புலிகள் என் மீது 5 தடவைகள் தாக்குதல் நடத்தினார்கள் ,இன்று எவருமே உயிருடன் இல்லை : ஜனாதிபதி

file image

விடுதலைப்புலிகள் 5 தடவைகள் என்மீது தாக்குதல் மேற்கொண்டார்கள், அந்த தாக்குதல்களுக்கு காரணமாக இருந்தவர்கள், தாக்குதல் நடத்தியவர்கள் எவருமே இப்போது உயிருடன் இல்லை என ஜனாதிபதி தெரிவித்தார்.

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் அங்கு உரையாற்றும் போது,

file image
file image

இலங்கையில் ஆரம்ப காலம் முதலாகவே இனத்தவர்களிடையே பிரச்சினைகள் காணப்பட்டு வந்தன. இவை அனைத்துமே எமக்கு பாடங்களை கற்றுத்தந்துள்ளன.

இலங்கை சுதந்திரம் அடைந்ததற்கு பின்னர் இன்று வரையிலும் பிரச்சினை தொடர்ந்தே வருகின்றது. புலிகளின் யுத்தங்களால் இலங்கையில் ஏற்பட்ட பாதிப்புகளை நேரடியாக பார்த்தவன் நான் இதன் காரணமாக யுத்த பாதிப்புகள் நன்றாகவே எனக்கு தெரியும்.

நடைபெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக பலர் வெளிநாடுகளுக்கு சென்று விட்டனர், இன்றும் இந்தியாவில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான அகதிகள் இருக்கின்றார்கள் என்பதை மறந்து விடக் கூடாது.

இந்த விடயம் அரசு என்ற வகையிலும் ஏன் முழு நாடும் கூட வெட்கப்பட வேண்டிய ஒரு விடயம். அதேபோன்று சர்வதேசத்திற்கு முன்னால் பேசுவதற்கும் வெட்கப்பட வேண்டிய நிலையே தொடர்கின்றது.

இந்த பிரச்சினைகளை தீர்க்க வேண்டும், இனங்களுக்கு இடையே ஒற்றுமை ஏற்பட வேண்டும் என்பதற்காகவே புதிய அரசியல் யாப்பு அமைக்கப்பட உள்ளது.

இந்த புதிய அரசியல் யாப்பு தொடர்பில் அவதூறாக பேசுகின்றவர்கள் மூலமாக எதிர்காலத்தில் இலங்கையில் மீண்டும் யுத்தம் ஏற்பட்டு இரத்தக் களரிகள் ஏற்பட்டு விடும் வாய்ப்பு உள்ளது.

தேசிய நல்லிணக்கம் என்பதே இப்போதைக்கு முக்கிய தேவை முழு நாட்டிற்கும் தேவையான பக்கச்சார்பு அற்ற அரசியல் தீர்வு கொண்டு வரவேண்டும். இது மட்டுமே இப்போதைய முக்கிய பிரச்சினை.

இவ்வாறான பிரச்சினையை தீர்க்க எம்முடன் இணைந்து செயற்படும் ஓர் நல்ல தலைவராக சம்பந்தன் அவர்கள் இருந்து வருகின்றார் என்பதையும் கூறிக்கொள்கின்றேன்.

இதேவேளை உயிர்த்தியாகங்களை செய்து புலிகளுடனான யுத்தத்தை இராணுவ வீரர்கள் வெற்றி கொண்டனர். நாட்டிற்று சுதந்திரத்தையும் அமைதியையும் கொடுத்தனர்.

ஆனாலும் யுத்தம் முடிவிற்கு கொண்டு வரப்பட்ட பின்னரும் தனி ஈழம், நாட்டை பிளவு படுத்துவது போன்ற கருத்துக்களை மட்டும் எம்மால் இன்று வரை வெற்றிகொள்ள முடியவில்லை.

அதே போன்று சர்வதேச ரீதியாக விடுதலைப்புலிகள் பற்றியும் தனி ஈழம் பற்றிய கொள்கைகளையும் எம்மால் வெற்றி கொள்ள முடியவில்லை. அதனை வெற்றி கொள்வதும் இப்போதைக்கு அவசியமானதாகும்.

நாம் செயற்படுத்த நினைக்கும் அரசியல் யாப்பின் மூலம் எவரும் பாதிக்கப்பட மாட்டார்கள். இதனால் ஒற்றுமை மிக்க இலங்கையை உருவாக்க முடியும்.

இது தொடர்பில் கருத்து வெளியிடுபவர்கள் எவராக இருந்தாலும் அரசியல் வீரர்களாக இருந்தால் போதாது. நாட்டில் இப்போது அரசியல் வீரர்கள் அவசியம் இல்லை.

நாட்டில் இருக்கும் பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டியது மட்டுமே இப்போதைக்கு அவசியம் என்பதை கருத்திற் கொள்ளவும்.

எதிர்கால அதிகாரத்தையும் ஆட்சியையும் மட்டும் கருத்திற் கொண்டு நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்வார்களாயின் அவர்களுக்கு எந்த வகையிலும் அது சாத்தியம் இல்லை என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

மேலும் வடக்கில் 27 வருடங்கள் முகாம்களில் உள்ள மக்களின் நிலை தென்னிலங்கையில் இருப்பவர்களுக்கு இவ்வாறு நிகழ்ந்தால் ஏற்றுக்கொள்வீர்களா?

வடக்கு மக்கள் கேட்பது அவர்களின் இடம் மட்டுமே. அந்த அப்பாவி மக்களின் பிரச்சினையை தீர்க்க முயற்சி செய்யும் போது போராட்டங்கள் செய்து குழப்பங்களை ஏற்படுத்த முயன்று வருகின்றார்கள்.

எவ்வாறாயினும் புதிய அரசியல் யாப்பு பிரச்சினையை தீர்ப்பதற்காகவே, மீண்டும் ஆயுதம் ஏந்துவதை தடுப்பதற்காகவும் மீண்டும் யுத்தம் ஏற்படக் கூடாது என்பதற்காகவுமே. மாறாக இதே நிலை தொடருமானால் மீண்டும் யுத்தம் ஏற்பட்டு விடும் அபாயம் உருவாகும். 

அதனை தெரிந்து கொண்டு அனைவரும் இணைந்து ஒற்றுமையை ஏற்படுத்தி பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்காக செயற்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றேன்.

நாளை யார் தலைவர் என்பது இப்போது அவசியம் இல்லை, நல்லிணக்கம் மிக்க, ஒற்றுமை மிக்க, அபிவிருத்திப் பாதையில் பயணிக்க அனைவருமாக இணைந்து செயற்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.