மோடியை எதிர் கொள்ள ராகுலே போதும் :காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தி

காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தி நேற்று தனியார் தொலைக் காட்சிக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

sonia-gandhi

 

அரசியலில் ஒருவர் ஜெயிப்பார் அல்லது தோற்பார். ஜனநாயகத்தில் அது சகஜமானது. தற்போதைய அரசியல் சூழ்நிலையை காங்கிரஸ் கட்சி எதிர் கொண்டுள்ளது.

தற்போது பாராளுமன்றத்தில் காங்கிரசுக்கு 44 இடங்களே உள்ளன. ஆனால் அடுத்த பொதுத் தேர்தலில் ஆட்சியைப்பிடிக்கும் அளவுக்கு காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை இடங்களில் வெற்றி கிடைக்கும். அடுத்த தேர்தலில் காங்கிரசுக்கு தனி பெரும்பான்மை பலம் கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

இந்திராகாந்தியையும் நரேந்திர மோடியையும் ஒப்பிட முடியாது. இந்த கருத்தில் நான் மிகவும் தெளிவாக இருக்கிறேன். மோடியை எதிர்க்க காங்கிரசில் வலுவான தலைவர் இல்லை என்பதை நான் ஏற்க மாட்டேன்.

மோடியை எதிர் கொள்ள ராகுலே போதும். ஆனால் ராகுலின் எதிர்கால அரசியல் பற்றி நான் மட்டுமே தீர்மானிக்க முடியாது. அதற்கு பதில் அளிக்க நான் சரியான நபர் அல்ல.

இந்திராகாந்தி இந்த நாட்டுக்காக செய்துள்ள தியாகங்கள் ஏராளம். எங்கள் குடும்பத்தில் அவர் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு வகையில் ஈர்த்துள்ளார்.

ராகுலுக்கும், பிரியங்காவுக்கும் இந்திராகாந்தி மீது மாறுபட்ட கருத்துகள் உண்டு. விரைவில் நான் சுயசரிதை எழுத திட்டமிட்டுள்ளேன். அதில் இது பற்றியெல்லாம் விரிவாக எழுதி இருக்கிறேன்.

எனது குடும்பம் பரம்பரை பரம்பரையாக அரசியலில் உள்ளது. டாக்டர் மகன் டாக்டர் ஆவது போல, ஆசிரியர் மகன் அல்லது மகள் ஆசிரியர் ஆவது போல என் மகன் அரசியலில் உள்ளார்.

நான் ராஜீவை திருமணம் செய்து இந்தியா வந்தபோது இந்திரா என்னை அரவணைத்து வழிநடத்தினார். அப்போது எனக்கு ஆங்கிலம் கூட தெரியாது.

இந்திராகாந்தி பார்ப்பதற்கும் பழகுவதற்கும் மிகவும் வித்தியாசமானவர். அவர் என்னை புரிந்து கொண்டு எனக்கு வழிகாட்டினார். உண்மையில் அவரை இழந்து தவிக்கிறேன்.

இவ்வாறு சோனியா கூறினார்.