மாகாண சபைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை பகுதி பகுதியாக வழங்கி வைக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை!

இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் மாகாண சபைகளுக்கு நிதி ஒதுக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் ஜனாதிபதியுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளதாக, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். 
sarath
இன்று பகல் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் அனைத்து மாகாண முதலமைச்சர்களும், நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவும் கலந்து கொண்டதாக தெரியவந்துள்ளது. 

இதேவேளை, 2016ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட பூரண நிதியும் இதுவரை உள்ளூராட்சி மன்றங்களுக்கு கிடைக்கப் பெறாமை குறித்து இந்த சந்திப்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. 

தற்போது மாகாண சபைகளில் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக ஒப்பந்தகாரர்களுக்கு சம்பளம் வழங்க மாகாண சபைகளில் நிதி இல்லை எனவும் மாகாண முதலமைச்சர்கள் இதன்போது கூறியுள்ளார். 

கடந்த வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதி கிடைக்கப் பெறாவிடினும், இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியில் ஒரு பகுதியை இந்த நடவடிக்கைகளுக்காக பயன்படுத்த முடியும் எனவும், அவர்கள் குறிப்பிட்டுள்ளார். 

எனினும் அடுத்த வருடத்திற்காக மாகாண சபைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி போதுமானதாக இல்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 

இதேவேளை, இவ் வருடத்திற்காக கடந்த வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியை டிசம்பர் மாதம் 10ம் திகதிக்கு முன்னர் பகுதி பகுதியாக வழங்கி வைக்குமாறு, ஜனாதிபதியால் விடுக்கப்பட்ட பணிப்புரைக்கு, நிதி அமைச்சர் இதன்போது இணக்கம் தெரிவித்துள்ளார். 

அத்துடன், இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் மாகாண சபைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி குறைக்கப்பட்டமை தொடர்பில் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவால் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. 

இம்முறை நிதி நிலையை கருத்தில் கொண்டு மாகாண சபைகளுக்கு மட்டுமல்ல அமைச்சுக்களுக்கும் குறைந்தளவு நிதியே வழங்கப்பட்டுள்ளதாக அவர் இதன்போது கூறியுள்ளார். 

எதுஎவ்வாறு இருப்பினும், அடுத்த வருடம் நாட்டுக்கு நிதி உதவிகள் கிடைக்கப் பெரும் என எதிர்பார்ப்பதாகவும், அவ்வாறு கிடைப்பின் அதனை மாகாண சபைகளுக்கு வீத அடிப்படையில் வழங்க அடுத்த வருட நடுப்பகுதியில் நடவடிக்கை எடுப்பதாகவும் ரவி கருணாநாயக்க மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.