Mohamed Nizous
காத்திருந்து காத்திருந்தே
கால்கள் கடுக்கும்
சாத்தானின் வசனங்களில்
சாபங்கள் ஒலிக்கும்
தூரத்தில் CTB
துளி போல் தெரிகையிலே
ஓரத்தில் நிற்பவர்கள்
ஓடுவார் பஸ் பிடிக்க
முதலாளி திட்டுவாரே
முகாமையாளர் வெட்டுவாரே
மெதுவாக நேரம் போக
விதி நொந்து வாடுவார்கள்
எட்டு மாச கர்ப்பிணி போல்
புட் போர்ட்டின் வயிறு தள்ளி
பட்டு நசிந்து பஸ் வரும்
பார்த்தவருக்கு வெறி வரும்
எப்படியோ புட்போர்ட்டில்
இறுக்கி நெருக்கி ஏறியபின்
தொப்பலான வேர்வையினால்
தொழிலே வெறுத்துப் போகும்.
சொந்த வண்டி உள்ளவர்கள்
சுகமாகப் போவதனை
வெந்து போய் மனசு பார்க்கும்
விரக்தியிலே அது சிரிக்கும்
பேருந்துள் வானொலியில்
பிரைவேட் பஸ் ஸ்ட்ரைக்
பிசுபிசுத்து போனதென்பார்
பிஸ்ஸு பிடித்த அதிகாரி
கல் எங்கு பட்டாலும்
காலைத்தான் நாய் உயர்த்தும்
எல்லா பிரச்சினைக்கும்
இறுதிப் பலி பொது மகனே