‘தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க, சட்டசபையின் சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும்’ என, சட்டசபை எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில், தென்மேற்கு பருவமழை, 40 சதவீதம் பெய்தது; வடகிழக்குப் பருவ மழை எதிர்பார்த்தபடி பெய்யவில்லை. அனைத்து மாவட்டங்களிலும், வறட்சி தாண்டவமாடுகிறது. தனிநபர் வருமானம் கடுமையாக குறைந்து, அன்றாட செலவுகளுக்கு அவதிப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. சென்னைக்கு குடிநீர் தரும் ஏரிகளில், 1 டி.எம்.சி., தண்ணீர் கூட இல்லை.பருவ மழை பாதிப்பு, விவசாயிகள் நலன், விவசாயிகள் தற்கொலை மற்றும் குடிநீர் பிரச்னையை கருத்தில் கொண்டு, மத்திய அரசு, குழு ஒன்றை தமிழகத்திற்கு அனுப்பி, வறட்சி பகுதிகளை பார்வையிட வேண்டும். தமிழகத்தை, வறட்சி மாநிலமாக அறிவிக்க, சட்டசபையின் சிறப்பு கூட்டத்தை கூட்டி, தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.