லிபியாவின் பயணிகள் விமானத்தை மர்மநபர்கள் கடத்திச் சென்று மால்டாவில் தரையிறக்கியுள்ளனர் !

லிபியாவில் இன்று அப்ரிகியா ஏர்வேசுக்கு சொந்தமான ஏர்பஸ் ஏ320 ரக பயணிகள் விமானம் ஒன்று 118 பயணிகளுடன் செபாவில் இருந்து திரிபோலிக்கு புறப்பட்டுச் சென்றது. ஆனால், விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில், அதில் பயணம் செய்த இரண்டு நபர்கள் விமானத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகக் கூறி விமானத்தை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். 

பின்னர், விமானத்தை மால்டாவில் தரையிறக்கும்படி விமானிகளுக்கு கட்டளையிட்டுள்ளனர். இதனால் பயந்துபோன விமானிகள் விமானத்தை மால்டாவை நோக்கி திருப்பினர். மால்டாவை நெருங்கியதும் விமான நிலைய அதிகாரிகளை தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கி, விமானத்தை தரையிறக்க அனுமதி கோரினர். அனுமதி கிடைத்ததும் விமானம் தரையிறக்கப்பட்டது. விமானம் கடத்தப்பட்டதை அப்ரிகியா ஏர்வேசும் உறுதி செய்துள்ளது. 

இதையடுத்து மால்டா விமான நிலையத்தில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டனர். ரன்வேயில் நிறுத்தப்பட்ட விமானத்தை வீரர்கள் சுற்றி வளைத்துள்ளனர். அவசர கால மீட்புக்குழுவினரும் வரவழைக்கப்பட்டனர். விமானத்தைக் கடத்திய நபர்களின் திட்டம் குறித்து தெளிவான தகவல் கிடைத்ததும் அடுத்த கட்ட நடவடிக்கையை தொடங்க உள்ளனர். இதன் காரணமாக விமான நிலைய வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே, மால்டாவுக்கு வரும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. சில விமானங்கள் இத்தாலியன் தீவுக்கு திருப்பி விடப்பட்டன.