பாகிஸ்தான் தன்னாட்டில் உள்ள பயங்கரவாதிகளுக்குப் புகலிடம் அளித்து வருவதை நிறுத்துவதற்காக வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும்என்று அமெரிக்கா கண்டிப்புடன் வலியுறுத்தியுள்ளது.
அமெரிக்க பாதுகாப்பு செயலர் ஆஷ்டன் கார்ட்டர் ஜப்பானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கிருந்து இந்தியாவுக்கு நேற்று புறப்பட்ட அவர் விமானத்தில் தன்னுடன் பயணித்த செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
ஆஷ்டன் கார்ட்டர் கூறியதாவது:
ஆப்கானிஸ்தானை நிலைகுலைய வைத்ததுடன், அங்கு பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்ட அமெரிக்க மற்றும் அதன் கூட்டணி நாடுகளின் வீரர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய பயங்கரவாதிகளுக்கும்,
இந்தியாவைக் குறித்துவைத்துக் தாக்கும் பயங்கரவாதக் குழுக்களுக்கும் புகலிடம் அளிப்பதை பாகிஸ்தான் தொடரக் கூடாது.அந்த வகையான பயங்கரவாதமானது பாகிஸ்தானுக்கும் அபாயகரமாக உள்ளது என்பதை அந்நாட்டுத் தலைவர்களிடம் நான் ஏற்கெனவே தெரிவித்துள்ளேன்.
இந்த உண்மையை பாகிஸ்தான் அங்கீகரிப்பது முக்கியமாகும். பாகிஸ்தான் இவ்வாறு தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வது என்பது வரலாற்றுச் சிறப்பு மிக்கதாக அமையும். அதை அவர்கள் செய்வார்கள் என்று நம்புகிறேன் என்றார் கார்ட்டர்.