”அதிபராக பதவியேற்ற முதல் நாளிலேயே, பசிபிக் பெருங்கடல் நாடுகளின் வர்த்தக ஒப்பந்தத்தில் இருந்து வெளியேற நடவடிக்கை எடுப்பேன்,” என, அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்க உள்ள டொனால்டு டிரம்ப், அதிரடியாக அறிவித்துள்ளார்.
அமெரிக்காவில், சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில், குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்ட, டொனால்டு டிரம்ப், 70, வெற்றி பெற்றார். 2017 ஜனவரியில் பதவி ஏற்க உள்ள அவர், தன் செயல் திட்டங்களை நேற்று அறிவித்தார். அவர் கூறியுள்ளதாவது: பசிபிக் பெருங்கடல் நாடுகளிடையேயான வர்த்தக ஒப்பந்தம், அமெரிக்க பொருளாதாரத்திற்கு பெரும் சுமை; அது, கைவிடப்படும்.
அதிபராக பதவியேற்கும் முதல் நாளிலேயே, இதற்கான உத்தரவை பிறப்பிப்பேன். அமெரிக்காவின் உள்நாட்டு தொழில், உற்பத்தியை பெருக்குவதே என் திட்டம். அமெரிக்காவில், சட்ட விரோதமாக குடியேறியுள்ள வெளிநாட்டு தொழிலாளர்கள் குறித்த, தகவல்களை உடனடியாக திரட்டும்படி, தொழிலாளர் நலத்துறைக்கு உத்தரவிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.