ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குள் செயலாளர் நாயகம் தொடர்பில் எழுந்த பிரச்சினைக்கு சுமூக தீர்வு காணப்பட்டது. இன்று (16) காலை தேர்தல் சுயாதீன ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுடன் முஸ்லிம் காங்கிரஸ் தரப்பு கலந்துரையாடியதனையடுத்தே இந்த சமாதானமாக தீர்க்கப்பட்டது.
இதன்படி, கண்டி பேராளர் மகாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் மன்சூர் ஏ. காதர் தொடர்ந்தும் கட்சியின் உயர்பீடச் செயலாளராக செயற்படுவார். ஹஸன் அலி கட்சியின் செயலாளர் நாயகமாக தொடர்ந்து பணியாற்றுவார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் பதவி தொடர்பான சர்ச்சை குறித்து நேரடி விசாரணைக்கு வருகை தருமாறு ஆணைக்குழு இன்று அழைப்பு விடுத்திருந்தது.
இதனையடுத்து கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், செயலாளர் நாயகம் எம்.ரி.ஹசன் அலி உட்படலானோர் மஹிந்த தேசப்பிரிவை சந்தித்து பேசினார்.
இதன்போது செயலாளர் நாயகமான ஹஸன் அலி இந்த விடயத்தில் தான் விட்டுக் கொடுப்புடன் நடந்து கொள்வதாகவும் இது தொடர்பில் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு தான் அனுப்பிய கடிதத்தை வாபஸ் பெற்றுக் கொள்வதாகவும் தெரிவித்தனையடுத்து இந்த விவகாரம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதாக தெரிய வருகிறது.
இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சி தேசியப் பட்டியல் மூலம் தெரிவு செய்யப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். சல்மான் ராஜினாமா செய்துள்ளதாக வெளியான செய்திகளை ஸ்ரீல.முக.கா. வட்டாரங்கள் நிராகரித்துள்ளன.
நன்றி மெட்ரோ