சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவை இராணுவ புலனாய்வு பிரிவைச் சேர்ந்தவர்களே கொலை செய்துள்ளனர் என குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
லசந்த விக்ரமதுங்க படுகொலை தொடர்பிலான வழக்கு விசாரணைகள் இன்று கல்கிசை பிரதான நீதிவான் மொஹம்மட் சஹாப்தீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது.
இதன் போது பிரதான சந்தேகநபரான இராணுவ புலனாய்வுப் பிரிவின் சார்ஜன்ட் மேஜர் உடலாகமவும் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார்.
இந்நிலையில், லசந்தவின் படுகொலை தொடர்பில் இதுவரை முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணை தொடர்பில் நீதிமன்றுக்கு விளக்கமளித்த பொலிஸ் பரிசோதகர் நிஸாந்த சில்வா,
லசந்த விக்ரமதுங்கவை படுகொலைச் செய்தவர்கள் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் உறுப்பினர்களே என்பது தொடர்பில் பல்வேறு தகவல்கள் ஊடாக அம்பலப்படுத்தப்பட்டுள்ளன.
இது தொடர்பிலான தொடர் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் இதுவரை 200 வரையிலான இராணுவ புலனாய்வாளர்களின் கைவிரல் அடையாளங்களை நாம் சேகரித்துள்ளோம்.
மேலும், லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் அவர் பயணித்ததாக நம்பப்படும் காரில் இருந்து கொலையாளியினுடையது என சந்தேகிக்கும் கைவிரல் ரேகைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்நிலையில் கை ரேகையுடன் ஒப்பீடு செய்து பார்க்கவே இவர்களின் கைவிரல் ரேகைகள் சேகரிக்கப்பட்டுள்ளன. அத்துடன் இக்கொலைக்கு 5 தொலை பேசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இதன் சிம் அட்டைகள் பிச்சன் ஜேசுதாசன் எனும் தமிழரின் அடையாள அட்டையை அவருக்கு தெரியாமல் பெற்று அதன் ஊடாக பெற்றுக் கொள்ளப்பட்டவையாகும்.
இக்கொலை விவகாரத்தில் ஏற்கனவே கைதாகி விடுதலையாகிய கந்தவங்ச பியவன்சவினாலேயே இந்த சிம் அட்டைகள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் விசாரணைகள் தொடர்கின்றன என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.