் கொண்டு, ஹஸனலி அவர்கள் செயலாளருக்கான முழு அதிகாரங்களைப் பெறுவதுடன், தேசியப்பட்டியலையும் பெற்று பாராளுமன்றம் செல்வது சிலாக்கியமானது என்ற முடிவுக்கு வந்தது.
இதற்கு ஆதரவாக சொல்லப்பட்ட கருத்துக்களில், ஹஸனலி அவர்கள் கிழக்கு வடக்கு முஸ்லிம்களின் பிரச்சினைகளை ஆரம்பத்திலிருந்தே முழுதுமாக அறிந்தும் அனுபவித்தும் வைத்திருப்பவர் என்பதும், முஸ்லிம் காங்கிரஸுக்குள் கட்சி தவறான பாதையில் செல்ல முற்பட்ட வேளைகளில் அதை தனி ஒருவராக எதிர்த்த பல சம்பவங்களும், கிழக்கை வடக்குடன் இணைப்பது, சிலை வைப்பு, காணிப்பிரச்சினை, பொது பல சேனாவின் மீள் நுழைவு, அரசியலமைப்பு மாற்றம், முஸ்லிம் தனியார் சட்டம் போன்ற விடயங்கள் சூடுபிடித்திருக்கும் நிலையில் பாராளுமன்றுக்கு ஒரு கத்துக்குட்டியை அனுப்பி புதினம் பார்க்க வைப்பதை விடவும், தான் சமூகத்துக்குச் செய்த பிழைகளுக்காக வருந்தி, தவறுகளைச் சரி செய்ய முற்படும் அவரை நம்புவதே நியாயமானதாகும் எனும் வாதங்கள் முக்கியமானவை.
இந்நிலமைகளில் சமூகத்தின் பிரச்சினைகளையும் எதிர்பார்ப்புக்களையும் முழுவதுமாக உணர்ந்துள்ள ஹஸனலி அவர்கள் தனது சமூகக் கடமையை நிறைவேற்ற இந்த வாய்ப்பை முழுவதுமாக பயன்படுத்த முன்வருவார் என்பது எமது எதிர்பார்ப்பு.
சிலர் சந்தேகப்படுவது போல், அவர் அவ்வாறு நடந்து கொள்ள தவறமாட்டார் என்பது எமது நம்பிக்கை. தான் ஹகீம் அவர்களுடன் சேர்ந்து பல தவறுகளைச் செய்ததாக சொன்னபோது, நம்பி வாக்களித்த மக்களுக்கு செய்த பிழைகளுக்காக மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டுமென்று அவரிடமே கிழக்கின் எழுச்சி சொன்னது. கிழக்கின் எழுச்சியின் இந்த தைரியத்தையும் நேர்மையையும் அவர் அறிந்தே வைத்துள்ளார்.
அவ்வாறு மக்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றத் தவறினால் கிழக்கின் எழுச்சி தனக்கெதிராக திரும்பவும் தயங்காது என்பதையும் அவர் அறிந்தே வைத்திருக்கிறார்.
சேகு இஸ்ஸதீன் அஸ்ஸுஹூர்
செயலாளர்
கிழக்கின் எழுச்சி