போதைப் பொருட்கள் இலங்கைக்குள் கடத்தி வரப்படுவதைக் கட்டுப்படுத்த கடலோரக் காவல் நிலையம்!

_92816115_lanka2

கடற்படையினரும், பொலிஸாரும் இணைந்து காவல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு வசதியாக, கடலோரக் காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு பொலிஸ் நிலையத்திற்கு இரண்டு சுற்றுக்காவல் படகுகளும் கையளிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்தார். 

கடல் வழியாக ஹெராயின், கேரள கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் இலங்கைக்குள் கடத்தி வரப்படுவதைக் கட்டுப்படுத்துவதற்காக அரசு எடுத்துள்ள நடவடிக்கையின் ஓர் அங்கமாகவே இந்தக் கடலோர காவல் நிலையம் அமைக்கப்பட்டிருக்கின்றது. 

இதேவேளை, மன்னார் நகர்ப்பகுதியில் 24 மணிநேர கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொள்வதற்காக சிசிடிவி கேமரா பொருத்தப்பட்ட கண்காணிப்பு நிலையம் ஒன்றும் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. 

நாட்டின் தென்பகுதிக்குக் கொண்டு செல்லப்படுவதற்காக மன்னார் ஊடாக கடல் வழியாக, கஞ்சா மற்றும் ஹெராயின் போதைப்பொருட்கள் கடத்தி வரப்படுவது அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. போதைப் பொருள் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த பலர் பொலிஸாராலும் கடற்படையினராலும் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்ற பின்னணியிலேயே மன்னாரில் இந்த கடலோர காவல் நிலையமும், கண்காணிப்பு மையமும் திறந்து வைக்கப்பட்டிருக்கின்றன. 

(பிபிசி)