ஹக்கீமின் கருத்தானது முஸ்லிம் சமூகத்திடையே நிகழ்ந்த ஒரு பெரும் காட்டிக் கொடுப்பாகும்

 அண்மைக் காலமாக அமைச்சர் ஹக்கீம் பொது பல சேனா அமைப்பும் ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாத்தும் ஒரு எஜமானின் கீழ் இயங்குகின்றார்களா என்ற உணர்வு ஏற்படுவதாக கூறியிருந்த விடயம் மிகவும் சூடு பிடித்து காணப்பட்டது.இதனை பிடித்து கொண்டு தான் அமைச்சர் ராஜித சேனாரத்ன தங்களது அமைப்பின் செயலாளர் றாசிக்கை கோத்தபாயவின் கீழ் இயங்கும் ஒரு நபராக சித்தரித்ததாக ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத் பகிரங்கமாகவே அறிக்கை ஒன்றில் கூறியிருந்தது.அமைச்சர் ஹக்கீமின் கூற்றுக்கும் அமைச்சர் ராஜிதவின் கூற்றுக்கும் இடையில் கன கச்சிதமான தொடர்பிருந்தமையை யாராலும் மறுக்க முடியாது.

rauff hakeem sltj raseek -4

அமைச்சர் ஹக்கீமின் இக் கூற்றானது முஸ்லிம் சமூகத்திடையே நிகழ்ந்த ஒரு பெரும் காட்டிக் கொடுப்பாகவே பலராலும் நோக்கப்படுகிறது.இது தொடர்பில் மிகக் கடுமையான நடவடிக்கைகளில் ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத் இறங்கும் என எதிர்பார்க்கப்பட்ட போதும் அவ் அமைப்பின் செயலாளரை சிறையில் இருந்து மீட்க வேண்டிய நகர்வுகளை கருத்திற் கொண்டு அவர்கள் அமைதி காப்பதாக அவர்களது சில உள் வீட்டு தகவல்கள் கூறுகின்றன.

ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத் அமைப்பானது இலங்கை முஸ்லிம்களிடத்தில் கணிசமான ஆதரவை கொண்ட அமைப்பாதலால் இது அமைச்சர் ஹக்கீமின் அரசியல் வாழ்வில் மிகப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தலாம் என்றே பெரிதும் கருதப்படுகிறது.இந் நேரத்தில் இதனை தூக்கிப் பிடித்து அமைச்சர் ஹக்கீமிற்கு சாட்டையடி கொடுக்க மு.காவின் தவிசாளர் கிளம்பியிருப்பதிலிருந்து இதன் மூலம் அமைச்சர் ஹக்கீமிற்கு ஏற்படக் கூட பாதிப்பை அறிந்து கொள்ளலாம்.SLTJ ஆனது சம்மாந்துறை,கொழும்பில் நடாத்திய ஆர்ப்பாட்டத்தில் பெருமளவான முஸ்லிம்கள் கலந்து கொண்டிருந்தனர்.இதனை அவதானித்த அமைச்சர் ஹக்கீம் எதிர்காலத்தில் இவ்வமைப்பு தனக்கு சவாலாக மாறிவிடும் என்பதால் முளையிலேயே கிள்ளி எறிய இச் சந்தர்ப்பத்தை பயன்படுத்துகின்றார் என்பதே பலரது கருத்தாகும்.தமிழ் நாட்டில் TNTJ அமைப்பானது நேரடி அரசியல் செய்யாது போனாலும் மறைமுக அரசியலில் மிக முக்கிய பங்கு வகிப்பது யாவரும் அறிந்ததே.இது போன்று எதிர்காலத்தில் SLTJ யும் இலங்கையின் மறைமுக அரசியலுக்குள் வந்து தனக்கு சவாலாக வந்து விடும் என்பதே அமைச்சர் ஹக்கீம் போடும் கணக்காகயிருக்கலம்.

ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத்தை அடக்க இது சந்தர்ப்பமல்ல என்பதே ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத்தின் கொள்கையில் உடன்படாத நடுநிலையாளர்களின் கருத்தாகவுள்ளது.இதற்கு ஏற்ப 2016-11-29ம் திகதி மீள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட அப்துர் ராசிகின் வழக்கின் போது அவருக்கு எதிராக எந்த முஸ்லிம் சட்டத்தரணியும் ஆஜராகவில்லை.இதற்கு முன்னர் அசாத் சாலியால் சட்டத்தரணிகள் நியமிக்கப்பட்டிருந்தனர்.இவ்வாறு நடந்துகொண்டதன் மூலம் அவர்கள் தங்களது பிழைகளை ஒப்புக்கொண்டுள்ளனர்.இவர்கள் தங்களது பிழைகளை ஒப்புக்கொண்டதன் பின்னால் மக்கள் அழுத்தங்கள் தான் நிரம்பி காணப்படுகின்றன.

தற்போது அமைச்சர் ஹக்கீம் இவைகளிலிருந்து தப்பிக்க வேண்டுமாக இருந்தால் தனது கருத்தை வாபஸ் பெற வேண்டும்.இது அவரது தன் மானத்திற்கு இழுக்கான செயலாகும்.தற்போது தங்களது தலைவர் ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத் விடயத்தில் அகப்பட்டுக்கொண்டார் என அறிந்த போராளிகள் தங்கள் தலைவரை காப்பாற்ற அப்துர் ராசிகின் வழக்கின் போது அவருக்கு எதிராக எந்த முஸ்லிம் சட்டத்தரணியும் ஆஜராக போதும் அமைச்சர் றிஷாத் சட்டத்தரணிகளை நியமித்ததாக கூவித் திரிகின்றனர்.அமைச்சர் ஹக்கீமிற்கு சவாலாக உள்ள அமைச்சர் றிஷாதும் இவ்விடயத்தில் ஹக்கீமின் நிலைப்பாட்டில் உள்ளார் எனக் காட்டினால் அமைச்சர் ஹக்கீம் தனது தலையை காப்பாற்றிக்கொள்ளலாம்.இது தான் அவர்களது கணக்கு.இது அவர்களது வங்குரோத்து அரசியலை புடம் போட்டுக்காட்டுகிறது.இது போன்ற மு.காவினரின் பல பேய் காட்டல்களை மக்கள் நன்கு அறிந்து கொண்டார்கள்.

 

இப்றாஹிம் மன்சூர்,ஆசிரியர்,கிண்ணியா