ஜெயலலிதா மறைவை அடுத்து, தமிழகத்தின் புதிய முதலமைச்சராக ஓ. பன்னீர் செல்வம் பதவியேற்றார். தமிழக ஆளுநர் பொறுப்பு வகிக்கும் வித்யாசாகர் ராவ் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
ஆளுநர் மாளிகையில் திங்கள்கிழமை இரவு ஒரு மணிக்குப் பிறகு நடைபெற்ற நிகழ்ச்சியில் பதவியேற்பு நடைபெற்றது.
ஓ.எஸ். மணியன், செல்லூர் ராஜு, கருப்பண்ணன், எடப்பாடி பழனிச்சாமி, ஜெயகுமார், சி.வி. சண்முகம், எம்.சம்பத், உடுமலை ராதாகிருஷ்ணன், காமராஜ் உள்ளிட்டர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.
பெரும்பாலும் ஏற்கெனவே இருந்தவர்களே மீண்டும் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ளனர். புதிய முதலமைச்சர் பொறுப்பேற்கும்போது, அந்த அமைச்சரவை முறைப்படி பதவி விலக வேண்டும். புதிய முதல்வர் பொறுப்பேற்ற பிறகு அமைச்சர்களும் புதிதாகப் பதவியேற்க வேண்டும்.
நள்ளிரவுக்குப் பிறகு, அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், ஓ. பன்னீர் செல்வம், சட்டப்பேரவைக் கட்சியின் புதிய தலைவராக ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஜெயலலிதா உடல், மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்ட பிறகு ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெற்றது.