தற்போது பாதிப்புக்குள்ளாகியிருக்கும் மற்றும் பிரச்சினைகளுக்குள்ளாகியிருக்கும் தொல்பொருள் வரலாற்றுப் பிரதேசங்களைப் பாதுகாப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கும்படியும் தொல்பொருள் பிரதேசங்களின் வரலாறு பற்றி மாணவர்களைத் தெளி வூட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படியும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவுறுத்தியுள்ளார்.
எதிர்வரும் ஜனவரி 24 ஆம் திகதிக்கு முதல் இது தொடர்பான அறிக்கையொன்றினை தனக்கு சமர்ப்பிக்கும் படியும் வேண்டியுள்ளார்.
அண்மையில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் அவரது தலைமையில் நடைபெற்ற தொல்பொருள் வரலாற்றுப் பிரதேசங்களைப் பாதுகாப்பது தொடர்பிலான கலந்துரையாடலில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் அங்கு கருத்துத் தெரிவிக்கையில்;
வரலாற்றுப் புகழ்மிக்க தொல்பொருள் பிரதேசங்களின் பிரச்சினைகள் இன்று நேற்று ஆரம்பித்தவையல்ல. கடந்த காலங்களிலும் பல பிரச்சினைகள் இருந்தன. தொல்பொருள் திணைக்களத்தில் மனித வளப் பற்றாக்குறையே காரணமாகும். இந்நிலையில் தற்போது பிரச்சினைகள் உள்ள தொல்பொருள் பிரதேசங்கள் இனங்காணப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும்.
தொல்பொருள் பிரதேசங்களில் வடக்கு கிழக்கில் பாதுகாக்கப்படுவதற்கு பாதுகாப்பு அமைச்சு, நீதியமைச்சு, பௌத்த சாசன அமைச்சு, கலாசார அமைச்சு, தொல்பொருள் திணைக்களம் என்பனவற்றின் அதிகாரிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.
தொல்பொருள் பிரதேசங்களின் வரலாறு அவற்றின் பெறுமதி பற்றி பாடசாலை மாணவர்கள் அறியாதுள்ளனர். எனவே பாடசாலை மாணவர்கள் மாத்திரமின்றி நாட்டு மக்களும் தெளிவுபடுத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்ததுடன் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் படியும் அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளார்.
நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ
கலந்துரையாடலில் கலந்து கொண்ட நீதியமைச்சரும் புத்தசாசன அமைச்சருமான விஜேதாஸ ராஜபக் ஷ கருத்து தெரிவிக்கையில்;
அண்மையில் நான் செங்கலடிக்கு விஜயம் செய்தேன். அங்கு பௌத்த கோபுர பிரதேசமொன்று முஸ்லிம் ஒருவரினால் சட்டவிரோதமாக கையாளப்பட்டு காணி உறுதி எழுதப்பட்டு தமிழர் ஒருவருக்கு விற்கப்பட்டுள்ளது. அந்தக் காணியை கொள்வனவு செய்த தமிழர் டோசர் பண்ணியுள்ளார்.
இதனால் பௌத்த கோபுரம் அழிக்கப்பட்டுள்ளது. கோபுரத்தின் அரைவாசி டோசர் பண்ணப்பட்டுள்ளது. கோபுரத்துக்கு நடுவிலே வேலியும் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது பொலிஸார் அவ்விடத்தில் காவலரண் அமைத்து பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ளார்கள்.
இவ்வாறான பல பிரதேசங்களை பௌத்த குருமார்கள் இனங்கண்டுள்ளார்கள். தொல்பொருள் ஆய்வுத் திணைக்களம் இவ்வாறான பிரதேசங்களை வேலியமைத்து பாதுகாக்க வேண்டும்.
அப்பிரதேசங்கள் புராதன தொல்பொருள் பிரதேசங்கள் என அறிவிப்புச் செய்து அதற்கான அறிவிப்புப் பலகைகள் தொங்கவிடப்பட வேண்டும். தொல்பொருள் திணைக்களம் தனது கடமைகளை சரியாக நிறைவேற்றவில்லை என்றார்.
திருகோணமலை மட்டக்களப்பு, வவுனியா மாவட்டங்களில் தொல்பொருள் பிரதேசங்கள் பாதுகாக்கப்பட வேண்டியுள்ளது என்றும் கூறினார்.
தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர் செனரத் திசாநாயக்க
தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் செனரத் திசாநாயக்கவிடம் இது தொடர்பில் ஜனாதிபதி வினவினார்.
திணைக்களம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் என்ன? எனவும் வினவினார். இதன்போது செனரத் திசாநாயக்க பதிலளிக்கையில்;
வடக்கில் தொல்பொருள் பிரதேசங்கள் இனங் காணப்பட்டு அவற்றை பாதுகாக்க சட்டவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கிழக்கில் அம்பாறையில் தொல்பொருள் பிரதேசங்கள் இனங்காணப்பட்டுள்ளன.
அவற்றுக்கு தொல்பொருள் பிரதேசமென அறிவிப்புப் பலகை இட வேண்டியுள்ளது என்றார்.
இக்கலந்துரையாடலில் மேதானந்த எல்லாவெல தேரர், பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான தயா கமகேயும் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.