திடீரென்று போர் நிறுத்தத்தை ரத்து செய்ததால் அலெப்போ நகரை விட்டு வெளியேற முடியாமல் பல்லாயிரக்கணக்கான மக்கள் தவிப்பு!

சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தை பதவியில் இருந்து நீக்குவதற்காக கடந்த ஆறாண்டுகளாக உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. அங்குள்ள கிழக்கு அலெப்போ நகரை கிளர்ச்சியாளர்களிடம் இருந்து மீட்பதற்காக கடுமையான சண்டை நடந்து வந்தது. நகரின் பெரும்பான்மையான பகுதிகளை அதிபர் பஷார் அல் ஆசாத்தின் படைகள் மீட்டு விட்டன.

இதற்கிடையே அலெப்போவில் போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், அதிபர் ஆதரவு படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நிறுத்தம் செய்வதற்காக துருக்கியும், ரஷியாவும் முயற்சி மேற்கொண்டன.

அதில் அதிபர் ஆதரவு படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நிறுத்த உடன்பாடு ஏற்பட்டது.

இந்த உடன்பாட்டின்படி கிழக்கு அலெப்போ நகரில் இருந்து கிளர்ச்சியாளர்களும், பொதுமக்களும் வெளியேறி, வடக்கு சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் பிடியில் உள்ள பகுதிக்கு சென்று விட வேண்டும்.

போரினால் காயம் அடைந்த மக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உடனடியாக வெளியேற முன்னுரிமை அளிக்கப்பட்டது. அவர்கள் வெளியேறுவதற்காக 20 பஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டன.

துருக்கி அரசு ஏற்பாடு செய்த இந்த பஸ்களின் மூலம் நேற்று ஒருநாளில் மட்டும் மூன்றாயிரத்துக்கும் அதிகமான மக்கள் வெளியேறியதாகவும், சண்டை நிறுத்தம் அமலுக்குவந்த கடந்த 72 மணி நேரத்தில் சுமார் பத்தாயிரம் மக்கள் வெளியேறியுள்ளதாகவும் இங்குள்ள போர் கண்காணிப்பகம் நேற்று முன்தினம் தெரிவித்திருந்தது.

அலெப்போ நகரம் மீண்டும் அதிபர் படைகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்திருப்பது, அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. இந்த சண்டையில் சிரியாவுக்கு உதவியாக இருந்த ரஷியா மற்றும் துருக்கிக்கு கிடைத்துள்ள வெற்றியாகவும் கருதப்பட்டது.

இருப்பினும், அங்கு இன்னும் சுமார் 50 ஆயிரம் மக்கள் சிக்கித் தவிப்பதாக ஐ.நா. மனிதநேய முகமை கவலை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தற்காலிக போர்நிறுத்தத்தை நேற்று அரசுப்படைகளும் போராளிகளும் மீறி தாக்குதலில் ஈடுபட்டனர். அலெப்போ நகரில் இருந்து மக்களை வெளியேற்ற அளிக்கப்பட்ட காலக்கெடு முடிவடைந்ததாக அறிவிப்பு வெளியானது. 

போராளிகள் வசமுள்ள ஃபுவா மற்றும் கர்பயா நகரில் இருக்கும் பொதுமக்களை வெளியேற்ற வேண்டுமானால், டமாஸ்கஸ் மாகாணத்தில் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கடயா மற்றும் ஸபடானி நகரங்களில் இருந்து போராளிகளை அரசு விடுவிக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டதால் அலெப்போவை விட்டு வெளியேறும் வாயில்கள் அனைத்தும் அடைக்கப்பட்டன.


இதனால், தங்களது வீடுகளை விட்டு வெளியேறி அலெப்போ நகரின் எல்லையோரம் உள்ள சோதனைச் சாவடி அருகே பல்லாயிரக்காண மக்கள் நேற்றிலிருந்து பலமணி நேரமாக நீண்ட வரிசைகளில் காத்திருக்கின்றனர்.

சாப்பிட உணவோ, குடிநீரோ கிடைக்காமல் பலமணி நேரமாக திறந்தவெளியில் கடும்குளிரில் 
காத்திருப்பதால் முதியோர்களும், குழந்தைகளும் உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதாக பலர் குற்றம்சாட்டினர்.

சொத்து, சுகம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை, உடலுறுப்புகள் உருக்குலைந்தும் குண்டுவீச்சில் தங்களது குடும்பத்தினரை பறிகொடுத்தும் அலெப்போவில் வாழ்வதைவிட எங்காவது ஒரு அகதிகள் முகாமில் தங்கிக் கொள்ளலாம் என்ற ஆசையில் நகரைவிட்டு வெளியேற தீர்மானித்ததாக அவர்களில் சிலர் சோகத்துடன் தெரிவித்தனர்.

இதற்கிடையே, பொதுமக்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை பார்வையிட்டு சீர்படுத்த சர்வதேச கண்காணிப்பாளர்களை சிரியா அரசு அனுமதிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் பிரான்ஸ் அரசு தாக்கல் செய்துள்ள தீர்மானத்தின்மீது இன்று வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது, குறிப்பிடத்தக்கது.