ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் உயர்பீடக் கூட்டம் இன்றிரவு (14) கொழும்பிலுள்ள தாருஸ்ஸலாமில் நடைபெற்ற நிலையில் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட கட்சியின் செயலாளர் நாயகம் எம்.ரீ. ஹஸன் அலி கலந்து கொள்ளவில்லை. இதன் காரணமாக ஹஸன் அலியுடன் கலந்துரையாடலை மேற்கொள்ள முடியாத நிலைமை அங்கு ஏற்பட்டது.
இந்த நிலையில் கட்சியின் அரசியல் பீட உறுப்பினரான ஜவாத் உட்பட்ட சிலர் ஹஸன் அலியுடன் பேசி இந்த விடயத்துக்கு தீர்வு காண வேண்டுமென தங்களது கருத்தை வலியுறுத்தி முன்வைத்தனர். இதன்போது கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்கள், கட்சியின் செயலாளரான ஹஸன் அலியுடன் பேசி பிரச்சினைகளுக்கு தீர்வைக் காண தானும் விரும்புவதாகத் தெரிவித்தார். ஹஸன் அலியை தான் சந்தித்து தனக்கு ஏற்பட்டுள்ள சந்தேகங்கள் தொடர்பில் அவருடன் கலந்துரையாட விரும்புவதாகவும் அங்கு கூறினார்.
இதேவேளை, கண்டி பேராளர் மகாநட்டில் செயலாளராக தெரிவு செய்யப்பட்ட மன்சூர் ஏ காதர் தொடர்பான விடயத்தில் எந்த விட்டுக் கொடுப்பும் இல்லை என்றும் அவரே அதிகாரபூர்வமாக ஆவணங்களில் கையெழுத்திடும் தகுதியைக் கொண்டவர் என்ற விடயமும் அங்கு மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இது இவ்வாறிருக்க, ஹஸன் அலிக்கு தேசியப் பட்டியல் வழங்குவது என்ற முன்னைய நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை என்ற விடயமும் அங்கு மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது. ஆனால், அதனை அவர் ஏற்றுக் கொள்வதில் இரட்டை நிலைத்தன்மை கொண்டவராக காணப்படுகிறார் என்றும் அங்கு கருத்து தெரிவிக்கப்பட்டது. பிறிதொரு முஸ்லிம் கட்சியின் தலைமையே ஹஸன் அலியை வழி நடத்துவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.
பொதுபல சேனாவிடயம் தொடர்பில் அங்கு பேசப்பட்ட போது இந்த விவகாரம் தொடர்பில் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார். ஆனால் சில விடயங்களில் வலிந்து போய் வம்புக்கு இழுக்க முடியாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஏ.எச்.சித்தீக் காரியப்பர்