2020ல் அனைத்தும் வெளிநாடுகளுக்கு சொந்தமானதாக மாறிவிடும்: டலஸ் அழகப்பெரும

2020ல் அனைத்தும் வெளிநாடுகளுக்கு சொந்தமானதாக மாறிவிடும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் மதிப்பிடப்பட்ட பெறுமதி 2.5 பில்லியன் டொலர் என்றும் அதனை 1.1 பில்லியன் டொலருக்கு விற்பனை செய்யப் போவதாகவும் பாராளுமன்ற உறுப்பனர் டலஸ் அழகப்பெரும கூறியுள்ளார்.


அத்துடன் எந்தவித கேள்விப் பத்திரமும் கோராமலே சீனாவிற்கு கொடுக்கப் போவதாகவும், அது நல்லாட்சியின் முதன்மை நோக்கங்களுக்கு எதிரானது என்றும் இன்று பொரள்ளை என்.எம். பெரேரா மத்திய நிலையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது டலஸ் அழகப்பெரும கூறினார். 

துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களின் பாதுகாப்புக்கு இராணுவத்தை இணைத்துக் கொள்வதாக பிரதமர் நேற்று தெரிவித்ததாகவும், இவ்வாறு துறைமுகத்தை விற்பனை செய்யும் போது அதற்கெதிராக எழும் எதிர்ப்புக்களை அடக்குவதற்காகவே இராணுவத்தை இணைத்துக் கொள்வதாகவும் அவர் கூறினார். 

நாட்டின் அனைத்து பொருளாதார இடங்களையும் வெளிநாட்டு மயப்படுத்திக் கொண்டிருப்பதாகவும், அதன் பிரதிபலனாக 2020ம் ஆண்டளவில் பொலிஸ், இராணுவம், சிறைச்சாலை மற்றும் நீதித்துறை தவிர்ந்த அனைத்துமே வெளிநாடுகளுக்கு சொந்தமானதாகியிருக்கும் என்றும் டலஸ் அழகப்பெரும கூறியுள்ளார். 

தற்போது இலங்கை மத்திய வங்கி மற்றும் திறைசேரி என்பன விடுவிக்கப்படாத பிரதேசமாக இருப்பதாகவும், அவற்றை உடனடியாக விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.