எம்.எஸ்.எம். ஸாகிர்
பொதுபலசேனாவின் வேண்டுகோளுக்கிணங்க பாகிஸ்தான் தூதுவராலயம் நடத்திய நிகழ்வுக்காக தூக்கப்பட்டிருந்த பாகிஸ்தான் தேசிய கொடியை அகற்றியது பாகிஸ்தான் இலங்கை உறவில் பாதிப்பினை ஏற்படுத்தும் என முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் செயலதிபரும் முன்னாள் முஸ்லிம் கலாசார அமைச்சருமான ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவிவித்துள்ளார்.
பத்தரமுல்லை வோட்டஸ் ஏஜ்ஜில் நடைபெற்ற பாகிஸ்தான் கண்காட்சிக்காக தூக்கப்பட்டிருந்த தேசிய கொடிகளை அகற்றுயது தொடர்பாக அறிக்கை ஒன்றை விடுத்தே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
இப்பொழுது பொது பலசேனாவின் அட்டகாசம் இலங்கை மண்ணைத் தாண்டி வெளி உலகுக்கும் சென்றுள்ளது. பாகிஸ்தான் தூதுவர்களால் ஏற்பாடு செய்த ஒரு வைபவத்தில் பாகிஸ்தான் கொடியை அகற்றுமாறு அவர்கள் பகிரங்கமாக அங்கு வந்து வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள். கொடிகளும் அகற்றப்பட்டுள்ளன.
இது சர்வதேச ரீதியில் பெரும் பாதிப்பை இலங்கைக்கு ஏற்படுத்தும். பாகிஸ்தானுடனான ராஜதந்திர புரிந்துணர்வில் இது ஒரு கரும் புள்ளியாகும். பாகிஸ்தான் எமது மிக மிக நெருக்கமான நண்பன். இந்த நாட்டை புலிகளிடமிருந்து காப்பாற்றி, யுத்தத்தை வெற்றியீட்டுவதற்கு, இந்த நாட்டில் சமாதானத்தைக் கொண்டு வருவதற்கு இறுதிக் கட்டத்தில் உதவியது பாகிஸ்தான் என்பது உலகம் அறிந்த விடயம். இதனை எமது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூட அண்மையில் சந்தித்த பாகிஸ்தான் முன்னாள் பிரதம அமைச்சர் ராஜா பர்வீஸிடம் நேரடியாக நன்றி கலந்த தொனியோடு கூறியுள்ளார்.
இதனால் அரசுக்கு, பாகிஸ்தான் போன்ற நட்பு நாடுகளையும் இழக்கும் ஒரு பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. என்றும் மேலும் தெரிவித்துள்ளார்.