தயாரிப்பு பணிகளில் மடிக்கும் திறன் கொண்ட ஐபோன்

ஆப்பிள் நிறுவனம் மடிக்கும் திறன் கொண்ட ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. இதோடு மற்ற நிறுவனங்களையும் இது போன்ற ஸ்மார்ட்போன்களை தயாரிக்க ஆப்பிள் ஊக்குவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
கொரியாவில் இருந்து வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் OLED பேனல்களை தயாரிக்க எல்ஜி நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி வருவதாக கூறப்பட்டுள்ளது. எல்ஜி தயாரிக்கும் OLED பேனல்கள் வளைவதோடு, மடிக்கும் திறனும் கொண்டிருக்குமாம்.
முன்னதாக வெளியான தகவல்களில், சாம்சங் விநியோகம் செய்யும் டிஸ்ப்ளேக்கள் 2017 இல் வெளியாக இருக்கும் வளைந்த ஐபோன்களில் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக எல்ஜி தயாரிக்கும் டிஸ்ப்ளேக்களை, ஆப்பிள் 2018 ஆம் ஆண்டு பயன்படுத்தலாம் என கூறப்படுகின்றது. இந்நிலையில் எல்ஜி நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்திற்கு OLED டிஸ்ப்ளேக்களை அதிகளவில் தயாரித்து வழங்க ஒப்பந்தம் செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
எல்ஜி நிறுவனத்தின் மடிக்கும் டிஸ்ப்ளே வகைகள் ஆப்பிள் நிறுவனம் மட்டுமில்லாமல், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் உள்ளிட்ட நிறுவனங்களுக்கும் விநியோகம் செய்யப்பட இருக்கிறது. இதன் காரணமாக கூகுள் பிக்சல் மற்றும் மைக்ரோசாப்ட் சர்பேஸ் ப்ரோ உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களும் மடிக்கும் திறன் கொண்டிருக்கும் என கூறப்படுகின்றது. இதையடுத்து மற்ற நிறுவனங்களுக்கு டிஸ்ப்ளேக்களை விநியோகம் செய்யும் எல்ஜி நிறுவனமும் இது போன்ற ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.