ஒரு போராளியின் டயரி

  ஹக்கீமுக்கும் ஹஸன் அலிக்கும் இடையிலான பிரச்சினை ஏற்பட்டு ஒரு வருடம் ஆகிய நிலையில் இன்னும் தீர்கப்படாமல் காலம் கடத்தும் செயலாகவே தொடர்கிறது. கட்சியை வளர்த்து தொடர்ந்து கட்சியை காப்பாற்றி வந்த ஒரு மூத்த போராளியான ஹஸன் அலி மீது யாரிடமும் கேட்காமல், கலந்தாலோசிக்காமல் அவர் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையை ஒரு படுமோசமான நம்பிக்கை துரோகமான அரசியல் பழிவாங்கலாகவே கருதவேண்டியுள்ளது.

rauff hakeem hasan ali basheer slmc
இம்முறையோ அல்லது சென்ற முறையோ ஹஸன் அலி தேசிய பட்டியல் கேட்கவில்லை. தேர்தலில் இம்முறை போட்டியிடுவதற்குத்தான் கேட்டார். ஆனால் ஹக்கீம் தான் வலுகட்டாயமாக தேசிய பட்டியலில் முதலாவதாக பெயரை போடுமாறு கேட்டு கொண்டார். சல்மானை அவரின் வீட்டுக்கு அனுப்பி ஐ.தே.க. க்கு அனுப்பும் தேசியப்பட்டியலின் ஐவரின் பெயர் அடங்கிய கடிதத்தில் அவருடைய சம்மதத்தை பெற்று ஐ.தே.க. வுக்கு அனுப்பி வைத்தார்.

இதன் அடிப்படையில் மு.கா. பட்டியலில் முதலாம் இடத்திலும் ஐ.தே.க. யினால்; தேர்தல் அலுவலகத்துக்கு அனுப்பிய பட்டியலில் ஆறாவது இடத்திலும் ஹஸன் அலியின் பெயரும் உள்வாங்கப்பட்டது. தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் மு.கா. வுக்கு ஹஸன் அலியும் நிஸாம் காரியப்பரும் ஐ.தே.க தேசியப்பட்டியல் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் தேர்தல் முடிந்த கையுடன் கட்சியின் அனுமதியின்றி, எவ்வித அறிவுப்புமின்றி, எவ்வித கலந்தாலோசனையுமின்றி, கண்மூடித்தனமாக ‘நம்பிக்கையின் அடிப்படையில்’ எனும் பெயரில் தனது சகோதரனின் பெயரையும் நண்பரின் பெயரையும் வழமையான வியாபார நோக்கத்துக்காக ஹக்கீம் பரிந்துரைத்தார்.
இரண்டு கிழமையின் பின் ஹஸன் அலியை காணாத ஹக்கீம் அவரின் வீடு தேடி சென்று நடந்தவற்றை விபரித்தார். அதற்கு ஹஸன் அலி, நீங்க என்ன சொன்னாலும் எனக்கு ஒரு நம்பிக்கை மோசடியை செய்து விட்டீர்கள். நான் இந்த கட்சியை வளர்த்தவன் . நாங்கள் செய்த தியாகங்கள் உங்களுக்கு தெரியாது. நான் நினைத்தேன் இது என்னுடைய ஓய்வு பெறும் காலம் என்பதனால் என்னுடைய கட்சிக்கான பங்களிப்புக்கு ஒரு விழா எடுத்து கட்சிகான எனது ஓய்வு காலத்தை அனுமதிப்பீர்கள் என்று நினைத்தேன். ஆனால் எனது கன்னத்தில் அறைந்து கட்சிக்கு வெளியே தள்ளியுள்ளீர்கள், கட்சியின் அசாதாரன சூழ்நிலை காரணமாக டம்மி போடுவதென்றாலும் அல்லது என்னை பாராளுமன்றத்துக்கு அனுப்புவது இல்லை என்றாலும் என்னுடன் கலந்தாலோசித்திருக்க வேண்டும்.
என் விடயத்தில் உங்கள் வீட்டில் வேலை பார்கும் ஒரு சாதாரன வேலைக்காரனுக்கு எடுக்கும் முடிவை எடுத்துள்ளீர்கள் என்று சொல்லியிருக்கார். ஹக்கீம் இவ்வாறு சொல்ல வேண்டாம் நான் இதனை திருத்த வேண்டும் என்று சொல்லி விடைபெற்றார்.
அன்றிலிருந்து பகிரங்கமாகவே தனது அமைச்சின் ஊடக உறுப்பினர்கள் மூலமாக தான் கலந்து கொள்ளும் மேடைகளிலும் மக்கள் சந்திப்புகளிலும் ஹஸன் அலி தேசிய பட்டியல் கேட்டு அடம் பிடிக்கின்றார் என்ற மாயையை தோற்றுவித்து தனது தவறுகளை அதற்குள் மறைக்க எத்தனித்தார். இதில் நேரடியாகவும் மறைமுகமாகவும் சம்மந்தப்பட்ட முஸ்லிம்கள் அனைவருக்கும் இது தெரியும். மக்களிடம் ஹஸன் அலிக்கு எதிரான பிரச்சாரம் எதுவும் பலிக்காத நிலையில் ஹஸன் அலி மீது அச்சமடைந்து அதிகார குறைப்புக்கு இறங்கினார். ஹஸன் அலியின் நம்பிகைத்தன்மையையும் கட்சிமீதான அவரின் பற்றையும் அறியாத ஹகீமின் தலைமத்துவ பலவீனத்தையே இச்செயற்பாடு எடுத்துக்காட்டுகின்றது.
சர்ச்சைக்குரிய கட்டாய உயர்பீட கூட்டம் நடைபெற்ற அன்று கடும் மழை காரணமாக ஹஸன் அலி நிஸாம் காரியப்பர் உட்பட பலர் தாமதித்தே அங்கு வந்தனர். இவர்களின் தாமதம் ஹகீமுக்கு பிழையாக எடுத்துரைகப்பட்டதனால் ஒரு அச்சநிலையில் அன்று ஹகீம் காணப்பட்டார் என்பதை அவரது உடல் அசைவுகளை அவதானித்த பலர் கதைத்தனர். ஏதோ ஒரு பெரிய தவறு நடைபெற போகின்றது என்பது மட்டும் உறுதியகத்தெரிந்தது. கூட்டம் தாமதித்து ஆரம்பிக்கப்பட்டு நடப்பாண்டுக்கான அங்கத்தவர் தெரிவு நிறைவுற்றது. திடீரென்று ஹக்கீம் எழுந்து ஏற்கனவே தான் மேற்கொண்ட சூழ்சியின் அங்கமாக யாப்பு மாற்றத்தை நான் முன்மொழிகிறேன் என்று தனது சட்டைப்பயில் இருந்த துண்டை எடுத்து வாசித்துமுடித்தார். இதில் மேலதிகமாக 6 செயலாளர்களை நியமிப்பதாகவும் ஆறாவது செயலாளர் உயர் பீட செயலாளராகவும் அவர் தேர்தல் ஆனையாளரோடும் பாராளுமன்ற செயலாளரோடும் தொடர்பு கொள்வார் என்றும் மாதம் 125000 ம் ரூபா சம்பளம் பெறுபவராகவும் இவர்களது பதவிக்காலம் ஒரு வருடம் என்றும் அவர்களை நீக்கும் நியமிக்கும் அதிகாரம் கட்சிக்கு அல்ல தலைவருக்கே உள்ளது என்றும் குறிப்பிட்டார்.

அதாவது தலைவரும் செயலாளரும் ஒருவர்தான் என்ற சோடிப்பு. இச்செயற்பாட்டை கட்சியை தனக்கு அடமானமாக வைத்து தான் பலருக்கு அடமானமாக இருக்கும் செயற்பாட்டில் இருந்து தப்புவதற்கான ஒரு தற்காப்பு செயலாகவே கருதவேண்டியுள்ளது. அத்துடன் புதிதாக ஆறாவது பிரதித்தலைவர் என்று ஒரு பதவியும் உருவாக்கப்பட்டது. யாப்பு மாற்றம் சம்மந்தமாக எவ்வித முன்னறிவிப்பும் ஒரு மாதத்துக்கு முன் நடைபெறும் உயர் பீடத்தில் அறிவிக்கப்படாமல், இவ்வாறு ஹக்கீம் செயற்பட்டமையானது அவரின் தனிப்பட்ட அரசியல் வியாபாரத்தின் உச்சக்கட்டத்தையே பிரதிபலிக்கின்றது.
கலில் மௌலவி துணிந்து எழுந்து நின்று கிழக்கு மகாணத்துக்குரிய சொத்தை ஹஸன் அலி வைத்திருக்கும் அதிகாரத்தை இவ்வாறு பறிக்க முடியாது என்று எதிர்த்தார். இதை தொடர்ந்து ஷியாத் , பாறுக் போன்றோர் எதிர்க்க ஹக்கீம் எழும்பி நான் ஹஸன் அலியின் வேலையை இலகுபடுத்துவதற்கும் சிலரை திருப்திப்படுத்துவதற்காகவும் இம்மாற்றத்தை செய்கின்றேன் என்றார்.

மூத்த போராளி மன்சூர் சிலரை திருப்திப்படுத்துவதற்கான உங்களின் இம்மாற்றம் கண்டிக்கத்தக்கது என்றார். கட்சியில் இருந்து வெளியேறி மீண்டும் பதவிக்காக கட்சிக்குள் ஊடுருவி இருக்கும் ஹரீஸ் தனது வழமையான பாணியில் நெளிவு சுளிவுடன் ஹகீமுக்காக பேசினார். இன்நடவடிக்கை ஹகீம் சிலருடன் மாத்திரம் கதைத்துவிட்டு அரங்கேற்றிய நாடகமாகவே தெரிகின்றது. குர்ஆன் ஹகீஸ் மஷூரா அடிப்படையிலான கட்சிக்கு ஹகீம் எவ்வகையிலும் அருகதை அற்றவர் என்பதையே இந்நிகழ்வு எடுத்துக்காட்டுகின்றது. மு.க. செயலாளர் பதவி ஹஸன் அலிக்கு மு.கா. போராளிகளினால் கௌரவமாக வழங்கப்பட்டது.
2003ம் ஆண்டு செயலாளர் தெரிவு நடைபெறும் போது எல்லோரின் விருப்பத்துக்கும் மாறாக ஹக்கீம் ஹஸன் அலியினூடாக பஸீரை தெரிவுசெய்தார்;. ஆனால் போராளிகளின் அழுத்தம் காரணமாக உடனடியாக மீண்டும் ஒரு கட்டாய உயர் பீடத்தை கூட்டி செயலாளராக ஹஸன் அலியை நியமிக்க வேண்டிய கட்டாயம் ஹகீமுக்கு ஏற்பட்டதை யாரும் மறந்திருக்க முடியாது.
இதன் பின்னர் மன்சூர் ஏ காதர் சர்ச்சைக்குரிய கட்டாய உயர்பீட கூட்டறிக்கையுடன் ஹஸன் அலியின் வீட்டுக்கு வந்து ஹக்கீம் சொன்னதாக தான் எழுதிய அக்கூட்டறிக்கையை வாசித்து சரிபார்க்கும்படி கேட்டார். கட்சியின் யாப்பின் படி அன்றைய கூட்டறிக்கை எடுக்க வேண்டியது எனது பொறுப்பு என்று உங்கள் கூட்டறிக்கையை வாசித்து சரிபார்க்கவேண்டிய அவசியம் இல்லை என்று மறுத்துவிட்டார்.
விடைபெறும் போது இந்த கட்டாய உயர் பீட கூட்ட அறிக்கையில் உங்கள்; கையொப்பம் எடுத்து வருமாறு தலைவர் கூறியதாக மன்சூர் ஏ காதர் கூறினார். உங்கள் கட்டாய உயர் பீட கூட்ட அறிக்கையில் நான் கையெப்பம் இடவேண்டிய அவசியமில்லை என்று ஹஸன் அலி அவரை அனுப்பி வைத்தார். ஹக்கீம் செய்வதறியாமல் கட்டாய உயர் பீட கூட்ட அறிக்கையில் தான் கையொப்பமிட்டு தேர்தல் ஆணையகத்துக்கு அனுப்பி வைத்தார். தேர்தல் செயலகத்துடன் பொதுச் செயலாளர் மாத்திரமே தொடர்பு கொள்ளலாம் என்பதை ஹக்கீம் அறியாதவர் அல்ல. தேர்தல் செயலகம் பொதுச் செயலாளரை தொடர்பு கொண்டு ஹக்கீமின் கடிதம் சம்பந்தமாக வினவியது. கட்டாய உயர் பீட கூட்டத்தில் தான் இருந்ததாகவும் இம்மாற்றத்தை தான் சம்மதிக்கவில்லை என்றும் இது ஏகமானதான முடிவு இல்லை என்றும் எனக்கு சார்பாகவும் உறுப்பினர்கள் கருத்தை தெளிவுபடுத்தினர் என்றும் ஹஸன் அலி தேர்தல் செயலகத்திடம் தெரிவித்தார்.
இச்சம்பவத்தின் பிறகு மூன்று கிழமையின் பின் மன்சூர் ஏ காதர் அனுப்பிய கடிதத்தினால் மு.க. தேசிய அமைப்பாளர் உட்பட ஏனைய உறுப்பினர்களிடையே சர்ச்சை உருவாகியது. மன்சூர் ஏ காதர் மு.க. உறுப்பினர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் உயர்பீட செயலாளர் என்பதற்கு பதிலாக செயலாளர் என்று குறிப்பிட்டிருந்தார். உடனடியாக மு.க. தேசிய அமைப்பாளர் மன்சூ ஏ காதருடன் தொடர்பு கொண்டு கேட்டபோது ஹக்கீம் தான் செயலாளருக்குரிய றபர் ஸ்டேம்பை தந்து இவ்வாறு செய்யுமாறு பணித்ததாக மன்சூர் ஏ காதர் கூறியிருக்கின்றார். ஹஸன் அலியுடன் தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு மு.க. தேசிய அமைப்பாளர் கேட்டுக்கொண்டார்.
ஹஸன் அலி தேர்தல் செயலகத்தை தொடர்பு கொண்ட போது பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தது. செயலாளர் மற்றும் யாப்பு மாற்றம் சம்பந்தமாக தலைவரிடமும் ஹஸன் அலியிடம் வியாக்கியானம் கேட்டு தேர்தல் செயலகத்தினால் அனுப்பப்பட்ட கடிதம் ஹஸன் அலிக்கு மறைக்கப்பட்டு ஹக்கீமினால் மாத்திரம் பதிலளிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. ஹக்கீம் அனுப்பிய கடிதத்தில் கட்டாய உயர் பீட கூட்டத்தில் எடுத்த தீர்மானத்துக்கு முரணாக மன்சூர் ஏ காதர் கட்சியின் செயலாளர் என்றும் யாப்பில் புதிய 5 செயலாளர்களுக்கு அவர்களின் பொறுப்பும் 6வது செயலாளருக்கு புதிதாக வேறு ஒரு புதிய பந்தியில் கட்சியின் செயலாளாரும் உயர்பீட செயலாளரும் இவர்தான் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
குர்ஆன் ஹதீஸை அடிப்படையாக கொண்ட கட்சியின் தலைவர் என்று சொல்லி கொண்டு மு.கா. உயர் பீடத்தையும், பேராளர்களையும் ஏமாற்றி ஒரு மூத்த போராளியை ஓரம்கட்ட இவ்வளவு கேவலமான, கீழத்தரமான நடவடிக்கையை ஹக்கீம் மேற்கொண்டுள்ளார் என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் சிந்திக்க வேண்டும். ஹக்கீமின் தனிப்பட்ட அதிகாரத்தினால் இறுமாப்புடன் எடுக்கப்படும் எல்லா முடிவுகளையும் போராளிகள் ஏற்கவேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளதையே இது எடுத்துக்காட்டுகின்றது. தேர்தல் செயலகத்தின் பணிப்பரைக்கு அமைய கட்சியை பாதுகாக்க ஹஸன் அலி உரிய நடவடிக்கையை எடுத்துள்ளார்.
இவற்றை மறைப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டதுதான் 19வது மகாநாடு. பொதுச்செயலாளர் ஹஸன் அலியை எப்படியும் இதில் பங்கேற்க வேண்டும் என்று பல முயற்சிகளை ஹக்கீம் மேற்கொண்டார். இதில் இறுதியாக நடைபெற்றதுதான் தென்கிழக்கு பல்கலைக்கழக வேந்தரும் பேராசிரியருமான
அல்ஹாஜ் அச்சி.எம்.இஷ்ஹாக்குடனான சந்திப்பு. இவரின் பணிவான வேண்டுகோளுக்கிணங்க கலில் மௌலவி, அன்வர், தற்காலிக பா.உ. சல்மான், ஹஸன் அலி ஆகியோர் ஹக்கீமின் இல்லத்தில் சந்தித்தனர். அவ்வேளை தேர்தல் செயலகத்துக்கு திருத்தி அனுப்பப்பட்ட யாப்பு சம்மந்தமான கடிதத்தை ஹக்கீம் ஸல்மானிடம் வினவினார். ஸல்மான் கடிதத்தில் உள்ள விடயங்களை ஊர்ஜிதப்படுத்தியதும், தான் வாசிக்காமல் பார்க்காமல் கையொப்பம் இட்டுவிட்டேன் என்று சட்ட முதுமானியான குர்ஆன் ஹதீஸை அடிப்படையாக கொண்ட ஒரு கட்சியின் தலைவரான ஹக்கீம் தலையில் அடித்துக்கொண்டார். பின் ஹஸன் அலியிடம் மாநாட்டுக்கு வருமாறு அழைக்க அதிகாரமற்ற மேடையில் வந்து விளம்பரம் பெறவேண்டிய அவசியம் எனக்கில்லை என்று மறுத்துவிட்டார்.
உடனே ஸல்மானைப்பார்த்து மன்சூர் ஏ காதரை இராஜினமா செய்யுமாறு கேட்டுக்கொண்டார். இது நடக்குமாக இருந்தால் நான் மநாட்டுக்கு வருகிறேன் என்று சொல்லிவிட்டு ஹஸன் அலியும் ஏனையோரும் கலைந்து சென்றனர். ஆனால் ஹக்கீமை சூழ்நிலை கைதியாக பயன்படுத்தும் ஸல்மான் மாநாட்டுக்கு முதல் இரவுவரை மன்சூர் ஏ காதரை இராஜினமா செய்யுமாறு எடுத்த முடிவை நடைமுறைப்படுத்தாததினால் ஹஸன் அலி மநாட்டுக்கு செல்லவில்லை.
யாப்பு மாற்றம் மற்றும் செயலாளர் விடயம் சம்பந்தமாக உயர் பீடத்தில் உயர் பீட உறுப்பினர்களான முபின், ஜவாத், நிசார் கொண்ட மூவர் அடங்கிய குழுவை ஹக்கீம் நியமித்தார். இவர்களின் சந்திப்புகளில் ஹஸன் அலி முன்வைத்த விடயம் தேசியப் பட்டியல் சம்மந்தமாக எதுவும் கதைக்க வேண்டாம் அது ஹக்கீம் எனக்கு செய்த நயவஞ்ஞகமான நம்பிக்கை துரோகம் அதனால் அதை அல்லாஹ்விடம் பாரப்படுத்திவிட்டேன், மௌலவிகளின் இடைநிறுத்தம் மற்றும் செயலாளர் மாற்றம் சம்பந்தமாகவும் மாத்திரம் பேசுமாறு கேட்டுக்கொண்டார். இவர்களின் செயற்பாடு ஒரு காலம் கடத்தும் செயற்பாடாகவே அமைந்தது. பின்னர் ஒரு ஊடக சந்திப்பில் பகிரங்கமாக அவ்வாறான ஒரு குழு அமைக்கப்படவில்லை அது சம்பந்தமாக எனக்கு தெரியாது என்று குர்ஆன் ஹதீஸை அடிப்படையாக கொண்ட தற்போதைய மு.கா. தலைவர் என்பவர் பகிரங்கமாக பொய் சொன்னார்.
இவைகளை செய்வதற்குரிய காரணம் பலவாறாக இருந்த போதிலும் ஹஸன் அலியை இம்முறை பாராளுமன்றத்திற்கு அனுப்பக்கூடாது என்பதை தேர்தலுக்கு முன்னமே திட்டமிட்டுவிட்டார் ஹக்கீம். இதற்கு வெளியில் சொல்லமுடியாத காரணங்கள் தவிர்ந்த முக்கிய காரனங்களாக பின்வருவனவற்றை குறிப்பிடலாம். 2007யில் இருந்தே ஹஸன் அலி கட்சியின் கொள்கை ரீதியாக பல முரன்பாடுகளை ஹகீமுடன் கொண்டிருந்தார். கட்சி வியாhபார பொருளாக செயற்படுவதையும் சிலர் அதில் குளிர் காய்வதையும் ஹஸன் அலி பல சந்தர்ப்பங்களில் தடுத்துள்ளார்.
இம்முறை ஜனாதிபதி தேர்தலில் கடைசிவரை மஹிந்தவை விட்டுவர ஹக்கீம் விரும்பி இருக்கவில்லை. கண்டியில் நடந்த செயற்குழு கூட்டத்தில் ஹஸன் அலி மக்களின் விருப்பத்துக்கமைய மஹிந்தவை விட்டு வெளியேறுவதாக பகிரங்கமாக முடிவெடுத்தார். நீங்கள் கோடிகள் கொட்டினாலும் இம்முறை மக்கள் மாறமாட்டார்கள் ஏனென்றால் 6 மாதமாக மக்கள் தொழுகையில் குனூத் ஓதுகின்றார்கள். மஹிந்த வெண்றாலும் அந்த வெற்றியில் நமது பங்கு இல்லை என்ற திருப்தியாவது இருக்கவேண்டும் என்று சொல்லி தனது முடிவை தெரிவித்தார்.
தபால் மூல வாக்கெடுப்பன்றும் ஹக்கீம் முடிவெடுக்காததால் மனச்சாட்சிப்படி வாக்களிக்குமாறு பகிரங்கமாக ஹஸன் அலி வாக்காளரை கேட்டுக்கொண்டார்.
இதன்பிறகு ஹக்கீம் அவசரமாக ஹஸன் அலியை தொடர்பு கொண்டு நாளை நாம் அவசரமாக சந்திக்க வேண்டும் என்றார். நான் உங்களை தனியாக சந்திக்க விரும்பவில்லை பா.உ. எல்லோரையும் கூட்டி வையுங்கள் வருகிறேன் என்று ஹஸன் அலி சொன்னார். மறுநாள் பா.உ. சகிதம் ஹக்கீம் இருந்தார். ஹஸன் அலி வந்ததும் வாருங்கள் எல்லோரும் அவசரமாக போக வேண்டும் பசீலை சந்திக்க என்றார். அதற்கு ஹஸன் அலி நான் இங்கு வந்தது மைத்திரியுடன் செல்லும் முடிவை அறிவிப்பதற்காக, றிஸாட் ஏற்கனெவே மாறி கல்முனையில் நிற்கிறார் , பொத்துவிலிலும் கூட்டம் ஏற்பாடாகிட்டு என்றார். அதற்கு ஹக்கீம் நீங்கள் எப்படி முடிவெடுக்க முடியும் உங்கள் பிரச்சினை கரையோர மாவட்டம் தானே ஜனாதிபதியின் விஷேட அதிகாரத்தின் மூலம் அதை பெறத்தான் நாம் அங்கு செல்கின்றோம் என்றார்.
எல்லோரின் வேண்டுகோளுக்கும் இணங்க கரையோர மாவட்டம் பெற பசீலை சந்திக்க சென்றனர். அங்கு ஒவ்வொருவரின் பிரச்சினையும் முன்வைக்கப்பட்டது. ஒருவர் ரோட்டு போடுவதற்கு 200 மில்லியன் கேட்டார், மற்றவர் செய்த வேலைகளுக்குரிய பணத்தை விடுவிக்குமாறு கேட்டார், மற்றவர் மாவட்ட குழு தலைமையை கேட்டார், ஹஸனலியின் கரையோர மாவட்டமும் மழுப்பல் வார்த்தைகள் மூலம் மூடப்பட்டது. ஏமாற்றத்துடன் தாறுஸலாத்துக்கு வந்து அழுத குரலில் மு.கா. தலைவர் தனது விலகும் நிலைப்பாட்டை தெரிவித்தார்.
ஜனவரி 8 வெற்றியின் பின் அமைந்த ஆட்சியில் கபினட் அமைச்சு ஹஸன் அலிக்கு வழங்குவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டும் தான் கட்சியுடன் வந்ததால் அதை ஏற்க மறுத்து கட்சிக்கு வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.
2012ம் ஆண்டு மாகாண சபை தேர்தலில் ஒப்பந்தம் இன்றி வெற்றிலையில் கேட்பதற்கு ஹகீம் முடிவெடுத்தார். ஆனால் ஹஸன் அலியின் அழுத்தம் காரணமாக எழுதிக்கொடுத்த நான்கு பக்க ஒப்பந்தம் மஹிந்த அணியினால் கைச்சாத்திடப்படாமையினால் மரத்தில் தனியாக கேட்டதன் விளைவு இன்று மு.கா. ஆட்சியமைக்கும் ஆக்கபூர்வமான நிலை உருவானது.
தலைவர் அஷ்ரப் கட்சியை ஆரம்பிக்கும்போது 1963ல் அம்பாரை மாவட்டம் பிரிக்கும் பொழுது நடந்த அநியாயம், 1987யில் புதிய உள்ளுராட்சி சபை எல்லைகள் நிர்ணயத்தில் நடந்த அநியாயம், என்பவற்றை சுட்டிக்காட்டி, உங்களுக்கு தொழில் தரமாட்டோம், அபிவிருத்தி தரமாட்டோம், ஆனால் உங்களுக்காக குரல் கொடுப்போம் என்று மாத்திரம் சொல்லி இக்கட்சியை நடாத்திச்சென்றார். இன்று நாம் பலவீனமான அரசுடன் ஒட்டி உறவாடலினால் குரலற்ற கட்சியாக உள்ளோம்.
மு.கா. உயர்பீட உறுப்பினர்களுக்கு உள்ள பாரிய சவால் முஸ்லிம் சமுகத்துக்காக அரசியல் வியாபாரிகளிடம் இருந்து கட்சியை காப்பதாகும். அரசியல் வியாபாரிகளின் கபடத்தனமான செயலினால் முதல் தடவையாக ஒப்பந்தமின்றி ஐ.தே.க. யுடன் தேர்தல் கேட்டுள்ளோம் என்பதை மனதில் நிறுத்தி எதிர்வரும் கட்டாய உச்சபீட கூட்டத்தில் மீண்டும் ஒரு நாடகம் அரங்கேறுவதை தடுத்து கட்சியின் யாப்பையும் கட்சியின் சொத்தையும் பாதுகாக்க தைரியத்துடன் முன்வர வேண்டும்.
மு. கா. போராளி