500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பையடுத்து தமிழகத்தில் பல்வேறு கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரை புதூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
நாட்டில் அவசர நிலையை உருவாக்கியதுபோல் ரூபாய் நோட்டு விஷயத்தில் மத்திய அரசு செயல்பட்டுள்ளது. இச்செயல் கடுமையாக கண்டிக்கத்தக்கது. கறுப்பு பணம் வைத்திருப்பவர்களால் உருவாக்கப்பட்டவர் தான் மோடி. ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு வெளிவருவதற்கு முன்பே கறுப்பு பணம் வைத்திருந்த முதலாளிகள் வங்கிகளில் டெபாசிட் செய்தனர்.
ஏழை மக்கள் தற்போது பணத்தை டெபாசிட் செய்ய பரிதவித்து வருகின்றனர். இது கறுப்பு பணம் வைத்திருப்பவர்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. பிரதமர் மோடியின் அறிவிப்பால் ஏழை-எளிய மக்கள் பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர்.
சாமானியர்கள் வங்கிகளில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஏ.டி.எம்.கள் செயல்படவில்லை. புதிய ரூபாய் நோட்டுகள் கிடைக்கவில்லை. சிறு வியாபாரிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே மோடி அரசு ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. நன்மாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.