தென் அமெரிக்காவில் உள்ள பொலிவியாவில் இருந்து கொலம்பியாவுக்கு ஒரு பயணிகள் விமானம் புறப்பட்டு சென்றது. அதில் 81 பேர் பயணம் செய்தனர். அவர்களில் 72 பேர் பயணிகள். 9 பேர் விமான சிப்பந்திகள்.
இந்த விமானத்தில் பிரேசிலின் சர்பிசியோன்ஸ் ரியல் கால்பந்து அணியை சேர்ந்த வீரர்களும் பயணம் செய்தனர். அவர்கள் கொலம்பியாவின் மெடெலின் நகரில் நடைபெறும் இறுதி போட்டியில் கலந்து கொண்டு விளையாட புறப்பட்டு சென்றனர்.
இந்த விமானம் கொலம்பியாவின் மெடலின் அருகே வந்த போது இரவு 10.15 மணியளவில் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியது. தகவல் அறிந்ததும் மீட்பு குழுவினர் அங்கு விரைந்து சென்றனர்.
ஆம்புலன்சுகள் மற்றும் மருத்துவகுழுக்களும் அனுப்பி வைக்கப்பட்டன. போதிய பெட்ரோல் இல்லாததால் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. விபத்து நடந்த போது கொலம்பியாவில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. எனவே விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
விமானம் நொறுங்கி விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த கால்பந்து வீரர்கள் உள்ளிட்ட பயணிகள் கதி என்ன என்று தெரியவில்லை.
இதற்கிடையே இந்த விபத்தில் சிக்கியவர்களில் 10 பேர் காயத்துடன் உயிர் தப்பியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன . ஆனால் இது உறுதி செய்யப்படவில்லை. விமான விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் தென் அமெரிக்க கால்பந்து சம்மேளனம் போட்டியை ரத்து செய்தது.