வங்க கடலில் உருவான ‘வார்தா’ புயல் நேற்று முன்தினம் பிற்பகலில் சென்னையில் கரையை கடந்தது. கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்த புயல் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கோர தாண்டவம் ஆடிவிட்டு கடந்து சென்றுள்ளது.
புயல் கரையை கடந்தபோது 110 கிலோ மீட்டரில் இருந்து 125 கிலோ மீட்டர் வரை காற்று வீசியது. தொடர்ந்து 7 மணி நேரம் வரை வீசிய இந்த புயல் காற்றால் சென்னை உள்பட 3 மாவட்டங்களில் இருந்த பெரும்பாலான மரங்கள் சாய்ந்தன.
சாலை ஓரங்களில் இருந்த மரங்களின் கிளைகள் முறிந்து நடுரோட்டில் விழுந்தன. பல மரங்கள் வேரோடும் சாய்ந்தன. மரங்கள் விழுந்ததில் ஏராளமான வாகனங்களும் சேதமடைந்தன. இதனால் பஸ் போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டது. சுமார் 10 ஆயிரம் மின் கம்பங்கள், 450 டிரான்ஸ்பார்மர்கள் பழுதானதால் நகரம் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
நூற்றுக்கணக்கான பஸ் நிறுத்தங்கள் மற்றும் போக்குவரத்து சிக்னல்கள் ஆகியவை சேதம் அடைந்தன. பல பெட்ரோல் நிலையங்களின் கூரைகள் காற்றில் பறந்தன. வர்த்தக நிறுவனங்களின் பெயர் பலகைகள், வணிக வளாகங்களின் கண்ணாடிகள் போன்றவை நொறுங்கி விழுந்தன.
ரெயில் பாதைகளில் மரங்கள் விழுந்ததாலும், மின் கம்பிகள் அறுந்ததாலும் பல எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. சில ரெயில்கள் மாற்றுப்பாதையிலும், சில தாமதமாகவும் இயக்கப்பட்டன. ஆனால் நகர மக்கள் போக்குவரத்துக்கு பெரிதும் பயன்படுத்தும் புறநகர் மின்சார ரெயில் போக்குவரத்து முற்றிலுமாக தடைபட்டது.
மக்கள் அனைவரும் நாள் முழுவதும் வீடுகளுக்குள்ளேயே இருளில் முடங்கிக் கிடந்தனர். இந்த புயலுக்கு இதுவரை 23 பேர் பலியாகி உள்ளனர். 27 பெண்கள் உள்பட 172 பேர் காயம் அடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட மக்கள் 10,432 பேர் 97 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு, குடிநீர் வழங்கப்பட்டது.
சென்னை நகரம் மற்றும் புறநகர் பகுதிகளிலும் நேற்று 2-வது நாளாக மின்சாரம் இல்லாமல் மக்கள் இருளில் அவதிப்பட்டனர். செல்போன் சேவைகளும் துண்டிக்கப்பட்டது. சில செல்போன் நிறுவனங்கள் சேவை வழங்கினாலும் செல்போன்கள் சார்ஜ் இல்லாமல் செயலிழந்தன. பி.எஸ்.என்.எல். லேண்ட்லைன் தொலைபேசிகள் ஓரளவுக்கு செயல்பட்டன. இதுபோன்ற காரணங்களால் மக்களின் தகவல் தொடர்பு முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது.
மின்சாரம் இல்லாததால் மோட்டார்களை இயக்க முடியாமல் தண்ணீர் இன்றியும், போதுமான குடிநீர் கிடைக்காமலும் மக்கள் அவதிப்பட்டனர். புயல் காற்று தொடர்ந்து வீசியதன் பலனாக சென்னையில் எதிர்பார்த்த மழை பெய்யவில்லை. அதனால் மக்கள் பயந்தவாறு மழை வெள்ளம் எங்கும் தேங்கவில்லை. நேற்று காலை முதல் லேசான தூறல் மட்டும் இருந்தது. சிறிது நேரத்தில் அதுவும் நின்று லேசாக வெயில் தலைகாட்டத் தொடங்கியது.
முக்கிய சாலைகளில் விழுந்த மரங்களை ஊழியர்கள் உடனுக்குடன் மின்சார அறுவை எந்திரங்கள் மூலம் வெட்டி அப்புறப்படுத்தினர். அவை துண்டுதுண்டாக வெட்டப்பட்டு சாலை ஓரத்தில் குவிக்கப்பட்டன. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து தொடங்கியது. நேற்று காலையில் குறைவான அளவில் இயக்கப்பட்ட மாநகர பஸ்கள், மாலையில் முழுவீச்சில் இயங்கின.
ஆனால் உட்புற சாலைகளில் மரங்கள் அப்புறப்படுத்தப்படாமல் இருந்தன. கடந்த ஆண்டு மழை வெள்ளம் தந்த அனுபவம் காரணமாக இவைகளை அந்தந்த பகுதி இளைஞர்களும், பொதுமக்களுமே சேர்ந்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
கடற்கரை-தாம்பரம் மின்சார ரெயில் பாதையில் இன்னும் சீரமைப்பு பணிகள் முழுமை அடையாததால் நேற்று 2-வது நாளாக மின்சார ரெயில் போக்குவரத்து தடைபட்டது. இந்த பாதையில் உயர்மட்ட மின்சார கம்பிகளில் ஏற்பட்டுள்ள சேதத்தை சீரமைத்து, போக்குவரத்தை தொடங்குவதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. நேற்று மாலை எழும்பூரில் இருந்து தாம்பரம் வரை சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டது.
சென்டிரல்-கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை மற்றும் சென்டிரல்-திருவள்ளூர், அரக்கோணம் மார்க்கத்தில் முழுமையாக சீரமைக்கப்பு பணிகள் முடிந்து நேற்று காலை முதல் மின்சார ரெயில் போக்குவரத்து தொடங்கியது. கடற்கரை-வேளச்சேரி இடையே பறக்கும் ரெயில் மார்க்கத்தில் ஏற்பட்ட சேதங் கள் சீர்செய்யப்பட்டன. இந்த மார்க்கத்தில் மின்வாரியத்திடம் இருந்து மின்சார சப்ளை பெறப்பட்டதும் ரெயில் போக்குவரத்து தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புயல் காரணமாக முதல் நாளில் முடங்கிய விமான போக்குவரத்து நேற்று காலை முதல் மீண்டும் தொடங்கியது.
பழுதான மின்கம்பங்கள் மற்றும் டிரான்ஸ்பார்மர்களை சரிசெய்யும் பணிகளில் 6 ஆயிரம் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் பலர் வெளிமாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்டவர்கள். இதன் காரணமாக நேற்று பகலில் சில இடங்களில் மின் இணைப்பு சீரானது. ஆனாலும் பல இடங்களில் மக்கள் நேற்று 2-வது நாளாக இருளில் மூழ்கினர். ஓரிரு நாட்களில் மின்சார நிலைமை முழுவதுமாக சீராகிவிடும் என்று தெரிகிறது.
அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று மிலாது நபியை முன்னிட்டு விடுமுறை என்பதால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. ஆனாலும் பல தனியார் நிறுவனங்கள் நேற்று வழக்கம்போல இயங்கின. காலையில் பஸ் போக்குவரத்தும், மின்சார ரெயில் போக்குவரத்தும் முழுமையாக நடைபெறாததால் ஆட்டோக்கள் மற்றும் ஷேர் ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது.
வங்கிகளுக்கும் விடுமுறை என்பதால் மக்கள் பணம் எடுப்பதற்கு மிகவும் சிரமப்பட்டனர். பெரும்பாலான ஏ.டி.எம்.கள் மூடப்பட்டு இருந்தன. திறந்திருந்த சில ஏ.டி.எம்.களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
தமிழக அரசின் தீவிரமான நிவாரண பணிகள் காரணமாக நிலைமை ஓரளவு சீரடைந்து இயல்பு நிலை திரும்பி வருகிறது. ஆனாலும் ‘வார்தா’ புயலின் சேதம் மிகக் கடுமையானது என்பதால் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப ஓரிரு நாட்கள் ஆகும் என தெரிகிறது.