ஆப்பிள் ஐபோன் 6 பேட்டரிகள் வெடித்தமைக்கான முக்கிய காரணம் வெளியானது !

iphone_6_plus_review_hero_0
சீன நுகர்வோர் பாதுகாப்பு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு சமூக வலைத்தளங்களில் பெரிதும் குற்றம்சாட்டப்பட்ட ஐபோன் 6 பேட்டரி வெடிப்பு சம்பவங்களுக்கு வெளிப்புற காரணிகள் தான் முக்கிய காரணமாக இருக்கக் கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 
ஷாங்காய் நுகர்வோர் மன்றம் வெளியிட்ட அறிக்கையில் எட்டு ஐபோன் 6 போன்களின் பேட்டரி வெடித்ததாக குறிப்பிட்பட்டுள்ளது. ஐபோன் 6 பேட்டரிகளில் சார்ஜ் இருந்தும் ஸ்விட்ச் ஆஃப் ஆன அனைத்து போன்களும் நவம்பர் 20 ஆம் தேதி வெளியிடப்பட்டவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
பேட்டரிகள் வெடித்த ஐபோன் 6 போன்களை முழுமையாக ஆய்வு செய்ததில் அவை வெடித்து சிதற வெளிப்புற சேதங்கள் தான் முக்கிய காரணம் என ஆப்பிள் செய்தி தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஐபோன் 6 சார்ஜிங் கோளாறுகளுக்கான காரணங்களை முழுமையாக அறிந்து கொள்ள ஆய்வு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
சீனாவில் அதிக சிறப்பம்சங்கள் கொண்ட ஸ்மார்ட்போன்களின் விலை குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால் ஐபோன்களின் விற்பனை கடந்த மூன்று காலாண்டுகளில் சரிவை சந்தித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. எனினும் ஐபோன் 7 விற்பனை மூலம் இந்த நிலை மாறும் என ஆப்பிள் நிறுவனம் எதிர்பார்க்கிறது. 
ஆப்பிள் நிறுவனத்தை போன்றே சாம்சங் நிறுவன ஸ்மார்ட்போன்களின் விற்பனையும் சரிந்திருக்கின்றன. சாம்சங் கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட்போன்கள் வெடித்துச் சிதறியதும், அந்நிறுவனம் அந்த மாடல் ஸ்மார்ட்போன்களை திரும்ப பெற்றதுமே இதற்கு முக்கிய காரணம் ஆகும்.