மருதமுனை இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு -ஓர் விமர்சனப் பார்வை

evidence_based_decision_making_searching_for_facts_istock_000011951853xsmall

-மருதமுனை எம்.ஏ. சம்சுல் அமான்-

இலங்கை வரலாற்றில் இஸ்லாமிய சமூகம் இரண்டு பெரும்பான்மைச் சமூகங்களாலும் காலத்துக்குக் காலம் நெருக்குதல்களுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் உள்ளான சம்பங்களும், சந்தர்ப்பங்களும் அதிகம். இதன் தொடராக 1980 ஆம் ஆண்டு காலப் பகுதியில் தமிழ் மக்களிடையே தோற்றம் பெற்ற பல்வேறு ஆயுதக் குழுக்களால் அதன் தாக்கம் மேலும் உக்கிரமடைந்தது. இந்நிலையில் பெரும்பான்மைச் சமூகங்களிடமிருந்து இஸ்லாமிய சமூகத்தைப் பாதுகாக்கவும், அவர்களது உரிமைகளை வென்றெடுக்கவும் 1981.09.21ல் காத்தான்குடி பட்டின சபைத் தலைவராகவிருந்த ஏ.அகமட் லெவ்வை அவர்களின் தலைமையில் ‘முஸ்லிம் காங்கிரஸ்’ என்ற நிறுவனம் தோற்றம் பெற்றது. 1986 நவம்பரில் கொழும்பிஸ் அது ஒரு அரசியல் கட்சியாக பிரகடனப்படுத்தப்பட்டதோடு அதன் தலைவராக மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள் தெரிவு செய்யப்பட்டார்.

 

முஸ்லிம் காங்கிரஸ் என்ற அரசியல் கட்சியின் ஸ்தாபகத் தலைவராக இருந்த மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள் அக்கட்சியினூடாக அரசியலில் அதிதீவிரமாக செயற்பட்டாலும், இலங்கை முஸ்லிம்களின் அரசியலுக்கப்பாற்பட்ட இன்னோரன்ன பல்வேறு சமய, சமூகக் கலாச்சாரத் தேவைகளிலும் அக்கறை காட்டத் தவறவில்லை முஸ்லிம்களின் அனைத்துத் துறைகளிலும் ஊடுருவி அவ்வத் துறைகளில் முஸ்லிம் சமூகம் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளை தீர்த்து வைக்கின்ற ஒரு பன்முக இயக்கமாக முஸ்லிம் காங்கிரஸை மிளிர பாடுபட்டார்.

எந்த ஒரு அரசியல் கட்சியும் தமது மதம் சார்ந்த விடயங்களில் அதிகம் ஈடுபாடு காட்டி மத ரீதியான தேசிய நிகழ்வுகள் நடத்துவதைப் பற்றி சிந்திக்காத அல்லது தயங்கிய சந்தர்ப்பத்தில், ஆண்டு தோறும் தேசிய மீலாத் விழாவை வெகு விமர்சையாக நடாத்தியது மட்டுமன்றி, அதை ஒரு அபிவிருத்திக்கான வழியாகவும் மிளிரச் செய்தார். மட்டுமன்றி மத நிறுவனங்களின் உருவாக்கம், மீளமைப்பு, விடயங்களிலும் அதிக அக்கறை காட்டினார்.

சிறு வயதிலிருந்து எழுத்தாளராகவும், இலக்கியவாதியாகவும் தன்னை வளர்த்துக் கொண்ட எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள், முஸ்லிம் காங்கிரஸ் ஊடாக இஸ்லாமிய இலக்கியத்துறை வளர்ச்சிக்கு அதிகம் பங்காற்றினார் தவிரவும், முஸ்லிம் காங்கிரஸ் என்ற அடையாளத்தின் ஊடாக முஸ்லிம் கவிஞர்கள், மற்றும் எழுத்தாளர்களை கௌரவப் படுத்திய தோடு, பல இலக்கிய நிகழ்வுகளுக்கும் காரணகர்த்தாவாக இருந்தார்.

எனினும் அவரின் மறைவுக்குப் பின் முஸ்லிம் காங்கிரஸ் அரசியலோடு மட்டும் தன்னை மட்டுப்படுத்திக் கொண்டதானது, துரதிஷ்டமானதாகும். குறிப்பாக முஸ்லிம் எழுத்தாளர்களையும், அவர்களின் செயற்பாடுகளையும் கண்டு கொள்ளாமலும், இஸ்லாமிய இலக்கியம் சம்பந்தப்பட்ட விடயங்களில் அலட்சிய மனப்பான்மையிலும் இருந்து வருவது வேதனைக்குரியதாகும்.

தமிழ் மக்களின் இலக்கியத்துறைக்கு பங்காற்றுவதற்காக, இலங்கை தமிழ்ச்சங்கம் இருப்பது போல இஸ்லாமிய இலக்கியத்துறையின் வளர்ச்சிக்கு ஓர் நிறுவனத்தை ஆரம்பிக்க தேவையான காணி, கட்டிடம் என்பவற்றை பெறக்கூடிய அதிக வளத்தை முஸ்லிம் காங்கிரஸ் கொண்டிருந்தாலும், அதன் தலைமைத்துவம் இதுவரை அதுபற்றி சிந்திக்காமல் இருப்பது இலக்கிய வாதிகளின் கவலைக்குரிய ஒன்றாக மாறியுள்ளது.
அது போலவே பெரும்பாண்மைக் கட்சியில் அங்கம் வகிக்கின்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களால் கிழக்கிலங்கை முஸ்லிம்களின் வாழ்வியல் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கின்ற வகையில் காத்தான்குடியில் ஒரு இஸ்லாமிய அருங்காட்சியகத்தை நிறுவ முடியுமாக இருந்தால், ஒட்டு மொத்த இலங்கை முஸ்லிம்களின் வாழ்வியல் கலாச்சாரத்தை, எதிர்கால முஸ்லிம் சந்ததியும், ஏனைய மதத்தவர்களும் அறியும் வண்ணம் தலை நகரில் ஓர் இஸ்லாமிய அருங்காட்சியகத்தை நிறுவுவது பறற்p சிந்திக்காமல் விட்டிருப்பது ஏன்? என்று புரியாததாகவே உள்ளது.

இது தவிர 1966.07.12ம் திகதி மருதமுனையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட சர்வதேச இஸ்.தமி.இல. மாநாடு ஆண்டு தோறும் இந்தியா, மலேசியா என பல்வேறு நாடுகளிலும் நடைபெற்று வருவது அனைவரும் அறிந்த விடயம். இது மு.கா தலைவர் றவூப் கக்கீம் அவர்கள் அறியாத ஒன்றல்ல. இதனை அண்மைக் காலமாக இலங்கையில் நடாத்த வேண்டும் என்ற ஆவலும், ஆர்வமும் இலங்கை வாழ் இஸ்லாமிய தமிழ் இலக்கிய வாதிகளிடம் குடிகொண்டிருந்தது. இது பெரும் பொருளாதார, மற்றும் பௌPக தேவைகளைக் கொண்டதான ஓர் பணியாக இருப்பதால், இதற்கு முக்கியமாக ஒரு அரசியல் கட்சியின் அணுசரணையும் பின்புலமும் தவிர்க்க முடியாத ஒன்றாகும். எனவே இதற்கான தேவையின் அவசியத்தை முஸ்லிம் காங்கிரசின் தலைமைத்துவமும் உணர்திருந்தது. எனினும், அதை வெற்றிகரமாக செய்து முடிக்கின்ற ஆற்றலும், ஆளுமையும் அதன் தலைமைத்துவத்திடம் இல்லை என்றே முடிவு செய்ய வேண்டியுள்ளது. ஏனெனில் ஓரிரு வருடங்களுக்கு முன் இதனை நடத்த முஸ்லிம் காங்கிரஸ் குழுக்கள் அமைத்து முயற்சிகள் மேற்கொண்டது இரகசியமான ஒன்றல்ல எனினும் அம்முயற்சி நிறைவேறவில்லை.

இப்போது அ.இ.ம.கா தலைவர் அமைச்சர் அல்-ஹாஜ் ரிஷாட் பதியுதீன் அவர்களின் பின்புலத்தோடு இவ்வருடம் டிசம்பர் மாதம் இம்மாநாடு கொழும்பில் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதை வெற்றிகரமாக நடாத்திமுடிக்க இ.இ.த.இ. வாதிகள் சுறுசுறுப்பாக இயங்கியும் வருகின்றனர் இதில் கிழக்கிலங்கையைச் சேர்ந்த பலர் பாராட்டப்படுவதோடு, பல எழுத்தாளர்களின் ஆக்கங்களும், அரங்கேற்றப்படவுள்ளன.

இதனை, கிழக்கிலங்கை இலக்கிய வாதிகளின் மத்தியில் தனக்குள்ள செல்வாக்கும், வாக்குப் பலமும் சீர்குலைந்து விடுமோ என்ற பீதி தலைவர் றவூப் ஹக்கீமிடம் ஒட்டிக் கொண்டது எனவே, தனது செல்வாக்கை மீள நிலை நாட்டிக் கொள்ளும் மாற்று வழிவகைகள் பற்றி அவர் சிந்ததன் விளைவாக, அம்பாரை மாவட்டத்தில் தானும் ஒரு மாநாட்டை நடாத்த வேண்டும் என முடிவு செய்து அதற்கான பொறுப்புகளை தன்னுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் இலக்கிய வாதிகளிடம் ஒப்படைத்துள்ளார்.

2011ல் நடாத்தப்பட்டிருக்க வேண்டிய மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரியின் பொன்விழா இன்று வரை நடாத்தப்படவில்லை இதுகாலவரை இது பற்றி சிந்திக்காத இவர்களின் மூளையில் இப்போது பொன்விழா நினைவு தோற்றம் பெற்றுள்ளது. எனவே மருதமுனை அல்-மனாரின் பொன்விழா நிகழ்வாக இந்த மாதமே ஒரு மாநாட்டை மருதமுனையில் நடாத்த மு.கா. முயற்சிகள் மேற்கொண்டுள்ளது. அதன் இன்னும் ஒரு அங்கத்தை அக்கரைப்பற்றிலும் நடத்துவதாக அறிய முடிகின்றது.
அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்கள் கிழக்கிலங்கையில் தனது கட்சியை நிலை பெறச் செய்ய முயற்சிகள் எடுத்தன் பின் மு.கா கிழக்கிலங்கையில் முன்னைவிடவும் முனைப்போடு செயற்படத் தொடங்கியுள்ளதாக பலரும் பேசிக் கொள்ளும் இந்த சந்தர்ப்பத்தில் அதன் இன்னுமொரு வடிவமாகவே மருதமுனை இஸ்லாமிய இலக்கிய மாநாட்டை பார்க்க வேண்டியுள்ளது.

அடுத்தடுத்த மாதாங்களில் பிரதான இரண்டு முஸ்லிம் அரசியல் கட்சிகளும் இரண்டு வௌ;வேறு இஸ்லா, இலக், மாநாட்டை நடாத்துவதானது, முஸ்லிம்களிடம் எதிலுமே ஒற்றுமை கிடையாது என்பதை முழு உலகுக்கும் பறைசாற்ற ஏதுவாகிவிடும்.

இந்தக் குற்றச் சாட்டுக்கு மு.கா. தலைமைத்துவம் வழிவகுப்பது வேதனைக்குரியது. எனவே, அவ்வாறு நடாத்தப்பட வேண்டுமானால் அவசர அவசரமாக நடாத்தாமல், கொழும்பில் சர்வதேச இ.இ. மாநாடு முடிந்தபிறகு அடுத்த வருடம் மருதமுனை மாநாட்டை நடாத்துவதே சிறப்பு.

அட்டாளைச் சேனையில் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள் தேசிய மீலாத் விழாவை நடாத்த முடிவெடுத்தவுடன், அவ்வூர் பாடசாலையை தேசிய பாடசாiயாக தரமுயர்த்தியதோடு, பாரிய அபிவிருத்தியையும், அப்பாடசாலையில் செய்து முடிந்தார். மாநாட்டின் நிறைவில் அவரால் எழுப்பப்பட்ட நினைவுத் தூபி இன்னும் அங்குள்ளது.

அது போலவே மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரி பல்வேறு அபிவிருத்தித் தேவைகளை தன்னகத்தே கொண்டுள்ளது யாவரும் அறிந்ததே, 2016.11.10ந் திகதி கல்லூரியில் நடாத்த மாநாட்டுக்கான முன்னோடிக் கருத்தரங்கில் கல்லூரி நிர்வாகம் சில அடிப்படைத் தேவைகளையேனும் பூர்த்தி செய்து விட்டு மாநாட்டை நடாத்துமாறு கேட்டுக் கொண்டதாக அறிய முடிகின்றது.

எனவே, அவசியமாக தேவைப்பட்ட கல்லூரியின் தேவைகளை நிறைவு செய்யாமல், யாரோ கட்டிய (சித்தீக் நதீர் வேட்பாளர் அ.இ.ம.க) கட்டிடத்தில் மாநாட்டை நடத்த முற்படுவது ஆரோக்கியமான விடயமல்ல என்பதை சுட்டிக் காட்ட விரும்புகின்றேன்.

எம்.ஏ. சம்சுல் அமான், மருதமுனை.