ஐ.பி.எல். போட்டியில் நேர்த்தியாக விளையாடும் அணிகளில் முதன்மையானது சென்னை சூப்பர் கிங்ஸ். தோனி தலைமையிலான இந்த அணி 2 முறை (2010, 2011) கிண்ணத்தை வென்றுள்ளது. 3 முறை 2ஆவது இடத்தை பிடித்தது. இதுவரை நடந்த அனைத்து ஐ.பி.எல். போட்டியிலும் அரை இறுதி மற்றும் ‘பிளே ஓவ்சுற்றுக்கு நுழைந்த ஒரே அணியாகும்.
இந்த தொடரில் ஆரம்பத்திலிருந்தே சென்னை அணி சிறப்பாக விளையாடி வருகிறது. 9 ஆட்டங்களில் வெற்றி பெற்றது. 5 போட்டிகளில் தோல்வியை தழுவியது. ராஜஸ்தான் கொல்கத்தா, ஹைதராபாத், மும்பை, டெல்லி அணிகளிடம் தோற்றது.
துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சில் சமபலத்துடன் திகழ்கிறது. புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்ததன் மூலம் இறுதிப்போட்டியில் நுழைய 2 முறை வாய்ப்பு இருக்கிறது.
ரோஹித்சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி தொடக்கத்தில் 4 ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோற்றது. அதில் இருந்து மீண்டு தொடர்ச்சியாக 5 போட்டிகளில் வெற்றி பெற்றது. கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் ஐதராபாத்தை வீழ்த்தியதன் மூலம் ‘பிளேஓவ்’ சுற்றுக்கு முன்னேறியது. 2ஆவது இடத்தை பிடித்ததன் மூலம் இறுதிப்போட்டிக்கு நுழைய சென்னையை போல 2 முறை வாய்ப்பு பெற்றுள்ளது.
‘பிளேஓவ்முறை 2011இல் அறிமுகம் செய்யப்பட்டது. சென்னையை போலவே மும்பை அணியும் 5ஆவது முறையாக ‘பிளேஓவ்’ சுற்றுக்கு முன்னேறி உள்ளது. 2011ஆம் ஆண்டு சம்பியனான மும்பை அணி சமபலத்துடன் திகழ்கிறது.
சிறந்த வீரர்களை கொண்ட பெங்களூர் அணி இதுவரை ஐ.பி.எல். கிண்ணத்தை வென்றது இல்லை. 2011ஆம் ஆண்டுக்கு பிறகு தற்போது தான்‘பிளேஓவ்’ சுற்றுக்கு தகுதி பெற்று உள்ளது. 2 முறை இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்த அந்த அணி தற்போது 3ஆவது இடத்தை பிடித்து முன்னேறி உள்ளது. எலிமினேட்டர் ஆட்டத்தில் விளையாடுவதால் தோல்வி அடைந்தால் வெளியேற்றப்படும். சிறந்த துடுப்பாட்ட வரிசையை கொண்ட அணியாகும்.
கடந்த முறை மயிரிழையில் ‘பிளேஓவ்’ வாய்ப்பை இழந்த ராஜஸ்தான் ரோயல்ஸ் இந்த முறை கொல்கத்தாவை வீழ்த்தியதன் மூலம் 4ஆவது இடத்தை பிடித்து அரையிறுதி வாய்ப்பை பெற்றது. அறிமுக ஐ.பி.எல். போட்டியில் சம்பியன் பட்டம் வென்ற அந்த அணி இந்த தொடரில் தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்தியது. தொடர்ச்சியாக 5 ஆட்டங்களில் வெற்றி பெற்றது. பின்னர் சரிவு ஏற்பட்டது. அதன்பிறகு மீண்டது கொல்கத்தாவுக்கு எதிரான கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் அதிரடியாக விளையாடியது. 2ஆவது முறையாக ‘பிளே ஓவ்’ சுற்றில் விளையாடுகிறது.
இறுதிப்போட்டிக்கு முதலில் செல்லும் அணி எது என்பது இன்றையப் போட்டியில் தெரியும். சென்னை மற்றும் மும்பை அணிகள் இன்று மோதுகின்றன.