கல்முனை கரையோர மாவட்டத்தின் அவசியம்!!

collage_fotor-5

நிக்கவரட்டிய, சிலாபம், கல்முனை, முல்லைத்தீவு, கிழிநொச்சி மாவட்டங்கள் புதிதாக உருவாக வேண்டும் என்று மொறகொட கொமிஸன் சிபாரிசு செய்தது. அதற்கமைய முல்லைத்தீவு மாவட்டம் யாழ்பாண மாவட்டத்தில் இருந்து 1978ம் ஆண்டு உருவாக்கப்பட்டது பின்னர் கிழிநொச்சி மாவட்டம் யாழ்பாண மாவட்டத்தில் இருந்து 1984ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. ஆனால் ஏனைய மாவட்டங்கள் பல்வேறு அரசியல் காரணங்களினால் உருவாக்கப்படவில்லை. துரதிஷ;ட வசமாக ஜ.தே.க ஆட்சியில் சக்திவாய்ந்த மாவட்ட அமைச்சர்களாக பீ. தயாரத்ன அம்பாரைக்கும்  ஏ.ஆர். மன்சூர் முல்லைத்தீவுக்கும்; நியமிக்கப்பட்டனர். இந்நிகழ்வானது கல்முனை கரையோர மாவட்டம் உருவாகாமைக்குரிய வலுவான காரணங்களில் ஒன்றாகும். மொறகொட கொமிஸன் சிபாரிசுக்கு மேலதிகமாக 1963ம் ஆண்டுக்கு முன்பிருந்த மட்டக்களப்பு மாவட்டத்துக்கு அம்மாவட்ட தென்பகுதி மக்களின் நிர்வாக சேவையை இலகுபடுத்தும் முகமாக மேலதிக அரச அதிபராக ஏ.எம்.ஏ. அஸிஸை நியமித்து கல்முனையில் அவருக்கான காரியாலையமும் திறக்கப்பட்டது வரலாறு. அன்றய மட்டக்களப்பு மாவட்டத்தின் தென்பகுதி எல்லைதான் கல்முனை கரையோர மாவட்டமாக உருவாகியிருக்க வேண்டும், ஆனால் ஆட்சியாளர்களின் நிகழ்சி நிரலுக்கமைய எமது திரானியற்ற மக்கள் பிரதிநிதிகளின் உதவியுடன் கல்முனை கரையோர மாவட்டத்திற்குப் பதிலாக பரந்துபட்ட அம்பாரை மாவட்டம் கல்லோயா காரியாலயத்தில் அவசர அவசரமாக உருவாக்கப்பட்டது ஒரு வரலாற்று துரோகமாகும்.

கல்முனை கரையோர மாவட்டதை சிதைக்கும் அடுத்த நிகழ்வுதான் 1986ம் ஆண்டு புதிய பிரதேச சபை சட்டத்துக்கமைய பிரதேச சபைகளுக்கான எல்லை நிர்ணயத்தில் ஏற்பட்ட குளறுபடிகள். அதில் கூடுதலாக பாதிக்கப்பட்டவர்கள் முஸ்லிம்கள். ஒரு புதிய பிரதேச சபை உருவாக்கப்பட வேண்டுமென்றால் அரச வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டு மக்களின் ஆலோசனை பெறப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். ஆனால் அமைச்சர் தேவநாயகம்;, ரங்கநாயகி பத்மநாதன் மற்றும் ஆட்சியாளர்கள் ஆகியோரின் தேவைக்கேற்ப அப்பிரதேச மக்களின் தேசிய இனத்துக்கான கோட்பாடுகளுக்கு மதிப்பளிக்காமல் புதிய எல்லைகள் வரையப்பட்டது. இதன் விளைவுதான் அக்கரைப்பத்து காணிகள் திருக்கோவில் எல்லைக்குள்ளும்,  பொத்துவில் காணிகள் லவுகல பாணம எல்லைக்குள்ளும், இறக்காமம் காணிகள் தமனை எல்லைக்குள்ளும், சம்மாந்துறை காணிகள் அம்பாரை கொண்டவட்டுவான்  எல்லைக்குள்ளும் மாற்றப்பட்டது. இம்மாற்றத்திற்கு முன்னர் கொண்டவட்டுவான் வட்டாரத்துக்கான கிராம உத்தியோகத்தராக இருந்தவர் சம்மாந்துறை பா.உ. முகைதீனின் சகோதரர் கபூர் ஆவார் மற்றும் தற்போதைய  பா.உ. மன்சூரின் தாயார் பிறந்ததும் கொண்டவட்டுவான் வட்டாரத்திலாகும். இவ்வாறாக திட்டமிட்டு புதிய அம்பாரை மாவட்டம் உருவாக்கப்பட்ட போதும் புதிய பிரதேச எல்லைகள் உருவாக்கப்பட்ட போதும்  முஸ்லிம் தேசியத்தின் எல்லைகள் சிதைக்கப்பட்டது. இவ்விரு காலகட்டங்களிலும் மக்கள் பிரதிநிதிகளாக இருந்த எம்மவர்களே இதற்கான முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும்.

மு.கா. ஆரம்பிக்கப்பட்ட பிரதானமான நோக்கங்களில் ஒன்றுதான் மேற்கூறப்பட்ட விடயம். தலைவர் அஷ;றபின் ஒவ்வொரு மேடைப்பேச்சிலும் இவ்விடையத்தை வலியுறித்தியுள்ளார். அத்துடன் அபிவிருத்தி தரமாட்டோம், தொழில் தரமாட்டோம் ஆனால் உங்களின் உரிமைக் குரலாக இருப்போம் என்று முஸ்லிம் தேசியத்தை வழிநடத்தினார். அவரின் கோட்பாடுகளுக்கு மதிபளித்து முஸ்லிம்களின் ஏக பிரதிநிதியாக அவரின் மறைவு வரை சிறப்பாக வழிநடத்தினார் என்றால் மிகையாகாது. இன்றுவரை அதனை ஈடுசெய்ய முடியாத சமுகமாகவே முஸ்லிம் சமுகம் உள்ளது. அவர் பாசறையில் வளந்தவர்கள் இன்று பலகட்சிகளாகப் பிரிந்து சமுகக் குரலாக அன்று தங்களுக்கான குரலாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

அம்பாரை மாவட்டத்தில் தீர்க்கப்படாமல் தொடர்ச்சியாக சீண்டப்படும் பிரச்சினைகளில் ஒன்று விவசாயிகளின் காணிப்பிரச்சினை. 2013 ம் ஆண்டு சியம்பலாந்து வீதியில் அமைந்துள்ள பொத்துவில் கிராமத்தின் எல்லைக்கான பொயர்பலகை உரிய இடத்தில் இருந்து அகற்றப்பட்டு அரச அனுமதியின்றி கிராமத்தின் குடியிருப்பு பகுதிக்குள் செங்காமத்தில் நடப்பட்டது. போத்துவில் கிராமம் இவ்வாறே சிறுகச்சிறுக அழிக்கப்பட்டு அத்திப்பட்டு கிராமத்தின் நிலைக்கு வந்துவிடும். ஜனக்க பண்டார தென்னக்கோண் அமைச்சரின் காலத்தில் அவரின் மேலதிகச் செயலாளர் பொரலஸ்சின் தலைமையில் ஒரு குழுவை பொத்துவிலுக்கு அனுப்பி அங்குள்ள காணிபிரச்சினைகளை ஆராய்ந்து வருமாறு அனுப்பினார். அவருடைய விஜயத்தின் முடிவில் வெளியிட்ட கருத்துத்தான் இங்குள்ள காணிகளின் அனுமதிப்பத்திரம் முறையற்ற முறையில் ஜ. அன்சார் என்ற அதிகாரியினால் நசீர் பிரதேச செயலகருக்குப் பதிலாக கையப்பமிடப்பட்டு வளங்கப்பட்டது என்பதாகும். அதாவது பழய புதிய காணி அனுமதிப்பத்திரங்களிலும் இவரின் ஒப்பமே உள்ளது எனவே இங்கு ஒரு பெரியளவிலான முறைகேடு நடைபெறுகின்றது என்பதாகும். இவ்விடயம் ஹஸன் அலிக்கு கொண்டுவரப்பட்டதும் உடனடியாக பொத்துவிர் பிரதேச செயலகத்துக்குச் சென்று செயளாலருடன் இதுவிடயமாக எடுத்துரைத்தார். சுனாமியின் பின் கிழக்கு மாகான சபையில் எடுத்த தீர்மானத்தின்படி பழய புதிய காணிகளை தற்போதுள்ள உறுதிக் கொப்பியுடன் ஒப்பிட்டு உறுதிப்படுத்தி காணி சொந்தக்காரர்கள் எல்லோருக்கும் வளங்குவதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிதான் ஜ. அன்சார். அவரின் ஒப்பந்தத்துடனான கொப்பிதான் சகல அரச நிறுவனங்களும் வைத்துள்ளது. எனவே இது ஒரு சட்டவிரோதமான செயலல்ல என்றார். இதற்கான ஆதாரங்களுடன் ஹஸன் அலி மீண்டும் ஜனக்க பண்டார தென்னக்கோணை அமைச்சில் சந்தித்து நடந்தவற்றை தெளிவுபடுத்தினார். நடந்தவற்றுக்கு மன்னிப்பு கேட்டு தனது அதிகாரிகளுக்கு எச்சரித்தார். அன்று அவர் சொன்ன விடயம்தான் இன்று இந்த நாட்டில் உள்ள பிரச்சினையே இதுதான். உங்கள் பிரதேசத்தில் அநியாயம் நடைபெறுகின்றது ஆனால் அதை தீர்கும் மனோநிலையில் அதிகாரிகள் இல்லை என்று தனது மனவேதனையை தெரிவித்தார். இதுதான் கிழக்கு வடக்கு மக்களின் பிரச்சினையை தீர்பதில் உள்ள உண்மை நிலை.

2007 ம் ஆண்டு கரங்கோவா காணி பிரச்சினையை முண்வைத்துத்தான் முஸ்லிம் காங்கிரஸ் அரசை விட்டு வெளியேறியது. ஆனால் அதே காணிப்பிரச்சினை முடியாமல் எதிர்கட்சியில் தேர்தல் கேட்டு தேர்தலின் பிற்பாடு மீண்டும் ஆட்சியாளர்களுடன் சேர்ந்தது அமைச்சையும் பெற்றுக்கொண்டது. தற்பொழுது இதே காணிக்கு மீண்டும் ஒரு இழுத்தடிப்புக்காக யானை நடைபாதை என்ற ஒரு புதுக்கதை சோடிக்கப்பட்டுள்ளது. ஆனால் விவசாயம் செய்யும் காணிகள் தவிர ஏனைய இடங்களை யானை நடைபாதைக்கு விடுவதென்று 2004 ம் ஆண்டய மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் ஏற்கனவே இதற்கு தீர்வு எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறுதான் அம்பாரை விவசாயிகள் காலம் காலமாக அதிகாரிகளினாலும் மக்கள் பிரதிநிதிகளினாலும் ஏமாற்றப்படுகின்றனர். கரங்கோவா விவசாய கணியின் எல்லை அரச வர்த்தமானியில் மிகத்தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. 196 வது மைல்கல்லில் இருந்துதான் பொத்துவில் லகுகல எல்லை அமைகின்றது. இதிலிருந்து கெகிரான உயர் நீர்மட்ட கரை வரைக்குமான பிரதான வீதிக்கு சமாந்தரமான பிரதேசம் இவ்விவசாயிகளுக்கு உரித்தாகும் என தெளிவாக குறிக்கப்பட்டுள்ளது. தேசியப்பூங்காவுக்காக 192 தொடக்கம் 189 வரையான மைல்கல் பிரதேசங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவே யானை நடைபாதைக்கு உரிய பிரதேசமாகும். கரங்கோவா மக்கள் இவர்களில் நம்பிக்கை இழந்து விவசாயம் செய்ய சென்ற வேளை வனவிலங்கு இலாக்கா தலையிட்டு இருவருக்கெதிராக வழக்கு தாக்கல் செய்து அதன் தீர்ப்பு விவசாயிகளுக்கு சாதகமாக அன்மையில் வழங்கப்பட்டது. இருந்தபோதிலும் அதிகாரிகளின் வேண்டுமென்ற போக்கின் காரணமாக இவ்விவசாயிகளின் பிரச்சினை தீர்ந்தபாடில்லை.

இவ்வாறே பொத்துவில் பள்ளியடி வட்டை, றத்தல் தென் கண்டம், லகுகல, கிரான், கோமாரி, அக்கரைபற்று பறகத்நகர் நீர் விநியோக வாய்கால் கண்டம், நுரைச்சோலை கண்டம், புட்டம்மை கண்ணகிபுரம்;, தோணிக்கல் பொக்குலுவாய் கண்டம், சம்மாந்துரை மல்லிகைத்தீவு கள்ளியம்பத்தை, குரிவிக்காடு, வளத்தாபிட்டி கரங்கா வட்டை, வளத்தாபிட்டி கரங்கா மேற்கு, அட்டாளச்சேனை வெள்ளக்கள் தோட்டம், இறக்காமம் குடிவில் வடப்பத்து வெளி கண்டம் போன்ற 3822 ஏக்கர் விவசாய காணிகளின் பிரச்சினை இன்னும் தொடர்கதையாகவே உள்ளது. இவ்வாறான நடவடிக்கை வழையடி வாளையாக தொடர்வதற்கு காரணம் காணி அமைச்சின் ஆளுமைக்குட்பட்ட தினைக்களகங்கள், வனவிலங்கு இலாகா, நீர்பாசன இலாகா, தொள்பொருள் ஆராச்சி இலாகா, சீனித்தொழிற்சாலை, ஓட்டுத்தொழிற்சாலை, பாதுகாப்புப்பிரிவு போன்ற அதிகாரிகளின் பொறுப்பற்ற போக்கேயாகும். இவை எல்லாவற்றையும் கட்டி ஆளக்கூடிய அம்பாரைக் கச்சேரியின் மெத்தனப் போக்கு இப்பிரச்சினைக்கான கருவாகும்.

அம்பாரை மாவட்டத்தின் பஸ்ஸின்; சாரதியும் நாமே நடத்துனரும் நாமே என்று சொல்லிக்கொண்டு கடந்த 16 வருடங்களாக மக்களின் நலன்களை நிர்வகிக்கும் கச்சேரியை விட்டுவிட்டு இவ்வளவு காலமும் நான்கு சக்கர பஸ்ஸைத்தானா ஓட்டிநோம் என்று அன்மைய சிலைவைப்புக்குப் பின்னர் சிலர் விழித்துள்ளனர். முஸ்லிம் காங்கிரஸ் உருவானதற்கு பிற்பாடு இன்றுவரை இந்தக் கல்முனை கரையோர மாவட்ட கோரிக்கையை ஒவ்வொரு தேர்தல்களிலும் முன்வைத்து வந்துள்ளது. 8.6.1996 யில் சஉமிய முர்த்தி தொண்டமானும் அஷ;ரபும் கூட்டாக ஜனாதிபதி டி.பீ. விஜயதுங்கவுக்கு அனுப்பிய கடிதத்தில் இவ்விடயம் உள்வாங்கப்பட்டிருந்தது. 20.7.2000 ம் ஆண்டு அஷ;ரப், சந்திருக்கா அம்மையாருக்கு எழுதிய கடிதத்தில் இதுவிடயமாக எட்டப்பட்ட உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார். 10.10.2000 யில் சந்திரிக்கா அம்மையாருடனான ஜநாதிபதி தேர்தல் உடன்பாட்டில் 7வது பந்தியில் இடம்பெற்றுள்ளது. 2001 ம் ஆண்டு ஐ.தே.க யுடனான தேர்தல் ஒப்பந்தத்தில் 20வது பந்தியில் கூறப்பட்டுள்ளது. 20.02.2001 ம் ஆண்டுக்கு முந்தின தேர்தல் ஒப்பந்தம் மீண்டும் ஐ.தே.க யுடன் செய்யப்பட்டதில் 17வது பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 6.1.2005 ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்னதான ஒப்பந்தத்தில் நிர்வாக ஏற்பாடு என்ற தலைப்பில் முதலாவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 5.2.2007 யில் சு.க. யுடனான தேர்தல் ஒப்பந்தத்திலும் முதலாவதாக நிர்வாக ஏற்பாடு என்ற தலைப்பில் உள்வாங்கப்பட்டது. 18.9.2012 யில் கிழக்கு மாகாண சபை தேர்தலில் ஆட்சி அமைப்பதற்காக செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் இவ்விடையம் இரண்டாவதாக உள்வாங்கப்பட்டது. இதுதவிர அஷ;ரப் நீலன் திருச்செல்வம் மற்றும் எம் சிவசிதம்பரம் ஆகியோருடனான பேச்சுவார்த்தையிலிலும் கரையோர மாவட்டக்கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு வரலாற்றில் பல தரப்புக்களினாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு நிருவாக அலகு உருவாக்கப்படாமைக்கு அன்மைய சிலவைப்பு பின்னனிக்கும் முஸ்லிம் காங்கிறஸ் ஒப்பந்தமின்றி ஐ.தே.க யுடன் தேர்தல் கேட்டு மாவட்ட இணைத் தலைமைப் பொறுப்பில் பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்வதற்கும் மிக நெருக்கமான தொடர்புள்ளதையே எடுத்துக்காட்டுகின்றது.

அம்பாரை மாவட்டத்தில் மொழிரீதியாக அரச நிறுவனங்கள் ஏனைய மாவட்டங்களில் இல்லாத பாரபட்ச கோட்பாட்டுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதற்கு சிறந்த உதாரணம் தான் கல்முனை கல்வி வலயத்தில் உள்ள ஒரே ஒரு சிங்கள மொழி பாடசாலை அம்பாரை கல்வி வலயத்தினால் இன்னும் நிர்வகிக்கப்படுகின்றது. இதேபோன்றே மொழி ரீதியாக இரு சுகாதார நிருவாக எல்லைகள் அம்பாரை மாவட்டத்துக்குள் செயல்படுகின்றது. அதுமாத்திரமன்றி அண்மைக்காலமாக தமிழ் பேசும் மக்களின் பிரதேசத்தில் இருக்கும் அரச நிறுவனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக திட்டமிட்ட ரீதியில் மாற்றப்படுகின்றது. இவ்வாறு மொழிரீதியாக பாகுபாடு காட்டும் அரசு தமிழ் பேசும் மக்;களின் நிர்வாக அலகை பெற்றுத்தரும் என்ற நம்பிக்கையும் குறைவடைந்து கொண்டே செல்கின்றது. ஒரு அரசு வெற்றியடைய வேண்டுமானால் அம்மக்களின் தேவைகளை இலகுபடுத்துமுகமாக அதிகாரப்பரவலாக்கலை மேற்கொள்ள வேண்டும்.

இன்று அம்பாரையில் ஏற்பட்டுள்ள இந்நிலைமைக்கான முழுப்பொறுப்பையும் கரைபோர மாவட்டத்தை பேரம்பேசித் திரியும் 16 வருடங்களாக அம்பாரையின் ஓட்டுனராக உள்ள முஸ்லிம் காங்கிரசே பொறுப்பேற்க வேண்டும். கரையோர வாழ் தமிழ் பேசும் மக்கள் இனியும் தாமதிக்காமல் செயல்பட வேண்டும். ஏற்கெனவே சிபாரிசு செய்யப்பட்ட கல்முனை, சம்மாந்துறை, பொத்துவில் தோர்தல் தொகுதிகளை உள்ளடக்கிய கரையோர மாவட்டத்தை தமது நிருவாக வசதி கருதி பெறுவதற்கு தமிழ் பேசும் இரு சமூகமும் ஒன்றுபட்டு குரல்கொடுப்பது காலத்தின் தேவையாகும்.

எச். ஏ. அலிஃப் சப்றி