ஹஜ் ஏற்பாடுகளை சீரமைத்து மக்களுக்கு சிறந்த ஹஜ் சேவையை வழங்குவதற்காக முஸ்லிம் சமய மற்றும் தபால், தபால் சேவைகள் அமைச்சு பாராளுமன்றத்தில் விஷேட சட்டம் ஒன்றினை நிறைவேற்றிக்கொள்ளவுள்ளது.
அடுத்த வருடத்திற்கான ஹஜ் ஏற்பாடுகளுக்கு முன்பு இந்த ஹஜ் சட்ட மூலத்தை அமைச்சரவையில்சமர்ப்பித்து அங்கீகாரம் பெற்றுக் கொண்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான எற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாக முஸ்லிம் சமய மற்றும் தபால், தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரிவித்தார்.
ஹஜ் ஏற்பாடுகளுக்கான சட்டத்தை வரைபு செய்வதற்கென ஓய்வு பெற்ற முன்னாள் உயர் நீதிமன்றின் நீதியரசர் சலீம் மர்சூபின் ஆலோசனைகள் பெற்றுக் கொள்ளப்படவுள்ளன. இதற்காக இன்று திங்கட்கிழமை அரச ஹஜ் குழுவின் உறுப்பினர்களும் முன்னாள் நீதியரசர் சலீம் மர்சூபும் சந்திப்பொன்றில் ஈடுபடவுள்ளனர்.
இது தொடர்பில் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்;கடந்த வருடங்களில் ஹஜ் ஏற்பாடுகள் பல சவால்களை எதிர்நோக்க வேண்டியேற்பட்டது. நீதிமன்றம் வரை ஹஜ் விவகாரம் கொண்டு செல்லப்பட்டது. தற்போது இது தொடர்பான வழக்கொன்று விசாரணையின் கீழ் இருக்கிறது. இவ்வாறான நிலைமை எதிர்காலத்தில் ஏற்படாதிருப்பதற்காகவே ஹஜ் ஏற்பாடுகளுக்கென ஒரு சட்டத்தை நிறைவேற்றிக் கொள்ள தீர்மானிக்கப்பட்டது.
ஹஜ்ஜாஜிகளுக்கும் ஹஜ் முகவர்களுக்கும் பாதிப்பில்லாத வகையில் இந்தச் சட்ட மூலம் வரைபு செய்யப்படும் என்றார். இது தொடர்பில் அரச ஹஜ் குழுவின் தலைவர் கலாநிதி மொஹமட் தாஹா சியாக் கருத்து தெரிவிக்கையில்;எதிர்வரும் 6 மாத காலத்துக்குள் ஹஜ் குழு முன்னாள் நீதியரசர் சலீம் மர்சூபுடன் கலந்துரையாடி சட்ட மூலத்தை வரைபு செய்து பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் 10 ஹஜ் முகவர்களால் ஹஜ் கோட்டா பகிர்வு முறைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தற்போது விசாரணையின் கீழ் உள்ளது. வழக்கு விசாரணை எதிர்வரும் ஜனவரி மாதம் 26 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
பாராளுமன்றத்தில் ஹஜ் ஏற்பாடுகளுக்கென சட்டமொன்றினை நிறைவேற்றிக் கொண்டால் இவ்வாறான வழக்குகளுக்கு வாய்ப்பு ஏற்படாது என்றார். ஸ்ரீலங்கா ஹஜ் முகவர்கள் சங்கத்தின் தலைவர் எம்.எம்.அஹமட் நிஜார் கருத்துத் தெரிவிக்கையில்;
‘எதிர்காலத்தில் ஹஜ் ஏற்பாடுகள் எவ்வாறு சீரமைக்கப்பட வேண்டும் என மகஜர் ஒன்று அமைச்சர் ஹலீமுக்கும் அரச ஹஜ் குழுவுக்கும் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளருக்கும் அனுப்பிவைத்துள்ளதாகத் தெரிவித்தார்.
குறித்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
‘முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஒரு ஹஜ் பயணியிடமிருந்து மூவாயிரம் ரூபா ஹஜ் முகவர்கள் ஊடாக அறவிடுகிறது. இவ்வாறு அறவிடப்படும் பணம் திணைக்களத்தினால் வேறு தேவைகளுக்கு பயன்படுத்தப்படாது ஹஜ் விவகாரங்களுக்கு மாத்திரமே பயன்படுத்தப்பட வேண்டும்.
ஹஜ் பயணம் மேற்கொள்ளவுள்ளோர். திணைக்களத்தில் தம்மைப் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்ற விதிமுறை இருக்கிறது. இம்முறை மாற்றியமைக்கப்பட வேண்டும். இதற்கென ஓர் இணையத்தளம் உருவாக்கப்பட வேண்டும். பதிவு செய்வோரிடமிருந்து 50 ஆயிரம் ரூபா அறவிடப்பட்டு அவ் விண்ணப்பதாரிகளுக்கு அத்தாட்சிப் பத்திரம் ஒன்று வழங்கப்பட வேண்டும். அந்த அத்தாட்சிப் பத்திரத்தை விண்ணப்பதாரிகள் ஹஜ் முகவரிடம் சமர்ப்பித்து ஹஜ் ஏற்பாடுகளைச் செய்து கொள்ள வேண்டும்.
ஏனென்றால் திணைக்களத்தில் தற்போது 10 ஆயிரம் பேர் ஹஜ் பயணத்துக்கென தம்மைப் பதிவு செய்து கொண்டுள்ளனர். இவர்கள் அனைவரும் இவ்வருடமே பயணம் மேற்கொள்பவர்கள் அல்லர். ஹஜ் முகவர்களாலும் ஹஜ் வழிகாட்டிகளினாலும் ஹஜ் பயணத்தை திட்டமிட்டில்லாதவர்களின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் மகஜரில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.